Friday, August 6, 2021

“இலங்கையின் பின்னடைவுக்கு புத்திசம் பர்ஸ்ட், சின்ஹல ஒன்லி எனும் போலித்தேசியம் தான் காரணம்.முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – மனோ கணேசன் ட்வீட் !

“இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்துப் பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாகத் திருப்பித் தருகின்றோம்.” என  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது ட்விட்டர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ இது பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உங்கள் நண்பர் லக்ஸ்மன் கதிர்காமருக்குக் கூட நீங்கள் பிரதமர் பதவியைத் தர மறுத்தீர்கள். ஜே.வி.பி. மட்டுமே அவருக்குப் பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது. இலங்கை, இயற்கை வளமில்லாத வள – ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்த நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்த நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான இல்லைகளின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம். இப்போது இந்த நாடு – இலங்கைத் தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது எனத் தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்த நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950களில், இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கின்றோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருக்கின்றமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா, வியட்நாம்  ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாகக் கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவைப் பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972இல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்திப் போகின்றது. இது உங்களுக்குத்  தெரியுமா?

இன முரண்பாடுகள், போர், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள்,  பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டுச்  செலவாணிப் பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகின்றேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலித் தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – என்றுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *