தொடரும் சாதனை வெற்றி – நடப்பு ஆண்டின் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் வென்றார் ஜோகோவிச் !

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெரேட்டினியும் மோதினர்.
3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.
இதன் மூலம் ஜோகோவிச் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். அதிக கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். தற்போது இந்த 3 வீரர்களும் 20 கிராண்ட்சிலாம் பட்டத்தோடு முதல் இடத்தில் உள்ளனர்.
ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 6-வது முறையாக கைப்பற்றியுள்ளார். விம்பிள்டனை அதிக தடவை வென்ற வீரர்களில் அவர் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரெஞ்ச் ஓபனை 2 தடவையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்றுள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை நடந்த 3 கிராண்ட்சிலாம் பட்டத்தையும் அவர்தான் கைப்பற்றினார். இதே மாதிரி 2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் ஜோகோவிச் 3 கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்று இருந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாமான அமெரிக்க ஓபன் போட்டி ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 12 வரை நியூயார்க்கில் நடக்கிறது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *