அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும்!!!

இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.

ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.

பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.

அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *