“சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.” – ஜனாதிபதி உறுதி !

ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார்.

நேற்று (27.06.2021) முற்பகல் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது ,

இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவையாகும்.

இரசாயன உர இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையை அரசாங்கம் செலவிடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அப் பணத்தை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் முடியுமாக இருக்குமென்று ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் சுட்டிக் காட்டினார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச அதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பின்நிற்காத காரணத்தினால், குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரிகள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாகவும் குறிப்பிட்டார். எனவே நாட்டில் பெருமளவு வேலைத்திட்டங்கள் முடங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *