“ஆப்கானிஸ்தான் கூட டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இலங்கை..?” – ரணதுங்கவுக்கு ஆகாஷ் சோப்ரா பதில் !

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவான் தலைைமயில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கையை சந்திக்கவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா, அளித்த பேட்டியில், “இலங்கைக்கு 2-ம் தர இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. 2-ம் தர இந்திய அணி இங்கு வந்துள்ளது இலங்கை கிரிக்கெட் அணிக்கு அவமானத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? தொலைக்காட்சி வர்த்தகச் சந்தை, ரேட்டிங் ஆகியவற்றுக்காக இந்தியாவின் 2-ம் தர அணியுடன் விளையாட ஒப்புக்கொண்ட இலங்கை கிரிக்கெட் சபையைத்தான் குறைகூறுவேன்.

இந்திய கிரிக்கெட் சபை, தங்களின் சிறந்த அணியை இங்கிலாந்து தொடருக்கு அனுப்பிவைத்துவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதுபோன்ற செயலுக்கு எங்கள் கிரிக்கெட் சபையைத்தான் குறை கூற வேண்டும்” என விமர்சித்தார்.

இந்நிலையில் அர்ஜுன ரணதுங்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

”ரணதுங்கா கூறியது முற்றிலும் உண்மைதான். இலங்கைக்குச் சென்றுள்ளது, முழுமையான இந்திய அணி அல்லதான். பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இல்லை. ஆனால், இலங்கையில் உள்ள இந்திய அணியைப் பார்த்தால் B டீம் போலவா இருக்கிறது?

இந்திய அணியின் உத்தேச 11 வீரர்கள் கொண்ட ஒருநாள் அணியை எடுத்துக்கொண்டால் மொத்தமாக 471 போட்டிகளில் விளையாடியுள்ளது. இலங்கை அணியை எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் சேர்த்தால் கூட இத்தனை போட்டிகளில் விளையாடியிருப்பார்களா எனப் பார்க்கலாம். ஒவ்வொரு போட்டியின் அனுபவத்தோடு, அனுபவத்தை ஒப்பிடும்போதுதான் உற்சாகமானதாக அமையும்.

இப்போதுள்ள இலங்கை அணியின் ஃபார்ம் குறித்து ஏதாவது கூற வேண்டுமா? டி20 உலகக் கோப்பைப் போட்டியின் தகுதிச்சுற்றில் விளையாடிய வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது. ஆனால், புதிதாக வந்த ஆப்கானிஸ்தான் அணி கூட தகுதிச்சுற்றில் விளையாடவில்லை.

ஆதலால், இலங்கை அணி தன்னைத்தானே உற்றுநோக்க வேண்டும், அதுதான் நேர்மையானதாக இருக்கும். இப்போதுள்ள நிலையில் தடுமாற்றம் அடைந்த அணியாக இலங்கை இருப்பதே நிதர்சனம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெறாத நிலைகூட ஏற்படலாம், சூப்பர்12 சுற்றுக்குக் கூட வராமல் போகலாம். ஆனால், ஆப்கானிஸ்தான் இதையெல்லாம் கடந்துவிட்டது என்பது நினைவிருக்கட்டும்”.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *