முல்லைத்தீவில் சிக்கியுள்ள மக்களுக்கு 40 மெற்றிக்தொன் உணவு பொருட்கள்

ship-10022009.jpgபுலிகளின் பிடியில் சிக்கியுள்ள முல்லைத்தீவு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கடல்வழி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, முதற்கட்டமாக 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நேற்று  கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உடனடியாகக் கப்பல் மூலம் அனுப்பி வைக்க அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில், முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று (நேற்று) ஜனாதிபதி செயலகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

எனது பங்குபற்றலுடன், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரத்ன, பாதுகாப்புப் படைப் பிரிவின் உயர் அதிகாரிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முல்லைத்தீவில் புலிகளால் நிலக் கண்ணிவெடிகள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு தரைமார்க்கமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு கடந்த ஓரிரு வாரங்களாக தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்திற் கொண்டு தரைவழியாக அத்தியாவசிய பொருட்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்க முடியாமல் போனது. இதனைத் தவிர உணவுத் தட்டுப்பாடுகளோ வேறு சிக்கல்களோ எமக்கு இருக்கவில்லை.

இந் நிலையில் சில ஊடகங்கள் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக தவறான பிரசாரங்களையும் மேற்கொண்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களாகும். முல்லைத்தீவில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களும் எமது நாட்டு பிரஜைகளே. அவர்கள் எமது தமிழ் சகோதரர்கள். புலிகளின் செயற்பாடுகளால் எந்த தடைகள் வருகின்றபோதிலும் அந்த மக்களுக்கு கடல் வழியாகச் சரி அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் தகவல்களுக்கும், வேண்டுகோளுக்கும் அமைய ஆயிரத்து எண்ணூற்றியொரு (1,801) மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மக்களுக்கென அரசாங்கம் தரைவழியாக அனுப்பி வைத்துள்ளது.

இந் நிலையில் கப்பல் மூலம் கடல் வழியாக முல்லைத்தீவுக்கு உணவுப் பொருட்கள் அனுப்ப தீர்மானித்தமை இதுவே முதற் தடவையாகும். இன்று இரவு 8 மணியளவில் இந்த கப்பல் திருகோணமலை துறைமுகத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி புறப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் அனுப்பி வைக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க இங்கு உடன்பட்டனர்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களை முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் பொறுப்பேற்பார். அவர் இதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்க, கூட்டுறவு அமைப்புக்கள், மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பார். முதற் கட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள 40 மெற்றிக் தொன் அத்தியாவசிய பொருட்களில் அரிசி, சீனி, பருப்பு, பால் மற்றும் குழந்தைகளுக்கான பால் மா போன்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இது தவிர இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் சுகாதார நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுப்பதற்கும் விரிவாக ஆராயப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்தக் கப்பல் திரும்பும் போது காயமடைந்த அப்பாவி தமிழ் மக்களையும் ஏற்றி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் ஆலோசகர் ஏ. சி. எம். ராசிக் உட்பட முக்கியஸ்தர்களுக்கு கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *