Friday, August 6, 2021

ரிஷார்ட் பதியுதீன் வீட்டில் இறந்து போன சிறுமியும் – கண்டு கொள்ளாத ஊடகங்களும்  !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை வீட்டில் , வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி ஒரு வருடகாலத்துக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ளார்.
 கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில் , இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன . இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு , இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன . இந் நிலையில் பலத்த தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் , வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது . விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ,  ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள் , கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள நிலையில் நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
மலையக சிறுமி என்பதாலோ அல்லது அரசியல்வாதி ஒருவரின் பெயர் நேரடியாக தொடர்புபடுவதாலோ என்னமோ பெரிதாக இதைப்பற்றி ஊடகங்கள் எவையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும்.
இலங்கையில் 16 வயதுக்கு கீழ் கட்டாய கல்விக்கான வயது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வயதுடையோர் வேலைக்கமர்த்தப்படுதல் சட்டப்படி குற்றமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட குற்றத்தில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். ரிஷாட்பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் முன்னாள் அமைச்சர் – இது போக மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி வேறு. இவருக்கு தெரியாதா சிறுவர்களை வேலைக்கமர்த்தக்கூடாது..? என்று.
இதே வேளை சிறுமி 15ம்திகதி இறந்துள்ள நிலையில் மேலதிகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வி கற்றவர் – நாடாளுமன்ற அரசியல்வாதி பல்லாயிரக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் என்ற வகையில் எவ்வளவு முன்மாதிரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும் அவர்.
ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட போது உன்னுடைய வயது என்ன..? என்ன படித்திருக்கிறாய் என கேட்டு அடுத்த கட்டம் பற்றி செயலாற்றியிருக்க வேண்டும். அந்த பொறுப்பு அவருக்கிருந்தது.  ஆனால் அப்படியாக அவர் செய்யவில்லை. பாவம் முஸ்லீம் சிறுவர்களை மட்டுமே தன்னுடைய பிள்ளைகளாக ரிஷார்ட் பதியுதீன் நினைத்துவிட்டார் போலும்.
சிலர் வழமை போல அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்கும் மனோநிலையில் நின்று கொண்டு பிள்ளையை வேலைக்கு அமர்த்திய பெற்றோரை கேளுங்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் வேலை செய்வோர் விபரங்களை எல்லாம் கவனிக்க முடியுமா..?  அது தீக்காயங்கள். பிள்ளை தீ வைத்துக்கொண்டாள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏதோவெல்லாம்  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
01. சிறுமியை வேலைக்கு செல்ல விட்ட  பெற்றோரில் பிழை இருக்கின்றது. அவர்கள்  விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் சாதாரணமாக தன்னுடைய வீட்டையே கவனிக்க முடியாத ஒருவர் எப்படி சமூகத்தை கவனிக்கப்போகிறார்..?
02.சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்து – பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்தால் என்றெல்லாம் ஒரு பக்கத்தால் கூறப்படுகின்றது. சற்று  யோசித்துப்பாருங்கள். ஒரு முன்னாள் அமைச்சருடைய வீட்டில் விறகு அடுப்பா பயன்படுத்தப்போகிறார்கள்…?
இது போக சிறுமியின்யின் உடலில் நாட்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ள நிலையில் ; அதற்கு காரணமானவர்கள் யார்..? என்பது தீர விசாரிக்கப்பட வேண்டும். அதே நேரம் குறித்த சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட நாள் முதல் அவள் தன்னுடைய வீட்டுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்படவில்லை. காரணங்கள் ஆழமாக தேடப்பட வேண்டியன.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதும் ரிசாட்பதியுதீன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல இந்த வழக்கில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டு –  யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என வழக்கை கிடப்பில் போட்டு  அதிகாரவர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளுமா..? அல்லது நீதிமன்றம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபிப்பார்களா என்று.
இலங்கையில் நாளுக்கும் நாள் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துகங்களும் அதிகரித்துள்ள நிலையில் இந்த வழக்கில் வழங்கப்படப்போகின்ற தீர்ப்பு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான திருப்புமுனையாக அமையும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *