பிள்ளையார் கோவிலின் முன்பு பௌத்தகொடியின் நிறங்கள் தீட்டப்பட்டதாக குற்றச்சாட்டு – அது ஒலிம்பிக் கொடி நிறம் என நிரூபித்த அங்கஜன் இராமநாதன் !

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான குளத்தைச் சுற்றி பௌத்த கொடிகளில் காணப்படும் வர்ணங்கள் ஒத்த வகையில் நிறம் தீட்டும் செயற்பாடு இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், உடனடியாக அந்த வேலைத் திட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக மாநகர சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் ,

பௌத்த வர்ணமல்ல, அருகிலுள்ள ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் வர்ணமே பயன்படுத்தப்பட்டுள்ளது. – நகர அபிவிருத்தி அதிகார சபை.
யாழ்ப்பாணம் பிள்ளையார் கோவில் குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த வர்ணங்கள் பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவினார்.
இதன்போது, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும், சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது சமூக வலைத்தளங்களிலும் பெரிய பேசுபொருளாக ஆரம்பித்துள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்ற குளத்தில் சுற்று கம்பங்களுக்கு இவ்வாறு வர்ண நிறங்களை பொறிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பில் கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *