“தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரும் கூறியுள்ளார்.” – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகரும் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தமிழ்தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவிற்கு பிரத்தியேக விஜயம் ஒன்றினை மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றையதினம் ஜெனிவாவிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகிற வேளையிலே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அம்மையார் அவர்கள் இலங்கை சம்பந்தமான பொறுப்பு கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் என்ற அடிப்படையிலே 46/1 என்கின்ற தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வாய் மூலமான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.

அதிலே மிகவும் விசேடமாக யூன் மாதத்திலே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தோடு பொறுப்பு கூறல் விடயத்திலேயும், நல்லிணக்கத்திலேயும் தாங்கள் இணைந்து செயல்பட தயார் என்று டுவிற்றர் மூலமாக அவர் விடுத்த செய்தியை மேற்கோள்காட்டி அதை தாங்கள் கவனித்திருப்பதாகவும் அதனை நடைமுறையிலே நாங்கள் காண விரும்புகிறோம் என்று ஆரம்பித்திருக்கிறார். அது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம்.

யூன் மாதத்திலே அப்படியாக கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி அவர்கள் அந்த டுவிற்றர் செய்தியை கொடுத்தபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் அதை திரும்ப டுவிற் பண்ணி அதனை நாங்கள் அப்பொழுதே வரவேற்று, அதனை நடைமுறையிலே காண்பதற்கு, காத்திருக்கிறோம் என்று நாங்களும் கூறியிருந்தோம். அதே தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அம்மையாரும் கூறியிருக்கிறார். அதற்கு மேலதிகமாக, இலங்கையிலே மனித உரிமை நிலைமை, மோசமாகிக் கொண்டு போவதனை பல உதாரணங்களை மேற்கோள்காட்டி, அவர் கூறியிருக்கிறார். அடக்குமுறை, முன்னர் நினைவேந்தல், அப்படியான மனித உரிமை ஆர்வலர்கள், அப்படியானவர்களோடு இருந்தது. இன்றைக்கு, தொழிற்சங்க பிரதிநிதிகள், மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கலந்திருக்கிறது என்ற ஒரு குறிப்பை கூறியிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலே, அவர்களுடைய உறவுகள் எதிர்பார்க்கிற மாதிரியான நீதி கொடுக்கப்பட வேண்டும் என்று திரும்பவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார். இலங்கையிலே இருக்கின்ற, தற்போது கொண்டுவரப்பட்டிருக்கிற அவசரகால பிரகடனம் குறித்து, அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து, அதன் மூலமாக இராணுவ மயமாக்கப்படுதல், இன்னும் தீவிரமாகலாம் என்பதனையும் கூறி, உறுப்பு நாடுகள், இலங்கையை இந்த நிலைமைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதனையும் கூறி ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த வாய் மூலமான அறிக்கையை நாங்கள் ஏற்கனவே வரவேற்று இருக்கிறோம். மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவிக்கிற அதே வேளையிலே, உறுப்பு நாடுகள் இந்த விடயத்தை குறித்து, இன்றைக்கு பொதுவான அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்கின்ற போது, இலங்கை சம்பந்தமாக தங்களுடைய கரிசனையை, இந்த வாய் மூல அறிக்கையிலே எழுப்பப்பட்ட கரிசனைகளோடு ஒட்டி வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் உறுப்பு நாடுகளிடத்திலே கோரிக்கை விடுக்கிறோம்.

இந்த 46/1 என்கின்ற தீர்மானத்திலே மிகவும் விசேஷமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு சாட்சியங்களை சேகரிப்பதும், அவற்றை பாதுகாப்பதற்குமான பொறிமுறை இந்த வாய்மூல அறிக்கையில் இறுதியிலே, அது சம்பந்தமாக தான் எடுத்திருக்கிற நடவடிக்கைகளையும், ஏற்கனவே ஒரு இலட்சத்தி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஐக்கிய நாடுகள் கையிலே இருப்பதாகவும், அதனை ஆரம்பமாக கொண்டு மிகுதி வேலைகள், விரைவில் ஆரம்பமாகும் என்றும், சொல்லியிருக்கிறார்.

அந்த ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ஆவணங்கள் என்று சொல்லப்படுபவை. முன்னர் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு, 2011 ஆண்டு, அறிக்கை வெளியிட்ட நிபுணர் குழு சேகரித்த ஆவணங்கள் அது அப்பொழுதே சொல்லப்பட்டது. இரகசியமாக பேணப்படலாம். ஒரு விசாரணை வருகிறபோது மட்டும், அது வெளியிடப்படலாம் என்று. அதற்கு பின்னர் 2014 ஆம் ஆண்டு ஒரு சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட்டு அதிலே சேகரிக்கப்பட்ட ஆவணங்களும் உள்ளன.

ஆகவே இதற்கு மேலதிகமாக, இப்பொழுது இந்த ஆவணங்களை சேகரிக்கின்ற, பாதுகாக்கின்ற இந்த பொறிமுறை சம்பந்தமாகவும், அதற்கு தேவைப்படுகின்ற நிதி சம்பந்தமாகவும் அம்மையார் குறிப்பிட்டிருக்கிறார்.  இப்பொழுது பொதுச்சபை இந்த மாதம் நியூயோர்கிலே கூடவிருக்கிறது. அதிலே இதற்கு தேவையான நிதியையும் நாடுகள் வழங்கி தீர்மானிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *