Tuesday, August 3, 2021

சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ‘ஜி-7’ – ஜி-7 போன்ற சிறிய குழுக்கள் உலகை ஆள முடியாது என சீனா பதிலடி !

உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு செயல்படுகிற ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகுதியில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி

பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டடிருந்தது. கொரோனா வைரசுக்கு எதிராக உலகமெங்கும் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது, பெரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான வரிகளை செலுத்தச்செய்வது மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் உதவி கொண்டு பருவநிலை மாற்றம் பிரச்சினையை சமாளிப்பது என தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிகம் பேசுபொருளாகவிருந்த விடயம் சீனா தொடர்பானதே.

இதே நிலையில் , மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின் ஏழு பெரிய மேம்பட்ட பொருளாதார நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ‘சீனாவை மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை மதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தின. இது உய்குர் முஸ்லீம் சிறுபான்மைக் குழுவிற்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவையை உள்ளடக்கியதாகும்.

இதே நேரம் இந்த மாநாட்டில், சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்ட்’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் மத்திய தர நாடுகள் கட்டமைப்பில் பயன்பெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிரித்தானியாவிலுள்ள சீனாவின் தூதரகம், ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த முடிவு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், “ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.

சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.

சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா.,கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும்.ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

………………………………………………………………………………………………………………………………….

அண்மைய நாட்களில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருமாறி வருகின்றது.  முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவின் ஆதிக்கம் வேகமாக வளர ஆரம்பித்துள்ளதையும் அறிய முடிகின்றது. முக்கியமாக கொரோனா தடுப்பூசி தொடர்பான விநியோகம் இன்றைய உலக அரசியலின் மிகப்பெரும் சக்தியாக மாற்றமடைய ஆரம்பித்துள்ளது.

சீனா முதற்கட்டமாக பல நாடுகளுக்கு தடுப்பபூசி விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளமை மூலம் சீனச்சார்பு நாடுகளின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைய ஆரம்பித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நோக்குடனேயே மேற்கத்தேய நாடுகள் கொரோனாவை பரப்பிய பழியை வலுக்கட்டாயமாக சீனாவை  ஏற்க வைக்க முற்படுகின்றன. சீனாவும் ஏற்றுக்கொள்வதாயில்லை. ட்ரம்ப் அடுத்து வந்த பைடன் எல்லோரும் சீன எதிர்ப்பு என்ற கோணத்தில் ஒரே முகத்தையே காட்டுகின்றனர்.

இவ்வளவு நாள் தடுப்பூசி தொடர்பான மட்டுப்பாடுகளை அறிவித்து வந்த அமெரிக்கா , பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் வறுமைப்பட்ட நாடுகளுக்கு 100 கோடி டோஸ்களை கொடுக்க முன்வருவதாக தெரிவித்துள்ளமை கூட சீன எதிர்ப்பின் ஒரு நீட்சியே தவிர மற்றும் படி உலக நாடுகள் மீது கொண்ட கரிசனை என்று கூறமுடியாது. அவ்வளவு அக்கறை இருப்பின் தடுப்பூசி உற்பத்திக்கான அனுமதியை பல நாடுகளுக்கு வழங்க முடியும். எனினும் அதில் கூட கட்டுப்பாட்டை இந்த நாடுகள் விதித்து வைத்திருப்பது இல்லாத நாடுகள் இவர்களிடம் இரந்து வாழ வேண்டும் என்பனாலேயே தவிர வேறு ஒன்றுமில்லை.

 

பொருத்திருந்து பார்ப்போம். சீனா இவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு  பணிந்து போகுமுா..? அல்லது தன்னுடைய பெல்ட் அன்ட் ரோட் திட்டத்தை இன்னும் முனைகப்பாக நடத்துமா என்று.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *