புலிகள் கடல்வழியாக தரையிறங்குவதைத் தடுப்பதற்கு சாலை கடற்கரையில் படையினரின் ஷெல் தளம்

sri-lanka-navy.jpgமுல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதலை மேற்கொள்ளலாமென இராணுவ புலனாய்வுத்துறை எச்சரித்ததைத்தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய தளங்களை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக “லக்பிம’ ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு; சாலை கடற்கரை பகுதியில் நிலைகொண்டுள்ள 55 ஆவது படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடல் வழியாகத் தரையிறங்கி தாக்குதல் மேற்கொள்ளலாமென கடந்த வாரம் படையினரின் புலனாய்வுத்துறை எச்சரிக்கையினை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து படையினர் கடற்கரை பகுதிகளில் புதிய ஷெல் தளங்களை நிறுவியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் பரப்பளவு குறைந்து வருவதனால் 57 ஆவது படையணியையும் பின்னிருக்கை படையணியாக பேணுவதற்கு படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த படையணி விசுவமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிறுத்தப்படவுள்ளது. புதுக்குடியிருப்புக்கு தென்பகுதியில் 59 மற்றும் 53 ஆவது டிவிசன்களும், விசேட படையணி04 மற்றும் விசேட படையணி 08 என்பன நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஏ36 வீதிக்கு வடக்கே 55 மற்றும் 58 ஆவது படையணிகள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

புதுக்குடியிருப்பு தென்புறம் உள்ள படையினரின் நிலைகளை ஊடறுத்து காடுகளுக்குள் உட்புகுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.அது நிறைவேறினால் இராணுவம் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளலாமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வன்னியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப்.கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  முல்லைத்தீவின் கிழக்கு பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப்புலிகள் கடந்த 1 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னணிநிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப்புலிகளின் நோக்கம்.

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றாலியன் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *