“முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களின் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பலகோடிகள் ஒதுக்கீடு .” – சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள், தொழில் பயிற்சி, நிதிஉதவி உள்பட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்து உள்ளார்.

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்புகளை விதி 110ன் கீழ் இன்று சட்டபேரவையில் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி,

 • முகாம்களில் வசிக்கும் அகதிகளுக்கும், வெளியில் வசிக்கும் அகதிகளுக்கும் குடியுரிமை பெறுவது, இலங்கை செல்வது போன்ற இதர வசதிகளை மேம்படுத்திடவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய ஆலோசனைக்குழு அமைக்கப்படும்
 • இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
 • இலங்கை தமிழர்களின் வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.261 கோடியே 54 லட்சம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய ரூ.12 கோடியே 25 லட்சம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 43 கோடியே 61 லட்சம் என மொத்தமாக ரூ.317 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
 • தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு 3,510 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 • இலங்கை தமிழர்களின் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசு ஏற்கும்.
 • தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள, திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்க 5,000 முகாம் வாழ்  பயிற்சியளிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
 • முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்திடவும், சிறு, குறு தொழில் செய்திட ஏதுவாக, முகாம்களில் உள்ள 300 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக, ஒவ்வொரு சுய உதவி குழுவுக்கும் தலா ரூ.1.25 ஆயிரம் வழங்கப்படும்.
 • கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 321 சுய உதவி குழுக்களுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட 50 ஆயிரத்துடன், மேலும், ரூ.75,000 வழங்கப்படும்.  இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.6,14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
 • இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணக்கொடை குடும்பத்தலைவர்களுக்கு ரூ.1,500, குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.1,000 மற்றும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக ஆண்டொன்றுக்கு ரூ.21 கோடியே 49 லட்சம் செலவாகும்.
 • இலங்கை தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஒரு முறை ரூ.7 கோடி செலவினம் ஏற்படும். குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு, தலா ரூ.400 ஆணிய விலை வழங்கப்படும்.
 • இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும்.
 • இலங்கை தமிழர்களுக்கு கோ ஆப்டெக்ஸில் வழங்கப்பட்டு வந்த இலவச ஆடை, மத்திய அரசு நிர்ணயித்த திட்டத்தில் வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு  விலைப்புள்ளியின் அடிப்படையில்,  ரூ.1,790-, இருந்து, ரூ.3,473-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
 • இலங்கை தமிழர்களுக்கு ரூ.1,796 மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை  நிறுவனம் மூலம், உயர்தர பாத்திரங்கள் வழங்கப்படும்.
 • ஆண்டுதோறும் இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியும், கல்விக்காக ரூ.1 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.
 • இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ₹2,500லிருந்து ₹10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ₹3000ல் இருந்து ₹12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ₹5000ல் இருந்து ₹20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதே நேரம் ஈழத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்து கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன்கருதி பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

நீண்டகாலமாக தமிழ்நாட்டிலே அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமான வதிவிட வசதிகளையும், அவர்களுடைய எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்துள்ளீர்கள். அத்துடன் நம்முடைய சந்ததிகளின் உயர் கல்விக்கான உதவித் திட்டத்தையும் மற்றும் இலங்கையில் மீள குடியமர விரும்புகின்றவர்கள் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான குழுவினையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள்.

முதன்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்ததோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி ஆக்கபூர்வமான செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு தங்களுக்கு எமது மக்கள் சார்பாக உளம் கனிந்த நன்றியையும் தங்களது நல்லாட்சி தொடர்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். என்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *