‘இலங்கையில் தினமும் 40 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். யுத்தப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு.’ ஐநா : த ஜெயபாலன்

வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர்.

UN_Logoபுலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் இதனால் சிலர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நேற்று (பெப் 16) ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச அமைப்பொன்று குற்றம்சாட்டியது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே புலிகள் மக்களைத் தடுத்த வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியேறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள உத்தியோகபூர்வமான அறிவிப்பாக இது அமைந்து உள்ளது.

ஐநா வின் இக்குற்றச்சாட்டு புலிகளுக்கு மீகுந்த அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன் புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெப் 16 ஐநா வின் நாளாந்த செய்திக் குறிப்பில் இலங்கையில் தினமும் 40 பேர் கொல்லப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பாதுகாப்பு கவுன்சிலிடம் தனது அவதானத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஆசிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஐநா செயலாளர் நாயகம் இலங்கை ஜனாதிபதியுடனும் உரையாடி இருந்தார். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இவ்வுரையாடல் பற்றியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஐநா உள்ளுர் பணியாளர்கள் 15 பேர் மற்றும் அவர்களில் தங்கியிருப்போர் 75 பேர் யுத்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா பணியாளர்களில் ஒருவரையும் புலிகள் பலாத்காரமாக தங்கள் படையணியில் சேர்த்து உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஐநா அவ்விளைஞரை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளதுடன் பொது மக்களை பலாத்காரமாக தங்கள் படைகளில் சேர்பதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.

குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.

வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.

மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்.

மேலும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்கள் புலிகளுடன் ஏதோவிதத்தில் தொடர்புடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் பொறுப்பெற்க வேண்டும். மேலும் சரணடைபவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்கள் ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.

தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளமை மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர். வன்னி மக்களின் வாழ்வு இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.

புலம்பெயர் நாடுகளில் வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களிலும் பார்க்க புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்கும் நடவடிக்கைகளே தீவிரமாக உள்ளது. ‘போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் செய்வார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை’ என்றெல்லாம் விளக்கமளிக்கும் புலம்பெயர் உறவுகள் உயிருக்கு ஊசலாடும் அந்த மக்களின் காதிலும் பூ வைக்க முயற்சிக்கிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

10 Comments

 • அருட்சல்வன் வி
  அருட்சல்வன் வி

  ஐ.நா. மன்றத்தின் 15 பணியாளர்கள், அவர்களின் 35 பெண்கள் மற்றும் 40 குழந்தைகள் உள்ளிட்ட 75 குடும்ப உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளால் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்த குழந்தைகளில் 15 குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான வியாதிகள் வந்திருப்பதாகவும், இது அந்தப்பகுதியில் மனித நேய உதவி அனுப்பபடவேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகவும் கூறுகிறது.

  இந்த ஐ.நா.மன்ற பணியாளர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளால் ஞாயிறன்று பலவந்தமாக அவர்களது படையணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறும் இந்த அறிக்கை, 14 வயதே ஆன சிறார்கள் விடுதலைப்புலிகளால் அவர்களது அணியில் சேர்க்கப்பட்டுவருவதாகத் தெரிவதாகவும் கூறியிருக்கிறது.

  இவ்வாறு சேர்க்கப்பட்ட ஐ.நா. மன்றப் பணியாளரை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும், வெளியேற விரும்பும் மக்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் ஐ.நா.மன்றம் கோருகிறது.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  /வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.

  மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்./- த ஜெயபாலன்

  ஜெயபாலன் அவர்களே தினமும் 40 பேர் கொல்லப்படுவதாக ஐ நா சுட்டிக் காட்டியதில் புலிகளால் கொல்லப்படுபவர்களும் அடங்குகின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையோ?? அதை விட ஏற்கனவே முல்லைத்தீவு அரச அதிபர் புலிகள் மக்களிடையே நின்று கொண்டு தான் இராணுவத்தின் மேல் தாக்குதல் நடாத்துகின்றார்கள் என்று சொன்னதையும் எப்படி மறந்தீர்கள். இராணுவம் எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வருகின்றதோ அந்த திசையை நோக்கித் தானே தாக்குதல் தொடுக்கும்.

  மேலும் புலிகள் காயமடைந்தவர்களையும் வெளியேற அனுமதிக்கின்றார்களில்லை என ஐ நாவும், செஞ்சிலுவைச் சங்கமும் முன்பு அறிக்கை விட்டதையும் மறந்து விட்டீர்கள் போலும். அதன் பின்பு தானே புலிகள் 226 காயப்பட்டவர்களை வெளியேற அனுமதித்தார்கள். இராணுவக் கட்டுப்பாட்டினுள் மக்கள் வர விரும்புகின்றார்களோ இல்லையோ என்பதை மக்கள் தான் தீர்மானிக்க முடியும். எனவே மக்களைச் சுயமாக முடிவெடுக்க புலிகள் விட்டுவிட்டால் உண்மை தெரியவரும் தானே. அதை விடுத்து வெளியேறும் மக்களை துப்பாக்கிகளால் கொலைசெய்வதும் பலாத்தகாரத்தைப் பிரயோகித்து போர் முனைக்கு அனுப்புவதும் யாருக்காக என்பது உங்களுக்கு உறைக்கவில்லையா?? இவர்களா மக்களின் பாதுகாவலர்கள்??

  உங்களைப் போன்றவர்களுக்கு உண்மையில் அந்த மக்கள் மீது கருணை இருந்தால் புலிகளுக்கு தாமாக விரும்பி வெளியேறும் மக்களை வெளியேற அனுமதிக்குமாறு அழுத்தம் கொடுக்கலாமே?? இன்று இவ்வளவு மக்களின் அழிவிற்கும் புலிகளின் அடாவடித்தனம் தானே காரணம் என்பதை உங்கள் மனம் சுட்டிக்காட்டத் தவறி விட்டதா?? அரசாங்கம் கூட சாதாரண போராளிகளை மன்னிக்கத் தயார் ஆனால் புலித்தலைவர்களை மன்னிக்க மாட்டோமென்று தானே சொல்லி வருகின்றது. அப்படியாயின் அரசாங்கம் மாவீரர்கள் குடும்பத்திற்கும் மன்னிப்பளித்தே ஆகவேண்டும். அந்த வகையில் அதை உறுதிப்படுத்துவதற்கு தப்பி வரும் மக்களை அரச கட்டுப்பாட்டில் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களின் கண்காணிப்புடன் பாதுகாக்கலாம். இப்படியான விடயத்தை இந்தியா மூலம் அரசிற்கு அழுத்தம் கொடுத்துச் செய்விக்கலாம் அல்லது அந்த கண்காணிப்பை இந்தியாவையே செய்யும்படியும் கேட்டுக் கொள்ளலாம்.

  Reply
 • rajai
  rajai

  Hello Mr. UN! please send a copy of your reports to Tamil Nadu Media & people because those are wholy blinded by LTTE propaganda

  Reply
 • அருட்சல்வன் வி
  அருட்சல்வன் வி

  வன்னித் தாக்குதல் இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்தால் மனிதப் பேரவலம் பற்றி கூறுவதற்கு எவருமே இருக்கமாட்டார்கள. ஐ.நா. செயலாளருக்கு கனகரட்னம் எம்.பி.மகஜர்

  இலங்கைப் படையினரின் தாக்குதல்களிலிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா.செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கனகரத்தினம் அனுப்பிய மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

  2004 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு எனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் கனகரத்தினம் ஆகிய நான் தங்களிடம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்.

  வன்னியில் நடைபெற்று வரும் போர் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 15 ஆயிரம் தமிழர்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து படையினரால் ஏவப்படும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் விரட்டப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மூன்று சிறு கிராமங்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் சிறு கொட்டகைகள் அமைத்தும் மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

  இந்த மக்கள் உயிர் வாழ்வதற்கான எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி மரண பயத்தின் மத்தியில் மிகப்பெரும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் வாழும் கிராமங்களை மையமாக வைத்து இலங்கைப் படையினரின் போர் விமானங்கள் குண்டுகளை வீசியும் ஷெல் தாக்குதல்களை நடத்தியும் வருவதால் ஒவ்வொரு நாளும் 100 க்கும் அதிகமான குழந்தைகள், முதியவர்கள், மகப்பேற்றுக்குரிய பெண்கள் என்று பலரும் கொல்லப்படுவதுடன் பலர் படுகாயமடைந்து அவயவங்களை இழந்து வருகின்றனர்.

  மருத்துவமனைகள் மீதும் ஷெல், வான் தாக்குதல்களை நிகழ்த்தி 200 க்கும் அதிகமான நோயாளர்களையும் மருத்துவ பணியாளர்களையும் கொன்று குவித்துள்ளமையால் மருத்துவமனைகள் இயங்க முடியாமல் மிகச்சிறிய பகுதியில் மக்கள் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் கால்வாய்க் கரையோரங்களிலும் மிக நெருக்கடியில் வாழ்வதால் சுகாதார வசதிகள் இன்றி தொற்று நோய்கள் பரவும் அபாயத்தையும், நுளம்புத் தொல்லை, பாம்புக் கடி போன்ற உயிராபத்துக்களையும் எதிர்கொள்ள வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  இந்தப் பகுதிகளில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் எதுவுமே இயங்காத நிலையில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் நாள்தோறும் இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.

  இலங்கை அரசாங்கத்தால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மக்களை நோக்கி விமானத்தாக்குதல்கள், ஷெல் தாக்குதல்கள் நிகழ்த்தி கொல்லப்படும் மக்களை புதைப்பதற்கு கூட அவகாசம் இன்றி மக்கள் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த பேரவலங்களுக்கு மத்தியில் அவலப்படும் மக்களோடு தான் நானும் எனது குடும்பத்துடன், அல்லற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

  சீறிவரும் விமானக்குண்டுகளுக்கும் ஷெல் தாக்குதலுக்கும் முன்பாக பாராளுமன்ற உறுப்பினரின் உயிரும் அப்பாவி மக்கள் உயிரும் அற்பமானதல்லவா? இந்நிலை இன்னும் சில நாட்கள் நீடிக்குமாக இருந்தால் இதனை எடுத்துச்சொல்வதற்கு கூட எவருமே இருக்க மாட்டார்கள் என்ற வேதனையான உண்மையை உங்களுக்கு நான் தெரியப்படுத்தியே ஆகவேண்டியுள்ளது.

  ஆகவே, உங்களுக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான முடிவினை உடனடியாக எடுக்க வேண்டும். போர் நிறுத்தத்தின் பின்னரே ஏனைய விடயங்கள் தொடரப்பட வேண்டும். ஆகவே, அப்பாவி மக்களின் உயிர்களை காக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  /வன்னித் தாக்குதல் இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்தால் மனிதப் பேரவலம் பற்றி கூறுவதற்கு எவருமே இருக்கமாட்டார்கள. ஐ.நா. செயலாளருக்கு கனகரட்னம் எம்.பி.மகஜர்
  ஆகவே, உங்களுக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதற்கான முடிவினை உடனடியாக எடுக்க வேண்டும்./- அருட்சல்வன் வி

  வேண்டுமானால் கூத்தமைப்புக் கனகரட்ணம் உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் மற்றைய கூத்தமைப்பினரையும் வன்னிக்கு வரும்படி அழைக்கலாமே!!
  ஐ. நா செயலாளருக்கு புலிகளால் கடத்தப்பட்டு போராளிகளாக்கப்பட்ட ஐ.நா உத்தியோகத்தர்களையே எப்படி புலிகளிடமிருந்து விடுவிப்பது என்று தெரியாமல் தலையைப் பிச்சுக் கொண்டு இருக்கிறார். வேண்டுமானால் கூத்தமைப்புக் கனகரட்னம் அவர்களை விடுவிக்க புலிகளுடன் பேசி ஐ.நாவிற்கு உதவினால் ஐ.நாவும் தம் பங்கிற்கு ஏதாவது செய்ய முன்வரும் அல்லவா??

  Reply
 • damilan
  damilan

  ச.கனகரத்தினம் எம்பி//வன்னித் தாக்குதல் இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்தால் மனிதப் பேரவலம் //
  என்று கூறுவது பிரகாரன் இறப்பைப் பற்றியா? ஐயா கடைசிகாலத்திலாவது மக்களுக்காக ஏதாவது செய்ய உண்மை பேசுங்கோ

  //எனது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கும் //புலிக்கு வால் பிடிக்கும் பணியா? இன்னமும் செய்றியள் ?

  //அரச அலுவலகங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் எதுவுமே இயங்காத நிலையில்// புலியின் நிர்வாகம் என்னாச்சு?

  //நானும் எனது குடும்பத்துடன், அல்லற்பட்டுக்கொண்டிருக்கின்றேன்//எம்பியாகும் போது இப்படி ஒரு நிலமை வரும் என்று கனவிலும் நினைச்சிருக்க மாட்டியல் குடிம்பத்தோட தப்பி வர்ர வழியைப் பாருங்க. ஏன் புலி உங்களையும் பிடிச்சி வைச்சிருக்கா?

  //இன்னும் சில நாட்கள் நீடிக்குமாக இருந்தால் இதனை எடுத்துச்சொல்வதற்கு கூட எவருமே இருக்க மாட்டார்கள் // புலியின் அழிவு நெருங்கி விட்டதென்று நீங்கள வாக்குமூலம் கொடுக்கிறியள்

  //போர் நிறுத்தத்தின் பின்னரே ஏனைய விடயங்கள் தொடரப்பட வேண்டும்// தலைவர தப்ப வைக்க கடைசி முயற்சி ?

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  நேற்றய (17.022009) பிபிசி செய்தி- அதில் அருட்தந்தை ஜெயநேசன் அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி நிலையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்கள் நிலைபற்றியும் எடுத்துக் கூறியுள்ளார்.
  அதுபோல் யுனிசெவ் நிறுவனம் சமாதான காலத்தில் புலிகளால் பலாத்தகாரமாச் சேர்க்கப்பட்ட 6000 சிறுவர்கள் பற்றிய அறிக்கை மற்றும் சோனியாவைச் சந்தித்து விட்டு வந்த இராமதாசின் “புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை, அவர்கள் எவரையும் எமக்குத் தெரியாது, அவர்களுடன் எமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது” என்ற பல்டி அறிக்கை விட்டுள்ளார்.

  Reply
 • Kullan
  Kullan

  ஜெயபாலன்! உமக்கு ஒரு விடயம் தெரியுமா? புலிகளும் ராசபக்சவும் தம்பியும் அல்லது புலிகளும் ஒரு உடன்படிக்கைக்கு வந்துள்ளார்கள் தெரியுமா? 2001 இல் இருந்து நடந்த பேச்சுவார்த்தை எல்லாம் எப்படித் தமிழரை எப்படிப் பூண்டோடு அழிப்பது என்பது தான். புலிகள் ஆரப்பத்தில் இருந்து தமிழ் அழிப்புப் போராட்டத்தைத்தானே நடத்திக் கொண்டிருந்தார்கள். இதற்கு அவர்கள் சொல்லும் பெயர் மண்மீட்பு. தோழமை இயக்கங்களை போட்டுத்தள்ளும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் புலிகள் தமிழர் அழிப்புப் போராட்டத்தைத்தான் நடத்துகிறார்கள். வேலுப்பிள்ளை மாமா பிரபாகரன் 10வயதாக இருக்கும் போது வல்வெட்டித்துறையில் ஒரு 10பரப்புக்காணியை வாங்கி எழுதி விட்டிருந்தால் இப்ப இப்படி ஒரு பிரச்சனை வந்திருக்காது. 10பரப்பு மண்ணுடனே மண்ணாகிப் போயிருப்பார் தம்பி. 5வருடப்பேச்சு வார்த்தையில் எடுத்த முடிவுதானா எப்படி தமிழர்களை அழிப்பது என்பது? புலிகள் தனிய தமிழர்களை அழித்தார்கள் இப்ப மகிந்தவம் சேர்ந்து இருக்கிறார். கெதியாக அழிச்சு முடியுங்கோ.

  Reply
 • ashroffali
  ashroffali

  திரு ஜெயபால் அவர்களே //பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.//

  பாதுகாப்பு வலயங்கள் மீது இலங்கை இராணுவம் தாக்குதல்களை மேற்கொள்வதாக புலிகளும் அவர்களுக்குச் சார்பானவர்களும் மட்டும் தான் ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர். மற்றபடி அதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை.உங்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று வன்னிக்குள் இன்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் இருக்கும் நிலையில் அப்படியான தாக்குதல் இடம்பெற்றிருப்பின் அது அந்தப் பணியாளர்கள் ஊடாக ஐக்கிய நாடுகள் அமைப்பினருக்கும் தெரிய வந்திருக்கும். அப்படியெனில் ஐக்கிய நாடுகள் அமைப்பு அந்தத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிட்டு அரசாங்கத்தைக் கண்டித்திருக்கும். அதிலிருந்தே குறித்த பிரச்சாரம் புலி ஆதரவாளர்களால் பொய்யாக முன்னெடுக்கப்படும் ஒரு பிரச்சாரம் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளதா? புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்காக அவர்கள் எது செய்தாலும் கண்டிக்க முடியாது என்பது அர்த்தமல்ல. அவர்கள் எது செய்தாலும் தட்டிக் கேட்க முடியாது என்பதுமல்ல.

  //தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது//

  எந்த ஆதாரத்தை வைத்து இந்த எண்ணிக்கையை கணக்கிட்டீர்கள் திரு ஜெயபாலன் அவர்களே? மருத்துவமனைத் தகவல்களை வைத்தா? அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களை வைத்தா? அதுவுமில்லாது போனால் நீதிமன்ற பதிவுகளை வைத்தா? அப்படியேதும் இருந்தால் அந்த ஆதாரங்களை எனக்கும் கொஞ்சம் தர முடியுமா?

  புலிகளின் இணையத்தளமான நெருடல் இணையத்தளம் புலிகளின் படைபலம் தொடார்பாக வெளியிட்ட ஒரு செய்தியே உங்கள் கருத்துக்குப் பதிலளிக்கப் போதுமானது.
  //சிறிலங்கா படைத்தரப்பு தினமும் 10 தொடக்கம் 20 விடுதலைப் புலிகளின் சடலங்களை கைப்பற்றி வருவதாக தெரிவித்து வருகின்றது. எனினும் அது தொடர்பான புகைப்படங்களை தற்போது அவை வெளியிடுவதில்லை. அவர்கள் உடைந்த கட்டடங்களையும், கைவிடப்பட்ட எண்ணை பரல்களையும், கைவிடப்பட்ட பொருட்களையுமே காட்டுகின்றனர். வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் 40 தொடக்கம் 50 சடலங்களையே வைக்க முடியும். நீதிமன்னறத்தின் அனுமதியின்றி சடலங்களை அடக்கம் செய்யவும் முடியாது. இரண்டு தடவைகளில் 70 சடலங்களே அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. எனவே படையினரின் தகவல்கள் தவறானவை.//

  -hவவி://றறற.நெசரனயட.உழஅ/நெசரனயட.628.hவஅட-
  இந்த விடயம் புலிகளின் கொல்லப்பட்ட உறுப்பினர்களுக்குப் பொருந்தும் என்றால் இராணுவத்தினரால் கொல்லப்படுவதாகக் கூறப்படும் பொதுமக்கள் தொடர்பில் பொருந்தாதா? அதற்கொரு சட்டம் இதற்கொரு சட்டம் என்று விதிமுறைகள் மாறுவது நியாயமில்லையே…?

  மேலும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்கின்ற பொதுமக்கள் தான் கொல்லப்படுவதாக புலிகள் பிரச்சாரம் செய்கின்றனார். அப்படியாயின் அதனை இலகுவாக புகைப்படம் எடுத்து ஒளிப்பதிவு செய்து ஆதாரமாக சமர்ப்பிக்கலாமே? அதை விட்டு மொட்டையாக எண்ணிக்கையை மட்டும் தெரிவித்தால் எப்படி?அல்லது விடுவிக்கப்படாத பிரதேசத்தில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் அல்லது செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளைக் கொண்டு அந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தலாமே? நடக்காத ஒன்றுக்கு அவர்கள் ஒரு போதும் சாட்சியாக இருக்கப் போவதில்லை என்ற நிலையில் தான் இப்படியொரு பிரச்சாரத்துக்கு ஊடகங்களும் புலம்பெயர் தமிழரும் பயன்படுத்தப்படுகின்றனர். நீங்களும் அதற்குப் பலியாக வேண்டுமா?

  //அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.

  வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா //

  வன்னியின் உண்மை நிலை இதுதான். உங்கள் கட்டுரையை மீண்டுமொரு தடவை நீங்களே வாசித்தால் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.

  //இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி//

  இலங்கை அரசாங்கம் ஒருபோதும் இவ்வாறான காட்டுமிராண்டித் தனமான விடயங்களில் ஈடுபட்டது கிடையாது. ஈடுபடவும் மாட்டாது. ஆனால் புலிகள் அமைப்பில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்று உறுதியாக நிரூபணமானவர்களை புனர்வாழ்வளிக்காது சிவில் சமூகத்தில் அனுமதிக்க முடியாது.அது பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிப்பதாகி விடும். உலகெங்கும் உள்ள நடைமுறை அதுதான்.எனவே அவ்வாறு புனர்வாழ்வளிப்பதை சித்திரவதை என்று வர்ணிக்க முடியாது. அங்கு ஒரு போதும் சித்திரவதை நடைபெறுவதுமில்லை.

  எனவே உலகத்திற்கு உண்மையை எடுத்தியம்ப வேண்டிய ஊடகவியலாளர்களான நீங்களே இப்படி ஆதாரமற்ற தகவல்களை நம்பி செய்தி வெளியிடலாமா? அது ஊடக தர்மத்திற்கு இழுக்காகாதா?

  Reply
 • palli
  palli

  பாதுகாப்பு வலையம் என்பது அரசு விமான தாக்குதல் நடத்தாத இடம். அது மக்கள் தான் கண்டுபிடித்து போகவேண்டும். ஏனென்றால் விமானியே ஒரு குத்துமதிப்பாய்தான் குண்டு போடுவார். இன்று எங்கு எல்லாம் குண்டுகள் போடபடவில்லையோ அவையெல்லாம் பாதுகாப்பு வலையம். ஏன் யாழ்பாணம் ;வவுனியா ;கொழும்பு; காலி; கண்டி நுவரெலியா இவைதானே பாதுகாப்பு வலையம் என சிலர் பின்னோட்டம் விட்டாலும் ஆச்சரியபட தேவையில்லை. மகிந்தா குடும்பத்தை மகிழ்விக்க எப்படியெல்லாம் எழுத்து போர் செய்ய வேண்டியுள்ளது. அடங்காத தமிழன் என தன்னைதானே புகழும் சங்கரிகூட அரசு வான் வழிதாக்குதலை நிறுத்தி மக்களை அழிவில் இருந்து காப்பாறறும்படி கேட்டுள்ளார். எம்மையே புலியென நினைப்பவர்கழுக்கு மக்கள் கூட புலியாகதான் படும்.

  Reply