ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விரைவில் !

இலங்கைக்கு ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக உநுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதிக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிராவிற்கும் இடையில், இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி, ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

ஜப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ, முதலாவது செயலாளர் இமமுரா காயோ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்ட, சுமார் ஆறு இலட்சம் பேர், இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *