வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கு இன்று தேர்தல் : 106 உறுப்பினரை தெரிவுசெய்ய 34,08,182 பேர் வாக்களிக்கத் தகுதி – மொஹமட் அமீன்

sri-lanka-election-01.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். 1209 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்திருக்கும் இரு மாகாண சபைகளுக்குமான தேர்தல்; ஐந்து மாவட்டங்களிலுள்ள 40 தொகுதிகளில் 2579 வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது

மத்திய மாகாணம்

மத்திய மாகாணத்தின் கீழ் உள்ள மாவட்டங்களான கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகியவற்றில் 56 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கு 17,46,449 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1370 வாக்களிப்பு நிலையங்களில் இவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

அதாவது, கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 9,55,108 வாக்காளர்களும், நுவரெலியாவில் 16 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 4,52,395 வாக்காளர்களும் மாத்தளையில் 10 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு 3,38,946 வாக்காளரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டியில் 10 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், நுவரெலியாவில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தமாக 456 வேட்பாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மத்திய மாகாணத்தில் 3 மாவட்டங்களிலிருந்தும் 14 அரசியல் கட்சிகளையும்,26 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 1,310 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளரின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் 2 போனஸ் உறுப்பினர்களுமாக மொத்தமாக 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

இலங்கையில் மத்திய மாகாணமும், மேல் மாகாணமும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான மாகாணங்கள் என்பது பொதுவான கருத்து. மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இம்முறை பொதுசன ஐக்கிய முன்னணியினரின் தேர்தல் பிரசாரங்கள் மிகவும் உச்சநிலையிலிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூட கூடிய கரிசனை காட்டியதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக இத்தேர்தலில் வன்னியுத்தம் முதன்மைப்படுத்தப்பட்டமை காரணமாக பொதுசன ஐக்கிய முன்னணியினர் வெற்றியீட்டலாம் என தற்போதைய நிலையின் பிரகாரம் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மாகாணம் முதன்மை வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. திசாநாயக்க போட்டியிடுகின்றார். இத்தேர்தலில் எஸ்.பி. திசாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இம்மாகாணத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக சரத் ஏக்கநாயக்க போட்டியிடுகின்றார். இவர் கடந்த மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தவர்.

வடமேல் மாகாணம்

sri-lanka-election.jpgவடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இருந்து 50 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் 16,61,733 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

அதாவது, குருநாகல் மாவட்டத்திலிருந்து 34 பேரும் புத்தளம் மாவட்டத்திலிருந்து 16 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அதேநேரம், போனஸாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் 52 பேர் மாகாண சபைக்கு செல்லவுள்ளனர். வடமேல் மாகாணத்தில் 12 அரசியல் கட்சிகளையும்ää 17 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 937 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வடமேல் மாகாணத்தில் ஜே.வி.பி.யின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிமல் ஹேரத்தும், ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சமல்செனரத் அவர்களும், பொதுசன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளராக அத்துல சரத் விஜேசிங்க அவர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்.

sri-lanka-election-02.jpgஇன்று காலை 7.00மணிக்கு தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது. ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேசம்நெற் செய்தி முகவர்களுடன் தொடர்பு கொண்டு கதைத்த நேரத்தில் இதுவரை (காலை 8.00மணி) தேர்தலில் வாக்களிப்பு வேகம் மிகவும் மந்தகரமாக இருப்பதாகவே தெரிய வருகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது இந்த மாகாண சபைத் தேர்தலை வாக்காளர்களின் ஆர்வம் மிகவும் குறைவாகவே காணப்பட்டிருந்தது. இரு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுழல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும்கூட, மக்களின் ஆர்வம் அதிகரிக்கப்படவில்லை என்பதாக குறிப்பிட்டனர். பொதுவாக இரு மாகாணங்களிலும் வாக்களிப்பு விகிதம் குறைவடையலாம் என சில சிரேஸ்ட அரசியல் அவதானிகள் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தேசம்நெற் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட நேரத்தில், தேர்தலுக்காக நாங்கள் பகைத்துக் கொள்ளவோ, பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவோ தேவையில்லை. வாக்களிப்பு நேரத்தில் போய் வாக்களித்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கருத்துக்களைத் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 50சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாக்கப்படுமென எதிர்பார்க்க முடிகின்றது.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்புநோக்கும்போது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தலில் வாக்காளர்களின் நடவடிக்கைகள் ஓர் உயர்தன்மையைக் காட்டுகின்றது. குறிப்பாக இனிவரும் காலங்களில் இதேபோன்ற வாக்காளர்களின் நிலைமைப் பேணப்படுமாயின் மேலைத்தேய நாடுகளில் காணப்படக்கூடிய தேர்தல்களை ஒத்தவகையில் இலங்கை தேர்தல் நிலைகளும் மாற்றமடையலாம் எனக் கருத இடமுண்டு.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கரைபடிந்த தேர்தல் வரலாற்றை ஏற்படுத்தியது 1999ஆம் ஆண்டு வடமேல் மாகாணசபை தேர்தலாகும். வடமேல் மாகாண சபையைச் சேர்ந்த குருணாகல், புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் போல இத்தடவை வாக்காளர்களின் போக்கு மிகவும் நிதானமாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை இரு மாகாணங்களிலும் பாரியளவிலான தேர்தல் வன்முறைகள் பதிவாகியிருக்கவில்லை என்பது கெபே, பெபரல் மற்றும் பொலிஸ் தலைமையக அறிக்கைகளின்படி தெரியவருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை வரை 200க்கும் குறைவான வன்முறை சம்வபங்களே இவ்வமைப்புகளின் கீழ் பதிவாகியிருந்தபோதிலும்கூட, இவற்றுள் பெரும்பாலானவை சிறு சிறு சம்பவங்களே.

129 வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸில் புகார்

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் தேர்தல் சட்டங்களை மீறியது தொடர்பாக 129 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வரையிலான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடமேல் மாகாணத்திலுள்ள ஹோட்டல்கள் முதல் தங்குமிடங்கள் என 34 இடங்களை பொலிஸார் தேடுதலுக்கு உட்படுத்தியதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சாவடிகளில் குழப்பம் விளைவித்தால் வாக்குகள் ரத்து; முடிவுகளும் வெளிவராது – ஆணையாளர் எச்சரிக்கை

election-commissioner.jpgவாக்குச் சாவடிகளில் குழப்பங்கள், கலவரங்கள் செய்யப்படுமாயின் குறிப்பிட்ட வாக்குச் சாவடியின் வாக்குகள் ரத்துச் செய்யப்படுவதோடு அந்த மாகாணத்தின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். எக்காரணம் கொண்டும் வாக்குச் சாவடிகளில் கலவரங்கள், குழப்பங்கள் நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அனைத்து கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில்  சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தயானந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் முகவர்கள்

வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகளால் நியமிக்கப்படும் கட்சி முகவர்கள் தேர்தலன்று காலை ஆறு மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு வரவேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க முன்கூட்டியே அறிவித்தல் கொடுத்திருந்தார். வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு புத்தகங்கள் அனைத்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்படும் நிலையம் வரை கட்சியின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் விசேட ஸ்டிக்கர் ஒன்றின் மூலம் சீல் வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் தமது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தமது ஸ்டிக்கர் ஒன்றையும் ஒட்டலாம்.

வாக்குகள் எண்ணும் நிலையம் வரை செல்லும் கட்சிகளின், சுயேட்சைக் குழுவின் பிரதிநிதி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கும் வரை தங்கியிருக்கலாம். வாக்குகள் எண்ணும் நிலையத்திற்காக கட்சிகளால், சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதி வந்ததன் பின்னர் மற்றவர் அங்கிருந்து செல்ல வேண்டும். வாக்குகள் எண்ணும் நிலையத்திலுள்ள கட்சிகளின், சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகளிடம் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் பிரதி ஒன்றும் அவர்களது கையெழுத்தைப் பெற்று வழங்கப்படும்.

வாக்குச் சாவடிகளில் கட்சிகளால் சுயேச்சைக் குழுக்களால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். இதற்கென விசேட பயிற்சிகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் ஜே. வி. பி. மட்டுமே பெப்ரல் அமைப்பின் உதவியுடன் பயிற்சிகளை பெற்றதாகவும் அறியமுடிகின்றது.

1999 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலே மிகவும் விரும்பத்தகாத தேர்தலாக அமைந்தது. 2003ஆம் ஆண்டு முன்னாள் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் இவ்வாறான நிகழ்வுகள் குறைவாகவே காணப்பட்டன. அவரது தீர்ப்பின் பிரகாரம் வாக்குச் சாவடிகளில் கலவரம், மற்றும் குழப்பம் ஏற்படுமாயின் வாக்குகள் ரத்துச் செய்யப்படும். அத்துடன் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படமாட்டாது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தி பெறுபேறுகள் கிடைத்ததன் பின்னரே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். இந்த நடைமுறையையே கடைப்பிடிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தமையும் இங்கு அவதானிக்கத்தக்கது.

ஒப்பீட்டளவில் நோக்கும்போது நீதியும், நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் கூடிய கரிசனையை எடுத்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் மாற்று ஏற்பாடு. ஆளடையாளம் நிரூபிக்க வேறு ஆவணங்களும் ஏற்பு

election_ballot_.jpgதற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மத்திய வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலின்போது இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முதல்தடவையாக கணனிப்படுத்தப்பட்ட வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. கூடவே வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களின் ஆள் அடையாள அட்டை இலக்கங்களும் பதிவாக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்தலில் வாக்களிக்க ஆள்அடையாள அட்டை மிகவும் அத்தியாவசியமானது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதில் நிலவிய சிக்கல்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளதாக இந்த மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்  தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாகாணத்தில் வாக்காளர்கள் அநேகருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் 1200 கிடைக்கப் பெற்று அவை உரியவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 11 ஆயிரம் தற்காலிக அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் டி.பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் சுமார் எழுபதாயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லையென்று தெரிவிக்கப்பட்டாலும், அது சரியான தகவல் அல்லவென்றும் வாக்களிப்பதற்கான அடையாள அட்டை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அதற்குப் பதிலாக எட்டு வகையான அடையாள அட்டைகளில் ஏதாவதொன்றைக் காண்பித்து வாக்களிக்க முடியும்.

கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அட்டை, புகையிரத பருவகாலச் சீட்டு, முதியோர் அடையாள அட்டை, அஞ்சல் அறிமுக அட்டை, மதகுருமார் அடையாள அட்டை, தோட்ட நிர்வாகங்களால் வழங்கப்படும் அடையாள அட்டை என்பவற்றில் ஏதாவதொன்றைச் சமார்ப்பித்து வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிக்க இயலும்.

இவை எதுவுமே இல்லாதவர்கள் கிராம சேவை அதிகாரியிடம் புகைப்படமொன்றைச் சமர்ப்பித்து தற்காலிக ஆளடையாள ஆவணமொன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தது.

எனவே அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாது என்ற பிரச்சினைக்கு இடமில்லை என்று நுவரெலியா அரச அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் அடையாள அட்டை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாத்தளை மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு நாலாயிரம் தற்காலிக அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிக்க தனியான அதிகாரிகள் நியமனம்

identity-card-sri-lanka.jpgஇன்று   நடைபெற்றுக் கொண்டிருக்கும் வடமேல் மத்திய மாகாண சபைகளுக்கான வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் அடையாள அட்டைகளை பரிசீலிப்பதற்கு தனியான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் தேர்தல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளில் இரகசிய இலக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
 
தேர்தல் முடிவுகள்

வாக்களிப்பு 4 மணிக்கு முடிவுற்றதும் உடனடியாக தபால்மூல வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்படும். சகல வாக்களிப்பு நிலையங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் வந்தடைந்ததும் இரவு 8.30 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். நள்ளிரவுக்குப் பின்னரே முதலாவது முடிவு வெளிவரக்கூடியதாக இருக்கும். 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகலாகும் போது அனைத்து முடிவுகளும் வெளியாகிவிடும்.

கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்களிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விருப்பு வாக்குகள் எண்ணப்படும், விருப்பு வாக்கு முடிவுகள் திங்கட்கிழமை மாலையாகும் போதே வெளியிடக் கூடியதாக இருக்கும் எனவும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்தார் 

விசேட ஏற்பாடு

தேசம்நெற் செய்திப் பிரிவு இலங்கையிலிருந்து தேர்தல் தொடர்பான செய்திகளைத் தருவதற்கு விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆரம்பமாகி ஒரு மணி நேரத்துக்குள் குறிப்பிடத்தக்க தேர்தல் வன்முறைகள் ஏற்படவில்லை என்றும்,  மிகவும் அமைதியான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.

இன்றைய தின தேர்தல் நிகழ்வுகள் தொடர்பாக முக்கிய சம்பவங்கள் இடம்பெறுமிடத்து இதை கட்டுரையில் அச்சம்பவங்கள் பின்னிணைப்பாக இணைக்கப்படும்.

பின்னிணைப்பு 01
தேர்தல் நிலை- பி.ப. 11.30

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்த நேரத்தில் வாக்களிப்புகள் மந்தநிலையில் காணப்பட்டாலும்கூட, சற்றுநேரத்தில் வாக்களிப்பு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுவரை கிடைக்கும் தகவல்களின்படி மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டிவருவதாகவும், வாக்களிப்புக்காக நீண்ட கியூ வரிசைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி பொலிஸ் நிலையம் தேர்தல் கண்காணிப்புத் தொடர்பான அதிகாரியொருவர் தகவல் தருகையில் காலை 11.30 வரை கண்டி மாவட்டத்தில் 20 தொடக்கம் 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

பொதுவாக இதுவரை  அளிக்கப்பட்ட வாக்கு வீதம் உத்தியோகபூர்வமான கணக்கீடு எடுக்கப்படாவிட்டாலும்கூட,  சகல மாவட்டங்களிலும் 20 – 25 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேகத்தில் செல்லுமிடத்து 65 முதல் 70 வீதத்தினர் இம்மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு நான்கு மணித்தியாலங்கள் கடந்த நிலையில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை.  சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்,  பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன், நுவரெலியா, மஸ்கெலிய,  ஹங்குராங்கத்த, மாத்தளை, ரத்தொட, ஹேவாஹெட போன்ற பிரதேசங்களில் அடையாள அட்டை அல்லது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணணங்களின்மை காரணமாக  சிலர் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னிணைப்பு 02
குறுந்தகவல்கள் மூலம் தோதல் முடிவுகள்!

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளை மொபிட்டல் வாடிக்கையாளர்கள் குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்) மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்களமும் மொபிட்டல் டெலிகொம் நிறுவனமும் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை உத்தியோகபூர்வமாக வெளியிடும் உரிமை தேர்தல் ஆணையாளரால் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை 25 வானொலி நிலையங்களும் 10 தொலைக்காட்சி நிறுவனங்களும் அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்திலிருந்து உடனுக்குடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கத்தின் உத்தியோகபூர் இணையத்தளம் மூலம் தேர்தல் முடிவுகளை குறுந்தகவலாக உடனுக்குடன் வெளியிட மொபிட்டல் டெலிகொம் நிறுவனம் ஏற்பாடுகளைச் செயதுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பு 03
தேர்தல் நிலை- பி.ப. 04.30

இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்களிப்பு அமைதியான முறையில் 4.00 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வாக்களிப்பில் ஆரம்வம் காட்டினர். சகல மாவட்டங்களிலும் ஒப்பீட்டளவில் 62 – 68 வீதத்தினர் வாக்களித்துள்ளதாக தெரியவருகின்றது.

தேர்தல் வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாராதூரமாக அசம்பாவிதங்கள் எதுவும் 40 தேர்தல் தொகுதிகளிலும் பதிவாகவில்லை. சில சில சிறு சம்பவங்கள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தேர்தலை பாதிக்கக்கூடியதாக இல்லை என தெரியவருவதுடன்ää பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

1 Comment

  • Kullan
    Kullan

    இது தேர்தலோ வாக்களிப்போ அல்ல. தமிழரைக் கொன்றதற்கான பரிசளிப்பு.

    Reply