“வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளீர்கள்.” – நாடாளுமன்றில் க.வி.விக்கினேஸ்வரன் !

“நாம் கேட்டு வரும் சமஷ்டியை தர மறுக்கும் அரசாங்கம் எங்கோ இருக்கும் சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது .”என முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்…

நாங்கள் தொடர்ந்து அரசாங்கங்களிடம் கேட்டு வருவது ஒரே நாட்டினுள் கூட்டு சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும் என்பதே. அதைச் செய்ய விரும்பாமல் எங்கோ இருக்கும் சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது அரசாங்கம். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கின்றார்கள். நாங்கள் கேட்பதெல்லாவற்றையும் மறுத்து விடுகின்றார்கள்.

அண்மையில் ஒரு நாடு ஒரு சட்டம் எனப்பட்டது. அதற்கென்ன நடந்து? முழு நாட்டின் சட்டம் சீனச் சட்டம் என்று தான் அவ்வாறு கூறியிருக்கின்றார்களா? வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளீர்கள். மணலாற்றில் சிங்களப் பெயர் முதன்மை பெறுகின்றது. துறைமுக நகரத்தில் சீன மொழி முதலிடம் பெற்றுள்ளது. சில இடங்களில் சீன மொழி மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணங் கொண்டிருந்த அரசாங்கத்தின் கடிவாளத்தை உச்ச நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளன என்று கூறியுள்ளது. இலங்கைக்குள் ஒரு சீன நகரத்தை உருவாக்க முனைகின்றது அரசாங்கம் என்பதே
அதற்கெதிரான குற்றம். பொறுப்பற்ற கடன் வாங்கலும் தமது மனித உரிமை மீறல்களினால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்பட்டிருப்பதாலும் சீனாவின் அடியில் போய் விழவேண்டி வந்துள்ளது. இந்த வரைபை வர்த்தமானியில் பிரசுரித்த
அதே நாளிலேயே மேலும் ஒரு சீனக் கடன் இந்த அரசாங்கம் பெற்றுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்த நாடு எங்களுக்கும் உரியது. எமது இனம் தனித்துவமான ஒரு இனம் என்பதை வலியுறுத்திக் கொண்டே எமது நாட்டை விற்கவோ ஈடு வைக்கவோ அனுமதி அளிக்க முடியாது. இந்த வரைபு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு நாட்டிற்கிருக்கும் சட்டவாக்க உரிமைகளையும் நீதித் துறையின் ஏகோபித்த உரிமைகளையும் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. மாற்றங்கள் செய்யாவிட்டால் எமது நாட்டினுள் இன்னொரு நாடு பரிணமித்து விடும். ஆகவே உச்ச நீதிமன்றம் கூறிய திருத்தங்களை உள்ளடக்கி ஒரு புதிய வரைபை எமக்கு நல்குங்கள். அதைப் படிக்க போதிய அவகாசம் தாருங்கள். அவசரப்பட்டு
நாளை வாக்கெடுப்பை நடத்தாதீர்கள்.” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *