“சிங்கள மக்கள் கோபிப்பார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தால் இனப்பிரச்சினைக்கு எப்போதும் தீர்வு கிடைக்காது.” – மனோகணேசன்

“இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுகளில் வெளிநாட்டு அனுசரணை இருப்பது இரகசியமாக வைக்க வேண்டியதில்லை. அந்த காலம் இன்று மலையேறி விட்டது. “அமெரிக்கா வருகிறது”, “இந்தியா வருகிறது” என சிங்கள மக்கள் கோபிப்பார்கள் என்ற வாதம் இனிமேல் செல்லாது. இப்படி சொல்லிக்கொண்டே இருந்தால், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒருபோதும், எந்தவொரு அரசின் கீழும் வராது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்க – கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யோசனையை நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட அவர்தான் இந்நாட்டு ஜனாதிபதி. ஆகவே இந்த அரசுடன்தான் பேச வேண்டும்.

ஐநா மனித உரிமை ஆணையக அவை நடக்க உள்ள இந்த வேளையில், இந்த பேச்சு சந்தேகத்தை கிளப்புவது இயல்பானதே. உண்மையில் சந்தேகப்பட் தேவையில்லை. இதுதான் உண்மை காரணம். இலங்கையில் இன்று தேசிய நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆகவே பேச வேண்டிய தேவை அனைத்து தரப்புக்கும் ஏற்படுகிறது.

இதற்கு அனுசரணை வழங்குகின்ற அமெரிக்க அரசாங்கம் வழமைபோல் தமிழர்களை கைவிடக்கூடாது. சமீபத்தில், ஆப்கன் நாடு மக்களை அம்போ என அமெரிக்க அரசு கை விட்டது என அமெரிக்க மக்களே கூறுகிறார்கள். தங்கள் காரியம் ஆனாலோ, ஆகாமலோ, திடீரென அமெரிக்கர்கள் தம்மை கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சம் இப்போது, அமெரிக்க நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தில் இலங்கை இனப்பிரச்சினை முன்னுரிமை பெற்ற ஒரு பிரச்சினையாக இருக்க வேண்டும். இதை தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அறிய வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இலங்கை அரசு பேச வேண்டும். அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தகைய ஒரு அரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கூட்டமைப்பு ஆவன செய்ய வேண்டும். அதேபோல் இலங்கை இனப்பிரச்சினை, வட கிழக்கை மட்டும் சார்ந்தது அல்ல. இனப்பிரச்சினையின் தாக்கங்கள மலையகம் உட்பட தென்னிலங்கை மாவட்டங்களிலும் உணரப்படுகின்றன.

தனிநாட்டு கோரிக்கை, வட கிழக்கை மட்டும் சார்ந்தது. இப்போது அப்படியல்ல. ஆகவே முழு நாட்டையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிய கட்சி என்ற அடிப்படையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுவதுதான் சால பொருத்தமானது. பேச்சுகள் நடக்க முன்னமேயே, “பேச வேண்டாம், பேச வேண்டாம்” என்ற குரலும் வடக்கிலேயே கேட்கிறது.

“பேசவே வேண்டாம்” என கூறும் தரப்புகள், கூட்டமைப்பை விட்டு விட்டு, இந்த பேச்சுகளின் பின்புலத்து தரப்பான அமெரிக்காவை நோக்கி தங்கள் கேள்விகளை திருப்ப வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, 13ம் திருத்தமும், மாகாணசபை தேர்தலும், 16ம் திருத்தமும், மொழியுரிமைகளும், என்பவை ஏற்கனவே இன்றுள்ள சட்டங்களின் அடிப்படையில் செய்யக்கூடிய “குறைந்தபட்ச” விஷயங்கள். இவற்றை செய்ய அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை இலங்கைக்கான அமெரிக்க, இந்திய தூதுவர்கள் கொடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் “சடுதியான வாபஸ்” நிறைய பேரை யோசிக்க வைக்கிறது. தங்கள் காரியம் ஆனாலோ, ஆகாமலோ, திடீரென அமெரிக்கர்கள் கைவிட்டு விடுவார்கள் என்று அமெரிக்க மக்களே இன்று பேசுகிறார்கள். ஐநா மனித உரிமை தொடர் வருவதால், இந்த சந்தேகம் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிகின்றது. இலங்கையில் உருவாகி வரும் தேசிய நெருக்கடியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு தமிழ் மக்களை எவரும் கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சம் தமிழர்களுக்கு ஏற்படுவது சகஜமானதே.

அதுபோல இனப்பிரச்சினைக்கு தீர்வு வராவிட்டால் இந்த நாடு போதும் உருப்படவே உருப்படாது என்ற உண்மையை சிங்கள மக்களும் உணரும் காலம் வருகிறது. அதற்கான அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார தேசிய நெருக்கடி சூழல் இப்போது நாட்டில் உருவாகி வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *