“தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” – உழைக்கும் மகளீர் அமைப்பு கோரிக்கை !

“தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.” என உழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் கோரியுள்ளார்.

உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மேதின ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக பொருளாதார ரீதியாக முன்னேற வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.மே தினமாகிய இன்றைய தினம் நாம் ஒரு பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம். அதனை தற்போது நிறுத்தி இருக்கின்றோம். எனினும் இன்றைய தினம் ஒரு சிறிய ஒன்றுகூடலை நடத்தினோம்.

அதில் அரசியலில் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீடு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்திலும் வழங்கப்பட வேண்டும். இம்முறை தமிழ் பெண்கள் எவரும் செல்லவில்லை. ஆனால் பெரும்பான்மை கட்சிகளில் பெண்கள் பலர் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்று இருக்கின்றார்கள்.

ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களில் ஒருவரும் நாடாளுமன்றம் செல்லவில்லை என்பது குற்றச்சாட்டாக காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே பெண்கள் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு நாமே நாடாளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

எனவே எம்மை போன்ற பெண்களை நாடாளுமன்ற அனுப்புவதன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எனினும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும முகம் கொடுத்துக் கொண்டு கையேந்தி நிற்கும் நிலை காணப்படுகின்றது.

பலர் கடனாளிகளாக இருக்கின்ற நிலை காணப்படுவதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றதோடு, சமூக மட்டத்தில் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

எனவே அவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் எமது அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

முக்கியமாக தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் , ரெலோ, புளொட். மற்றும் விக்னேஸ்வரன் அனந்தி சசிதரன் போன்ற அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் மேதின தினமாகிய இன்றைய தினம் எமது கோரிக்கையாகும்.

எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் 30 வீத இட ஒதுக்கீட்டை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வழங்க வேண்டும். என்பதுதான் மே தினத்தில் எமது கோரிக்கையாக காணப்படுகின்றது. பல்வேறுபட்ட திறமையான பெண்கள் உள்ளார்கள். அவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்டாயம் வெல்வார்கள் என தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *