Monday, June 21, 2021

பயணத்தடை நாட்களிலும் 2000க்கு குறையாத தொற்றாளர்கள் – 2இலட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று – ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை ?

கொரோனா பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை. 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதற்கே அரசு நாட்டை முழுமையாக பல மாதங்கள் முடக்கியது. ஆனால் நாளாக நாளாக அது தொடர்பாக கவனம் செலுத்தப்படாமலேயே போய்விட்டது.

50,000 தொற்றாளர்களை அண்மித்த போதே இலங்கை மருத்துவ சங்கத்தின் அதிகாரிகள் பலரும் 14 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமுல்படுத்துமாறு வேண்டிய போதும் கூட பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசு முடக்க பின்வாங்கியது.

ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 600 ஆக பதிவாகி வந்த தொகை ஒரு கட்டத்துடன் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. பின்பு நாளொன்றுக்கு 1000 தொற்றாளர்களும் அதனை தொடர்ந்து 2000 , 3000 என தொற்றாளர்கள் அதிகரித்துக்கொண்டே சென்றனர்.

May be an image of motorcycle, road and street

இந்த கட்டத்தில் கூட அரசு சுதாகரித்துக்கொண்டதாக தெரியவில்லை. பயணத்தடை அமுலில் இருப்பதாக கூறுப்படுகிறதே தவிர அது முழுமையான நடைமுறையில் என்பதே உண்மை. இங்கு காட்டப்பட்டுள்ள இந்தப்படம்  வெள்ளவத்தையில் எடுக்கப்பட்ட படமாகும். நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் இது போன்ற பல படங்களை காண முடிந்தது. இவ்வளவுக்கு அலட்சியமாக தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது இலங்கையின்  இந்த பயணத்தடை.

 

இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணி வரை 2,280 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இன்று மாலையுடன் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 1,656 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பயணத்தடை விதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களை அண்மிக்கின்ற நிலையில் கூட தொற்றாளர்களின் தொகை 2000க்கு குறைந்தபாடில்லை. அப்படியானால் ஏன்..? எதற்காக ..? யாருக்காக..? இந்த பயணத்தடை என்ற வினா எழுகின்றது.

எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதை போலவே கொரோனா கட்டுப்படுத்தல் என்ற விடயத்தில் அரசு தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். பாராளுமன்ற தேர்தலை அண்மித்த காலம் வரை அவ்வளவு கட்டுப்பாடாக கொரோனா தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இன்று எல்லா விடயங்களும் கண்துடைப்பாக மாறிப்போயுள்ளது. இந்த பயணத்தடை கூட கண்கெட்ட பிரகான சூரியநமஸ்காரம் போன்றதே.

அதிலும் கொடுமை இரண்டாவது கொரோனா அலைக்கு காரணமான ஆடைத்தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்குவதாகும். பலரும் ஆடைத்தொழற்சாலைகளை மூடுங்கள் என வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனம் செலுத்தியதாய் தெரியவில்லை. செலுத்தப்போவதாயுமில்லை. தடுப்பூசி விடயத்தில் கூட முன்களப்பணியாளர்களான வைத்தியசாலைத்தாதியர்களை அரசு கவனத்தில் கொண்டதாய் தெரியவில்லை.  இதனாலேயே அவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சருடைய நகர்வுகள் இன்னும் கேலிக்குரியதாக மாறிவருகின்ற நிலையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. களனியில் கொரோனாவை விரட்ட சடங்கு செய்தமை , சித்தவைத்தியரின் கொரோனாப்பாணியை ஆதரித்தமை மற்றும் அதனால் அங்கு அலை மோதிய மக்கள் கூட்டம் என பல முன்யோசனையற்ற செயற்பாடுகளுக்கு அவர் பொறுப்பு கூற வேண்டியவர். ஆனாலும் அவர் புரிந்து கொள்வதாயில்லை. அண்மையில் கூட அவரை குறித்த பொறுப்பிலிருந்து மாற்றுமாறு சில வைத்தியர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

சரி மக்களாவது பொறுப்புடன் நடந்து கொள்கிறார்களா என்றால் சிறிதளவு கூட சிந்திப்பதாயில்லை. ஒரு நாள் பயணத்தடை எடுத்தால் கூட கடைகளில் குவிந்து மொய்த்து விடுகிறார்கள். சரி என்னிடம் ஓரளவு பயணத்தடை நாட்களை தாக்குப்பிடிக்க கூடியளவிற்கு பொருட்கள் உள்ளன. போதும் என்ற திருப்தியில் யாராவது இருக்கிறார்களா என்றால் .., ஆகச்சிலரே நிலையயை உணர்ந்து செயற்படுகின்றனர். ஏனையோர் கொரோனாவை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவேயில்லை. சரி நம்மில் எத்தனை பேர் முகக்கவசங்களையேனும் முறையாக அணிகின்றோம்..,? நாம் முகக்கவசம் அணிவதும் , தலைக்கவசம் அணிவதும் பொலிஸாருக்காகவே தவிர நமது நன்மைக்காக என நாம் எண்ணும் வரை சில விடயங்கள் மாறப்போவதில்லை.

அரசியல் தலைமைகளும் மக்கள் மத்தியில் இது தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவோராயில்லை. முடியுமானவரை வழமையான காழ்ப்புணர்ச்சி அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனரே தவிர மக்களை விழிப்பூட்டுவதாயில்லை.

அண்மையில் “கொரோனா பரவலின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொள்ளும் போது, இலங்கையின் நிலைமையானது இந்தியாவை விட மோசமானது” என சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசகர் கலாநிதி சஞ்சய பெரேரா தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

தனித்து அரசாங்கத்தை மட்டுமே விமர்சிப்பவர்களாயிராது நாம் பாதுகாப்பாக இருப்பதுடன் நம் சார்ந்தவர்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட முன்வர வேண்டும். விழிப்புணர்வுடன் இருங்கள். அரசாங்கங்கள் மாறிக்கொண்டுதான் இருக்கும். நம் சார்ந்த அன்பானவர்கள் பற்றி நாம் தான் சிந்திக்க வேண்டும். ஆகவே பொறுப்புடன் செயற்படுவோம்..!

சுயநலம் காப்பது  பொதுநலன் பேணுதற்கே..!

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *