“தேவைப்படுவோருக்கு உள்ளாடைகள் வழங்க நான் தயார். சதொசாவில் குறைந்த விலையில் பெறுங்கள்.” – அமைச்சர் பந்துல !

அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்படுவதாக அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.  சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள், ஆடைகள் முக்கியமாக  உள்ளாடைகள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பெரிய பேசுபொருளாகியிருந்தது. உள்ளாடைகள் தொடர்பிலாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார். உள்ளாடைகள் அதிகம் கையிருப்பில் உள்ளன. இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இதுவரை உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *