அவசரமாக யாழில் கூடிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்கள் – வழமையான அதே புராணம் தான் – பௌராணிகர் தான் புதியவர் !

கடந்த பல ஆண்டுகளாக இது போன்ற திடீர் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்ட்டுக்கொண்டுதான் இருக்கின்றன கூட்டமைப்பினரால். ஆனால் ஆக்கபூர்வமான மாற்றங்கள் எவையும் இது வரையில்லை என்பதே உண்மை. வடக்கிலும் -கிழக்கிலும் தீர்க்கப்படாமல் உள்ள தமிழர் பிரச்சினைகள் அப்படியே உள்ளன. சிங்கள அரசு – சிங்கள எதிர்ப்பு எனக்கூறிக்கொண்டு இன்னமும் எமது சமூகம் அபிவிருத்தி பாதை நோக்கி நகர முடியாமலேயே உள்ளது. இதற்கான காரணம் இவர்களும் தான்.

இன்னமும் போலித்தேசியம் பேசிக்கொண்டு தங்களுக்குள் கடிபட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர எதுவித முன்னேற்றமும் இல்லை. தமிழ்தேசியம் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேருக்கும் அதிகமாக இன்றைய நாடாளுமன்றத்தில் பங்கு பற்றுகின்ற போதும் கூட அவர்கள் இணைந்து ஒரு அறிக்கையை கூட இது வரை வெளியிட்டதில்லை. சரி இன்று பிரிந்து நிற்பவர்கள் எல்லாம் யாரொன்று பார்த்தால் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான்.

கொள்கை நிலையில் ஒன்றாய் தமிழ்தேசியம் எனகூவும் இவர்களால் தமிழர் பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கி அரசிடம் கையளிப்பதற்கான  ஒரு அறிக்கையை கூட ஒற்றுமையாய் விட முடியவில்லை.  இவர்களை தான் நாம் இன்னமும் மீட்பர்களாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இவர்களை இணைப்பதற்கான பல முயற்சிகள் இது வரை பல தரப்பினராலும்  மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையிலும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே கடந்தகால உண்மை.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடையே ஏற்கனவே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துவதற்கான நேர ஒழுங்கு முறையாக பகிரப்படாமை தொடர்பான பிரச்சினைகள் எரிந்துகொண்டிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க பங்காளிக்கட்சிகள் தம்மிடையே இன்னமும் பிரிவினைகளை வளர்த்துக்கொண்டிருப்பதை வெளிப்படையாகவே காண முடிகின்றது.

புதிதாக இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளார் ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். இவர் புதிதாக எல்லா தமிழ்தேசிய கட்சிகளையும் இணைத்து புதிய அரசியல் சாதனையை செய்யப்போகிறார் போல.., பொறுத்திருந்து பார்ப்போம்இந்த வெள்ளாமையாவது வீடு வந்து சேருமா என…?

………………………………………………………………………………………………………………………………

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இன்று அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு இன்று காலை 11.30 மணி தொடக்கம் மதியம் ஒரு மணிவரை இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பு முடிவின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் அனைவரையும் அரவணைத்து போகின்ற நிலைமையை கையாளுகின்ற ஒரு செயற்பாட்டை செய்வதற்கு முற்றுமுழுதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலே நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் நாங்கள் எப்படி செயல்பட வேண்டும், தொடர்ந்து அதை எப்படி நாம் கையாள வேண்டும் என்பது தொடர்பில் முடிவை எடுப்போம் என்குறிப்பிட்டுள்ளார்.

என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் கேள்வியெழுப்பிய போது,

நிலம் சம்பந்தமாகவும் மாகாண சபைகள் சம்பந்தமாகவும் எங்களுடைய இனம் சார்ந்த பூர்வீகத்தை உடைத்தெறிந்து வரலாற்றை சிதைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பலத்தை உருவாக்குவதற்கு பலமான சக்தியாக தமிழ்த் தரப்பு இருக்க வேண்டும்.

அப்படி இருக்கின்றபோது புலம்பெயர்ந்த உறவுகளையும் தமிழ்நாட்டு தமிழர்களையும் இணைத்து செயற்படும்போது பெரிய பலத்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும். அப்போதுதான் இப்பொழுது இருக்கிற அரசாங்கத்தை நாங்கள் பல விடயங்களில் தடுத்து நிறுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *