இலங்கைத் தமிழர் உரிமைக்காக உயிரை துறக்கிறார்கள் தமிழக தலைவர்களோ பதவியை விடக்கூடத் தயாரில்லை – விஜயகாந்த்

vijayakanth.jpgஇலங் கைப் பிரச்சினையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளால் பயனில்லை என்று தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதாகவும், ஆனால் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதாகவும் கூறி ஒரே நிலையை எடுத்துள்ளன. இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகள் வேறு, பொதுமக்கள் வேறு என்று பிரிக்க முடியாது. இராணுவ நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். பெரிய கட்சிகள் தங்கள் பக்கம் இருக்கின்றன என்பதால் இந்திய அரசு நிம்மதியாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தும் கூட, இந்திய அரசில் பங்கு வகிக்கின்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியும் பதவி விலகத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழரைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக, கடந்த அக்டோபர் 2 ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்ற போது, அதை எதிர்த்து தி.மு.க.சார்பில் மயிலாப்பூரில் கருணாநிதி பொதுக்கூட்டம் நடத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமென்று ஒரு சில கட்சிகள் ஆரம்பித்தபோது, அதற்குப் போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று ஆரம்பித்தது ஒற்றுமை முயற்சியா? தற்போது எம்.ஜி.ஆர்.கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் கருணாநிதிதான், அப்போது போட்டி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். உலகமே தமிழினப் படுகொலை என்று உரத்த குரல் எழுப்புகிற போது, எல்லோரும் தன் தலைமையை ஏற்று ஒன்றுபடுங்கள் என்று சொல்வது மேலும் காலம் கடத்துவதற்கான தந்திரமே தவிர, இனப்படுகொலையைத் தடுக்க உதுவுமா?

கருணாநிதியின் இன்றையப் போக்கு அவரது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பயன்படுமே தவிர, இலங்கையில் தமிழினப் படுகொலைக்குத் துணைபோன வரலாற்றுப் பழியை துடைக்காது. இந்திய அரசு தமிழ் மக்களைப் புறக்கணிக்கிற போது, தமிழ் மக்கள் ஏன் இந்திய அரசைப் புறக்கணிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி, வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களை தமிழ்நாடே புறக்கணிப்பதுதான். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் தங்களது உணர்வைப் பதிவு செய்ய முடியும். தேர்தல் புறக்கணிப்பு இப்போதே அறிவிக்கப்பட்டால், இந்திய அரசு எப்படியும் தமிழர்களின் குறை தீர்க்க கட்டாயம் முன்வரும்.

இலங்கையின் உரிமைகளுக்காக தமிழர்கள் உயிரைத் துறக்கிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் பதவியைக் கூட விடத் தயாராக இல்லை என்ற பழியிலிருந்து மீள இது வழிவகுக்கும். ஆகவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பதவிகளைப் பெரிதாக கருதிவில்லை என்று எடுத்துக் காட்டும் வகையிலும், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வரும் பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம். வெறுமனே அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கிற வேண்டுகோளால் பயனில்லை. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கட்சியினரும், அனைத்துத் தரப்பு மக்களும் ஒருமித்த கருத்தோடு தேர்தலைப் புறக்கணிப்போம் என்று இப்போதே முடிவெடுத்து அறிவிக்க வேண்டியது வரலாற்று கடமையாகும்.

Show More

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    “இங்குள்ளவர்கள் பதவியைக் கூட விடத் தயாராக இல்லை” என்று கேட்பது கூட, அப்படியாவது அதனை தனது கட்சியினர் பெற்றுக் கொள்ள முடியாதா என்று நப்பாசையில் தானே?? பிறகு யார் காதில் பூச் சுற்றுகின்றார். ………………….

    Reply