மாத்தையா மகிந்தவும் தம்பி பிரபாவும் ஆடும் சிங்கம் புலி ஆட்டத்தின் மரணப் பொறியில் வன்னி மக்கள் !!! : த ஜெயபாலன்

Pranab_MukherjeeJohn_Holmes_UNYogaradnam_Yogiவன்னியில் சிக்குண்ட மக்களை வெளியேற்றத் தாங்கள் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்தறைச் செயலாளர் பிரணர்ப் முகர்ஜி இந்தியப் பாராளுமன்றத்தில் நேற்று (பெப் 18ல்) தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது இந்த அவல நிலைக்கு புலிகளே காரணம் என்று வேறு குற்றமும் சாட்டி உள்ளார். இலங்கை அரசுக்கு பின்னால் இந்த யுத்தத்தை இந்தியா நடாத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவது போல் பிரணர்ப் முகர்ஜியின் பாராளுமன்ற உரை அமைந்திருந்தது. யுத்த நிறுத்தத்தை இந்தியா கோராது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே புலம்பெயர் நாடுகளில் உள்ள இந்தியத் து}தரகங்களுக்கு முன்னால் ‘இலங்கை அரசுக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து’ ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகம் கொந்தளித்து உள்ளது. தமிழ் நாட்டில் மூன்றாம் நபரொருவரும் தீக்குழிப்பு முயற்சியில் ஈடுபட்டு உயிருக்காகப் போராடிக் கொண்டு உள்ளார். பிரணர்ப் முகர்ஜியின் உரை மக்களது போராட்டங்களை முற்று முழுவதுமாகப் புறக்கணித்து இலங்கை அரசுக்கு தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வல இந்திய வெளியுறவுத்துறைச் செயலரின் உதவியை வரவேற்று இருப்பதாக பிபிசி செய்தி வெளியட்டு உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்குள் அவ்வுதவியை வரவேற்பதாக கெகலிய ரம்புக்வல தெரிவித்து உள்ளார்.

பிரணர்ப் முகர்ஜியின் கருத்துப்படவே யுஎன் செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டு உள்ளார். யுத்தத்திற்குள் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே முக்கிய  அம்சம் என அவர் தெரிவித்து உள்ளார். யுஎன் உள்ளுர் பணியாளர்களை புலிகள் தடுத்து வைத்திருப்பதாகவும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை விட்டு வெளியேறுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்கிறார்கள் என்றும் யுஎன் பெப் 16ல் குற்றம்சாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே யுஎன் பிதிரிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் இன்று (பெப் 19) இலங்கை செல்கிறார். பெப் 21 வரை இலங்கையில் தங்கவுள்ள யுஎன் மனிதாபிமான செயற்பிரிவின் அவசர உதவி இணைப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை அரச பிரிதிநிதிகளையும் ஏனைய கட்சி பிரதிநிதிகளையும் இலங்கையில் உள்ள யுஎன் ஐசிஆர்சி பிரிதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். மேலும் வவுனியாவில் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் சந்திகக உள்ளார்.

இந்தியா மற்றும் யுஎன் பிரிதிநிதிகள் இலங்கை அரசாங்கம் வன்னி மக்கள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் பற்றி கண்டுகொள்ளாத போக்கையே கொண்டுள்ளனர். இலங்கை அரசு மீதான கண்டனங்கள் மேம்போக்கானதாகவே உள்ளது. இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற வகையிலேயே செயற்படுகின்றன. இதில் இந்தியா காட்டும் அக்கறை என்பதும் அவர்களுடைய நலன் சார்ந்ததாகவே அமையும்.

புலிகளால் அண்மைக்காலமாக வெளியிடப்படும் அறிக்கைகள் உலகமே தங்களைத் தீர்த்துக்கட்ட கங்கணம் கட்டி நிற்பதாகக் குறிப்பிடுகின்றன. ”இன்றைக்கு உலக நாடுகள் எல்லாமே இந்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன் குறிப்பாக தேசிய தலைவரை அழித்து விட வேண்டும் என நினைக்கின்றன.” என்று புலிகளின் போர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோ செ யோகி பெப்ரவரி 18ல் குறிப்பிட்டு உள்ளார். அவர் மேலும் குறிப்பிடகையில் ”நாங்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகத்தின் மனசாட்சி என்பது உலகத்தின் மக்கள்தான். அந்த மக்களோடு பேசுவோம். அந்த மக்களுக்குத் தொடர்ந்து எங்கள் கருத்துகளைச் சொல்லி வைப்போம். அதன் மூலம் அரசுகளையும் அதன் எண்ணங்களையும் மாற்ற வைப்போம். ” என்றும் தெரிவித்து இருந்தார். யோ செ யோகியின் கூற்று ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் உள்ளது. ‘ஆயுதத்தை மட்டும் நம்பாதீர்கள்’ என்று பலரும் சொன்ன போது அவர்களையெல்லாம் தீர்த்துக் கட்டிவிட்டு இப்போது ‘பாசக் கயிறு’ தெரிந்தவுடன் மக்களுடன் பேசுவோம் என்று கதையளக்கிறார் யோகி.

தமிழர்களில் மிகப் பெரும்பான்மையினர் இலங்கை அரசின் மீது என்றுமே நம்பிக்கை வைத்தது கிடையாது. இலங்கை அரசு ஒரு பேரினவாத அரசு என்று அவர்கள் சரியாகவே அதனை அடையாளம் கண்டிருந்தனர். அந்த அரசு தமிழ் மக்களைக் கொல்லும் படுகொலை செய்யும் என்பதுவும் அவர்களுக்குப் புதிதல்ல. அதனால் தான் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்கள் பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கினர்.

ஆனால் இன்றைய வன்னிக் கொடுமையில் இனவாத அரசு புரிகின்ற கொடுமைகளுக்கு புலிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உடந்தையாக உள்ளனர் என்பது மிகவும் கசப்பான உண்மையாகி உள்ளது. எந்த மக்களை வைத்து தங்களை வளர்த்து வளம்படுத்திக் கொண்டார்களோ அநத மக்களை அந்த மக்களின் பொது எதிரியின் முன் பணயம் வைத்து ஒரு யுத்தம் நடைபெறுகிறது. ஒரு கை விரலுக்குள் எண்ணக் கூடிய கிராமங்களைத் தவிர அனைத்து பகுதியையும் இழந்துவிட்டு 250000 மககளுள்ள பகுதிக்குள் யுத்தம் புரிந்து இழந்தவற்றை மீட்க முடியும் என்று கூறுவது பகற் கனவு.

தங்கள் ஆயுதங்களினால் சாதிக்க முடியாது போனதை 250 000 மக்களை வைத்து  அவர்களில் சில ஆயிரம் பேரைப் பலி கொடுத்து சாதிக்கலாம் என்று புலிகள் போடும் கணக்கு இலங்கை அரச படைகளின் இன அழிப்புக்கு உதவுவதைத் தவிர வேறு எதனையும் சாதிக்கப் போவதில்லை. ஏற்கனவே பேரினவாத அரசின் அடக்குமுறைகளாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை கொடுத்த புலிகளினதும் ஏனைய அமைப்புகளினதும் அரசியலின் பயனாகவும் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களைவிட்டு பெரும்தொகையில் வெளியேறி உள்ளனர். இன்று இடம்பெறும் இந்த அவலங்கள் எஞ்சியுள்ளவர்களையும் பலியாக்குவதற்கே வழிகோலப் போகின்றது.

வார்த்தைகளுள் அடக்க முடியாத அவலம் வன்னியில். கையறு நிலையில் இரத்த உறவுகள் துடிக்கின்றன. யார் உயிரிழந்தார்கள் யார் உயிருடன் உள்ளனர் என்று அறியாத ஓலங்கள். நிமிடத்திற்கு நிமிடம் உயிர்ப் போராட்டத்தில் வன்னி மக்கள் தவிக்கின்றனர். ‘எமராஜன்’ நடத்தும் வதைகூடத்திலும் இவ்வளவு கொடுமை கற்பனை செய்யப்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. கைக்குழந்தைகள் மழலைகள் பெண்கள் வயோதிபர் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி வகைதொகையின்றி மக்கள் கொல்லப்படுகின்றனர். தினமும் நாற்பது பேர் வரை கொல்லப்படுவதாக யுஎன் மதிப்பிட்டு உள்ளது. இழப்புகள் இதனிலும் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.

யுத்தத்தால் ஏற்படும் நேரடிப் பாதிப்புகளுடன் இடம்பெயர்வினால் ஏற்படும் அதற்கே உரிய பிரச்சினைகளும் சேர்ந்து உள்ளது. மேலும் மருந்து உதவிகள் இன்மை நீர் உணவுத் தட்டுப்பாடு என்பன நிலைமையை மிகவும்  மோசமாக்கி உள்ளது. இரத்தப் போக்கை நிறுத்தவதற்கு அப்பால் எவ்வித சிக்ச்சையை மேற்கொள்வதற்கும் அங்கு மருந்தப் பொருட்களோ வசதிகளோ கிடையாது என அங்கு தமது உயிரையும் உத்தியோகத்தையும் பணயம் வைத்து 24 மணி நேரமும் பணியாற்றும் விரல் விட்டு எண்ணக் கூடிய மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப் 18 அன்று அரச படைகளின் செல் வீச்சில் 38 பேர் கொல்லப்பட்டதாக பிராந்திய சுகாதார அலுவலர் டொக்டர் துரைராஜா வரதராஜா அசோசியேடட் பிரஸ்ற்குத் தெரிவித்து உள்ளார். விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் வெவ்வேறு சம்பவங்களில் இன்று கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 150 ற்கு மேல் என மதிப்பிடுகின்றன. ஒவ்வொரு நாள் ஆட்டத்திலும் கிறிக்கட் ஸ்கோர் போன்று மரணங்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படுகிறது.

இரண்டு மூன்று கிராமங்களுக்குள் 250000 வரையான மக்கள் பல வாரங்களாக சிக்குண்டு உள்ளனர். கடைசியாக எப்போது அந்த மக்கள் நல்லுறக்கம் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு நினைவில் இருக்காது. இருக்க இடமில்லை மாற்றி உடுக்க  உடையில்லை உண்ண உணவில்லை குடிக்க நீரும் இல்லை. இவ்வளவு நெருக்கத்தில் வாழும் போதும் மழைகாலம் வேறு. நோய் பரவுவதற்கு மட்டும் குறைவு இல்லை. இந்த நோய்களினால் காயப்பட்ட பலர் அவயவங்களை இழக்கின்ற ஆபத்தும் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்து உள்ளது.

சுனாமியால் ஏற்பட்ட இயற்கை அழிவில் இழந்ததில் இருந்து மீளு முன் இந்த மனிதர்களால் மகிந்த – பிரபாகரன் என்ற யுத்தப் பிரியர்களால் உருவாக்கப்பட்ட மரணப் பொறிக்குள் வன்னி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இன்றைய இந்தக் கொடிய அவலம் வன்னி மக்களின் எதிர்காலத்தையும் இருள வைக்கப் போகின்றது. அன்புக்குரியவர்கள் கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் பெற்றோரை இழக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளை இழக்கின்றனர். உறவுகளை முற்றும் இழந்த அனாதைகளான சமூகம் ஒன்று எம்முன் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அந்த சமூகத்தில் பல நூற்றுக்கணக்கில் அவயவங்களை இழந்து ஊனமுற்றவர்களாக்கப்பட்டுக் கொண்டுள்ளனர். மழலைகள் முதல் மூத்தொர் வரை வயது பால் வேறுபாடின்றி உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்கள் மீள முடியாத அவல வாழ்வுக்குள் தள்ளப்படுக் கொண்டுள்ளனர். அதுவும் அவர்களின் பெயரிலேயே.

இந்த அவலத்தின் பிரதான குற்றவாளி யார்? துணைக் குற்றவாளி யார்? என்று நீதி விசாரணை மேற்கொள்ளவும் பட்டிமன்றம் நடத்தியும் எவ்வித பலனும் இல்லை. ஏனெனில் இந்த மக்களின் அவலம் பற்றி அந்த அரசியல் தலைமைகளுக்கு கிஞ்சித்தும் கரிசனை கிடையாது. சிங்கள மக்களின் அதிகாரத்தை தனது கைகளில் தக்க வைத்துக் கொள்ள மகிந்த மாத்தையா இந்த யுத்தத்தை நடாத்துகிறார். தமிழ் மக்களின் அதிகாரத்தை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தம்பி பிரபா இந்தப் போராட்டத்தை தொடர்கிறார். இன்றைய சூழலில் ஒருவருடைய இருப்புக்கு மற்றையவரின் இருத்தல் இன்றியமையாதது. மகிந்தா பாதி பிரபா பாதி சேர்ந்து செய்த கலவை தான் இந்த வன்னி அவலம்.

இலங்கை அரசாங்கம் ஒரு பெளத்த பேரினவாத அரசாங்கம். அதன் இருத்தலுக்கு இனவாதம் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. அதனை கடந்த அறுபது ஆண்டுகளாகப் பார்க்கலாம். பெளத்த பேரினவாதத்தின் ஒரு பக்க விளைவு தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதனைத் தொடர்ந்து புலியும். இலங்கை உட்பட சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்க இன்று இலங்கை இனவாதத்தின் உச்சிக்குச் சென்று கொண்டிருக்கிறது. இலங்கை மக்களின் நாளாந்த வாழ்நிலைப் பிரச்சினைகள் இனவாதத்திற்குள் மூழ்கிப் போய்க் கிடக்கிறது. அதற்குள் மகிந்த மாத்தையாவும் தம்பி பிரபாவும் மட்டும் மூழ்கி அதிகார முத்தெடுக்க முயற்சிக்கிறார்கள்.

ஆகவே இலங்கையின் பேரினவாத அரசுக்கு எதிரான போரட்டத்தை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமைத்துவத்தினால் இயலாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் ரிஎன்ஏ, ரியுஎல்எப், ஈபிடிபி ,ரிஎம்விபி என்பவற்றால் முடியும் என்பதல்ல. இவையெல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டாலும் காலப் போக்கில் மக்கள் புதிய சக்திகளை இனம்கண்டு அவர்களின் தலைமையில் அணி திரள வாய்ப்பு ஏற்படும். அது ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டமாகவும் அமையலாம். ஆகவே இன்று மிக அவசியமானது இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் அவலத்திற்குள் இருந்து மீள வேண்டும்.

Show More
Leave a Reply to murugan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kullan
    Kullan

    மிக அருமையான கட்டுரை. இத்துடன் ஒரு பிற்குறிப்புயை நான் இங்கு சேர்க்க விரும்புகிறேன். இந்தியா உதவவில்லை என்று கோசம் போடுபவர்கள் சிறிது சிந்திக்கவும். புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை அழித்தொழிப்பதே தடைசெய்த நாடுகளின் நோக்கம்.இந்திய மத்திய அரசோ மாநில அரசோ தம்நாட்டுச்சட்டத்துக்கு எதிராக ஒரு சொல்லுக்கூடக்கதைக்க அயலாது. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று புஸ் தொடங்கி புஸ்வாணமாகியும் போவிட்டார். இலங்கை இந்தியாவிடமும் கேட்கலாம் நான் உன்நாட்டில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை அழிக்கிறேன் நீ உதவிசெய்தே ஆகவேண்டும். அதுமட்டுமில்லை இந்தியாதான் இலங்கையின் அயல்நாடும் கூட. ஆடு கத்தியுடன் நிற்கும் கசாப்புக்கடைக்காரனிடம் தலையைக் கொடுத்துவிட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லை நீ துரோகி என்பது எல்லாம் நிஜத்துக்கு மாறானது. இந்தியா தன்நிலைப்பாட்டில் சரியாகத்தான் இருக்கிறது. புலிகள்தான் தாம் என்ன செய்தோம் செய்கிறோம் என்று தடுமாறுகிறார்கள். மக்கள் தான் புலிகள் புலிகள் தான் மக்கள் என்று மேடை மேடையாகவும் இணையத்தளங்களிலும் கத்துகிறீர்கள். சரி புலியை அழிக்கப்போராட்டம் நடக்கிறது இதை ஏன் தப்பு என்கிறீர்கள்? எனக்கு ஒன்று விளங்கவில்லை. மக்கள்தான் புலி> புலிதான் மக்கள் என்றால் மக்களைக் காப்பாற்றுவது புலியைக்காப்பாற்றுவதாகும் அல்லவா. புலிகளும் சரி புலியாதரவாளர்களும் சரி ஒருவிடயத்தில் தெளிவாய் இருங்கள். இன்றைய ஈழத்தமிழ் மக்கள் அழிவுக்குப் புலிகளைத்தவிர யாரும் காரணமாக முடியாது. மக்கள்தான் புலிகள் என்றால் நீங்கள் வீடுவீடாக இளம்பிள்ளைகளைப் பிடித்துத்திரிய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. புலிகளினதும் ஆதரவாளர்களினதும் கூற்றுப்படி மக்கள்தான் புலிகள் என்பதால் புலிமக்களை அழிக்கிறார்கள்… பின்பு ஏன்புலிகள் கத்துகிறீர்கள் மக்கள் அழிகிறார்கள் என்று. இலங்கை அரசும் இந்திய அரசும் வெளிநாட்டு அரசும் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தியே பார்த்தன. ஆனால் புலிகளும் அவர்கள் ஆதரவாளர்களும்தான் மக்கள் புலிகள் என்று கூறி மக்களுக்குள் ஒழிந்திருந்து ஈழத்தமிழ் இனத்தையே அழிக்கிறார்கள் என்பது தான் உண்மை. மக்கள் அழிகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் விடும் புலிகள் தான் மக்களைக் கைதிகளாக தம்பகுதிகளில் வைத்திருக்கிறார்கள் மக்களை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் போராடுங்கள். புலிகளுக்கு தாங்கள் யார் என்பதே தெரியாத போது எதற்குப் போராட்டம். எதிரி திறமானவன் நியாமானவன் அல்ல ஆனால் எம்மிடையே உள்ள உண்மை தமிழ் விரோதி யார் என்பது தான் முக்கியம். களையெடுப்புக் களைஎடுப்பு என்று களையே பயிரை முழுங்கிய நிலையில்தான் ஈழத்தமிழினம் இன்றுள்ளது என்பது தான் உண்மை.

    Reply
  • padamman
    padamman

    சண்டை நடக்கும் இடத்தில் மக்களுக்கு என்ன வேலை? மக்கள் அவ்விடத்தில் ஏன்? இருக்கவேண்டும் ஓவ்வொரு நாளும் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்று ஆடுநனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது.
    “பிரணர்ப் முகர்ஜியின் கருத்துப்படவே யுஎன் செயலாளர் நாயகமும் கருத்து வெளியிட்டு உள்ளார். யுத்தத்திற்குள் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே முக்கிய அம்சம் என அவர் தெரிவித்து உள்ளார்”
    மக்கள் அங்கு தாமாக சிக்கவில்லை சிக்கவைக்கபட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை உண்மையை மறைத்து இங்கு பொய்களை கூறி அனுதாபத்தையும் பணத்தையும் பெறுகின்றனர்.
    இது வரையில் தலைவரின் குடும்பத்தில் உள்ள ஒருவரும் சிறு காயங்கள் கூடி இல்லாமல் எப்படி? இருக்கின்றர்கள் அவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் பொது ஏன் மக்களை பாதுகாக்கமுடியவில்லை? இது விடயமாக இங்குள்ள புலியாட்களிடம் யாரும் கேட்கமுடியுமா?

    Reply
  • murugan
    murugan

    இன்றைக்கு ஐ.நா வின் ஜோன் ஹோம் இருபகுதியினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதித்து பொது மக்களை இயன்ற வரை காக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். கூடவே வடக்கில்பாரிய அபிவிருத்தி செய்யும் பணிகள் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதாவது புலியை அடித்து முடியுங்கள். ஜனநாயகத்தின் மீள் வருகையை துரிதமாக்குங்கள் என்பதே அவர் மறைமுகமாக சொல்லும செய்தியாகும். இது தீபத்தில் செய்தி வாசிக்கிறவைக்கு விளங்குமா அல்லது கொடி பிடித்து துள்ளுகிறவைக்கு விளங்குமா?

    Reply