புலம்பெயர் தமிழ் மக்களின் துருவ அரசியல் ஏற்படுத்தும் பதட்டமும் மிரட்டல்களும் : த ஜெயபாலன்

Stop Voilenceபிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியின் முன்ணணி அறிவிப்பாளரும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான உதயகுமாருக்கு பாரிஸில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று (பெப்ரவரி 18) மாலை பிரான்சின் புறநகர் பகுதியான டிரான்சி என்னுமிடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற மூன்று இனந்தெரியாத உறுப்பினர்கள் வீட்டிலிருந்த அவரது மனைவியிடம் ‘அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லவும் இல்லையேல் பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று கணவரிடம் கூறும்படி எச்சரித்து உள்ளனர். ‘ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உங்கள் கணவர் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று திருமதி உதயகுமாரிடம் வந்த நபர்கள் எச்சரித்து உள்ளனர்.

இப்பயமுறுத்தல் தொடர்பாக டிரான்சி பொலிசில் முறையிட்டு உள்ளதாக உதயகுமார் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். ஏற்கனவே ரிஆர்ரி தமிழ்அலைக்கு பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதயகுமார் நேற்றைய பயமுறுத்தல் எல்ரிரிஈ தரப்பிலிருந்தே வந்துள்ளதாக தான் நம்புவதாகவும் பொலிஸில் அவ்வாறே முறையிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தினால் அரசியல் அரங்கத்தில் மாற்றங்கள் ஏற்படுமா எனக் கேட்ட போது இதுவரை அவ்வாறான முடிவுகள் எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் வழமைபோல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சம்பவதினம் மாலை 5 மணியளவில் உதயகுமார் வசிக்கும் அப்பாற்மன்ட் இன்ரகொம்மில் உதயகுமாரை அழைத்து உள்ளனர். அப்போது உதயகுமார் வீட்டில் இருக்கவில்லை. இன்ரகொம்மில் திருமதி உதயகுமார் உதயகுமார் வெளியே சென்றத்தைத் தெரிவிக்கவும் வந்தவர்கள் ‘நாங்கள் உங்களோடு கொஞ்சம் கதைக்க வேண்டும்’ என்று சொல்லி உள்ளனர். அவர்களது குரலில் சந்தேகம்கொண்ட திருமதி உதயகுமார் தானே கீழே வருவதாகக் கூறிவிட்டு பிள்ளைகளை அப்பாட்மன்டில் பூட்டிவிட்டு கீழே சென்றுள்ளார். அங்கிருந்த மூவரில் ஒருவர் வாயிலுக்கு வந்து ” உதயகுமாருக்கு அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்தச் சொல்லுங்கள் இல்லாட்டி பயங்கர விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ என்று எச்சரிக்க பின்னாலிருந்து மற்றுமொரு குரல் ”ரிஆர்ரி தமிழ்அலை வானொலியையும் ரிபிசி வானொலியையும் நாம் பார்க்கவேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வோம். ஆனால் உதயகுமார் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தது. ‘அதனை அவரிடமே சொல்லுங்கள்’ என்று திருமதி உதயகுமார் கேட்கவும் ‘சொல்ற விதத்தில் சொல்லுவோம்’ என்ற வகையில் பதில் அளித்துவிட்டுச் சென்று உள்ளனர். ‘வந்தவர்கள் தங்களை அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று அறமுகப்படுத்தி உள்ளனர்.

ரிஆர்ரி வானொலியில் இடம்பெற்றுவரும் அரசியல் நிகழ்ச்சிகளான உறவுப்பாலம், அரசியல்அரங்கம் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளையும் உதயகுமார் அவர்களே தொகுத்து வழங்கிவருகின்றார். அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. உறவுப்பாலம் நிகழ்சி வாராவாரம் ஒரு அரசியல் பிரமுகரை நேயர்கள் நேரடியாக கேள்வி கேட்கும் வகையில் அமைந்தது. கடந்த வாரம் அமைச்சரும் ஈபிடிபி செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததுடன், உதயகுமாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார்.

ஞாயிறுதோறும் இடம்பெறும் அரசியல் அரங்கம் நிகழ்ச்சியும் மிகவும் பிரபல்யமானது. அதேவேளை, எல்ரிரிஈ ஆதரவாளர்களும் இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைப்பதும் உண்டு. ஆனால் கடந்த சில வாரங்களாக அந்த நிகழச்சியில் கலந்துகொள்ளும் எல்ரிரிஈ ஆதரவாளர்கள் அந்த நிகழ்ச்சியையும் வானொலியின் இயக்குநர் குகநாதனையும் தனிப்பட்டவகையில் தாக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம் ஒன்றை மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்-டக்ளசின் கலந்துரையாடல் என்ற தலைப்பில் “இனியொரு” இணையத்தளத்தில் சபா நாவலன் எழுதி இருந்தார். அதில் ‘இன அடக்கு முறை தான் புலியை உருவாக்கியது. “தோழர்” டக்ளஸ் தேவந்தாவையும் கூட உருவாக்கியது. வரிக்கு வரி இனவாதத்தைக் கக்கும் மகிந்த சிந்தனையின் வரிவடிவங்களை டக்களஸ் தேவானந்தா படித்திருக்காமல் இருக்க முடியாது. இந்த கீழ்த்தரமான சிந்தனையால் விதைக்கப்பட்ட இனவாதம், பிரிந்து வாழ்வதற்கான உணர்வை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் இன்னுமின்னும் ஆழ விதைக்கும் என்பதை அமைச்சர் தோழர் “டக்ளஸ்” சிந்திக்காமல் “மாண்புமிகு” அமைச்சராகியிருக்க முடியாது. இந்த மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம் வேறு மேற்கொள்ளும் மாண்புமிகு, “முன்நாள் இடதுசாரி” அமைச்சர் தேவானந்தா, இந்தச் சிந்தனையில் மக்கள் மயங்கி, அரச குடியேற்றத்திட்டத்திற்கு மகிந்த புரம் என்று திரு நாமம் சூட்ட “தோழரை” கேட்டுக் கொண்டார்களாம்.??!! இப்படித்தான் 14.02.09 அன்று டான் வானொலியில் உறவுப்பாலம் நிகழ்ச்சியூடாக நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த “தோழரின்” பதில்கள் மகிந்த பாசிசத்தின் இன அழிப்பின் நியாயப்படுத்தலாக நகர்ந்து சென்றது.” என்று நாவலன் காட்டமான ஒரு விமர்சனத்தை முன்வைத்தார். இறுதியில் ”மகிந்த, பிரபாகரன், தேவானந்தா போன்ற எல்லோருமே அப்பாவிகளைக் கொன்று குவித்து அவர்கள் சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டாலும், எஞ்சியிருக்கும் சொற்ப மக்களுக்கு மத்தியில் இவர்கள் யுத்தக் குற்றவாளிகளே! சொந்த மக்களையே கொன்று குவித்த சமூக விரோதிகளே!!” என்றும் சபா நாவலன் குறிப்பிட்டு இருந்தார்.

சபா நாவலனின் இவ்விமர்சனத்திற்காக அவருக்கு இன்று தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மிரட்டல் உதயகுமாருக்கு மிரட்டல் வந்த பக்கத்தில் இருந்து வரவில்லை. சபா நாவலனுக்கு வந்த மிரட்டல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வைத்த விமர்சனத்திற்காக வந்த மிரட்டல் என்கிறார் சபா நாவலன்.

ஈழத் தமிழர்களின் அரசியல் உணர்வுகள் தற்போது மிகவும் உணர்ச்சியூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இவற்றின் ஒரு வெளிப்பாடாகவே கிங்ஸ்பரி விகாரைக்கு ஜனவரி முற்பகுதியில் சில விசமிகள் தீ வைத்துள்ளனர். அதிஸ்டவசமாக தீ கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

மேலும் லண்டனில் நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் கொலைப் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகி பொலிஸில் முறையிடப்படும் வரை சென்றதுடன் சில நாட்கள் வீட்டில் தங்கி இருக்க வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டு இன்னுமொரு பாதுகாப்பான வீட்டில் தங்கவேண்டி ஏற்பட்டுள்ளது. தொழிற்கட்சி கவுன்சிலராக உள்ள போல் சத்தியநேசன் அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபன்ரிம்ஸ் ஊடாக ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியே இப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது. நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசன் எப்போதும் ஜனநாயக விழுமியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்பதும் எப்போதும் மக்கள் அணுகக் கூடிய வகையில் செயற்படும் கவுன்சிலர் என்பதும் பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சில இளைஞர்கள் தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் சிலரால் தூண்டப்பட்ட ஒரு அடையாளத்தை தேடும் நோக்கில் இவ்வாறு செயற்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக ஜனவரி 26 அன்று முன்னாள் ஈபிஆர்எல்எப் உறுப்பினரும் வெளிப்படையாக தனது அரசியல் கருத்தக்களை வெளியிடுபவருமான லாபீர் என்றழைக்கப்படும் எஸ் பரமநாதன் ஈஸ்ற்ஹாமில் வைத்து மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டதுடன் மேலும் தாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்களிடையே இருந்து வந்த துருவ அரசியல் இந்த அவலமான சூழலிலும் மக்கள் சார்ந்ததாக இல்லாமல் தாங்கள் சார்ந்த அமைப்பை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அவற்றின் வெளிப்பாடாகவே இந்த மிரட்டல் சம்பவங்கள் அமைகிறது. மேலும் சில வன்முறைக் குழுக்களும் தங்களை இன்னார் என்று அடையாளப்படுத்தி ஒரு அடையாளத்தை தங்களுக்குப் பெற்றுக் கொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான மிரட்டல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் முற்று முழுதாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம். தமிழ் மக்கள் கடந்து வந்த அரசியல் பாதை இனித் தெரிவு செய்ய வேண்டிய அரசியல் பாதை தொடர்பான விமர்சனங்கள், சுயவிமர்சனங்கள், மதிப்பீடுகள் அவசியம். வன்முறை மிரட்டல்கள் மூலம் இவற்றை நிறுத்தலாம் என்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க முற்படுவதற்கு ஒப்பானது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • padamman
    padamman

    இது புலிகளின் பலவினத்தின் வெளிப்பாடு ஜனநாயகவதிகள் இனிமேல் அவதானமாக இருக்கவேண்டும் புலிகளின் அடுத்த செயல்பாடு கொலையாக கூட இருக்கலாம்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    //மகிந்தா பிரபாகரன் தேவானந்தா ……….சொந்த மக்களையே கொன்று குவித்த சமூகவிரோதிகளே! // சபாநாவலன்
    //தேவானந்தா அளித்த பதில்கள் குறித்த மிகவும் காட்டசாட்டமான விமர்சனம்.. ………..சபா நாவலன் ஏழுதியிருந்தார் // த.ஜெயபாலன்

    மகிந்தா தேவானந்தா அவர்களின் அரசியலில் விரும்பினால் யாரும் குறைகாணமுடியும். அவர்களின் அரசியல் வேலைப்பாடுகள் ஜனநாயக வரைக்குட்பட்டவை இதை நான் மட்டுமல்ல சர்வதேசமும் ஒப்புக்கொண்டள்ளது. இது கண்முன்னால் நாம் கண்டுகொள்ளுகிற காட்சி இந்த காட்சி தெரியாமல் தான் தன் விமர்சனத்தை வைக்கிறார் பிரபாகரனுடன் சேர்த்து ஒப்பிடுகிறார் சபாநாவலன்.
    பிரபாகரன் தமிழ்மக்களின் குற்றவாளியுமல்லாமல் சர்கதேசக்குற்றவாளியும் கூட. தேவானந்தாவே மகிந்தாவே இல்லாவிட்டால் கிழக்கும் யாழ்பாணமும் ஒரு வன்னி அவயங்களை சந்தித்திருக்கும் இது நாவலனுக்கு தெரியாமல் போனாலும் த.ஜெயபாலனுக்குமா? தெரியாமல் போகிறது.

    Reply
  • palli
    palli

    சந்திரா உம்மை வைத்து கொண்டு எதையும் சமர்பிக்க வேண்டாம். தேவானந்தா சர்வதேச குற்றவாளி இல்லைஎன உமக்கு யார் சொல்லியது? எங்கெ அவர் சொல்லட்டும். பிரபாகரன் எப்படி சர்வதேச குற்றவாளிஎனில் அவரது அமைப்பு இந்தியாவிலும் பாரிசிலும் கொலை செய்தது. அவரது அமைப்புதானே ஒளிய அவர் அல்ல. இருப்பினும் அவர் சர்வதேச குற்றவாளிதான் என்பதில் பல்லிக்கும் எந்த கருத்து முரன்பாடும் இல்லை. ஆனால் மகிந்தாவின் அரசி பசிஸில் இருந்து சென்ற உதவிகர அமைப்பை சேர்ந்த பலரை மாவிலாறில் கண் முண் தெரியாமல் போட்டு தள்ளியது எந்த தேச குற்றம்.
    பாடசாலை ;தேவாலயம்; வையித்தியசாலை; உதவிகர இல்லம்; இப்படி எந்த கட்டத்திலும் தாக்குதல் நடத்தகூடாத இடங்களிலும் மகிந்தா தாக்குதல் நடத்தியபோது உமக்கு அவையெல்லாம் சர்வதேச குற்றம்போல் தெரியவில்லையா?? தோழர் இந்தியாவில் ஒருநேர சாப்பாட்டுக்கே கூலி வேலை செய்துதான் சாப்பிடும் நிலையில் உள்ளவர்கள், ஒரு பிரச்சனைபற்றி விசாரிக்க வந்தபோது கண்மூடிதனமாய் சுட்டாரே?(சூலைமேட்டில்) அது உமக்கு என்ன தமாஸுக்கு செய்தாரா?? வெள்ளை வான் இன்பதை அறிமுகம் செய்து வைத்த நாயகன் யார்?? இப்படி கேட்டவையல்ல பார்த்தவைகளையே பலதை சொல்லலாம். தோழரின் சரித்திரம் வேண்டுமெனில் அவரது மட்டகளப்பு சிறை வாழ்க்கையில் இருந்து பார்க்கவும். புலி உடன் கொல்லும்; தோழர் இரண்டு நாள் கழித்து கொல்லுவார். தோழர் சரியான நிர்வாகத்தை தமிழர்க்கு கொடுத்து இருந்தால் புலியுடன் இன்று வன்னியில் இத்தனை மக்கள் மாட்டுபட்டு இருக்க மாட்டார்கள்; ஒரு பதவி கொடுத்ததுக்கே ஊருக்கே பேர்மாற்றம் செய்ய துடிக்கும் இந்த …..மகிந்தாவுக்கு நன்றிகடனுக்காக ஏன் …….. என யோசிக்க கூடாது. எந்த… தமிழர்மீது சவாரி செய்யவோ அல்லது கிசு கிசு மூட்டவோ நினைத்தால் எப்படி வருவார்கள் என்பதை பிரபா தோழர் ஆகியோரது முகங்கள் போல் உரிக்கபடும் என்பதுக்கு நாவலனின் கட்டுரை ஒரு முன்னோட்டம். புலியை விமர்சித்தால் பாராட்டும் பகுத்தறிவு விம்பங்கள் தோழரையோ அரசையோ எதாவது சொன்னால் ஏந்தான் நம்பியாராக மாறிவிடுகிறார்கள். இதன் விடையுடன் தொடரும் பல்லி..

    Reply
  • ashroffali
    ashroffali

    திரு ஜெயபாலன் அவர்களே
    //இன்றைய இந்த அவலத்திற்கு முழு முதற் காரணமாயுள்ள இலங்கை அரசு மீதும் அதன் ஆதரவு சக்திகள் மீதும் அதேசமயம் போராட்டம் என்ற பெயரில் மக்களைப் பணயம் வைத்துள்ள எல்ரிரிஈ மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. இவை ஒரு பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.//

    அவலத்திற்கு முழு முதற் காரணம் இலங்கை அரசாங்கமா? அப்படியெனில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் மாவிலாற்றை மூடி வலிய சண்டையை இழுத்தது புலிகள் இல்லையென்று வாதிடப் போகின்றீர்களா? சமாதான காலத்தில் வாரம் ஒரு தடவை மக்களை உசுப்பி விட்டு போருக்கு அனுமதி கொடு தலைவா என்று பம்மாத்து ஆர்ப்பாட்டம் நடத்தியதும் அரசாங்கம் தான் என்று சொல்ல வருகின்றீர்களா? உண்மையை உணர்ந்து எழுதுங்கள் நண்பரே….

    தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயமானது. ஆனால் புலிகளின் அராஜகம் அநியாயமானது. இதுதான் அரசாங்கத்தின் கொள்கை. எனவே தான் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வும் புலிகளுக்கு இராணுவ வழியிலான பதிலும் என்பதாக அரசாங்கம் தெளிவாக பிரகடனப்படுத்தியுள்ளது. அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தமிழ் மக்களின் அத்தனை அவலங்களுக்கும் முழுமுதற் காரணி மட்டுமல்ல ஏகபோக காரணியே புலிகள் தான். ஒட்டுமொத்த குற்றவாளிகள் அவர்கள் மட்டும் தான்.

    Reply
  • palli
    palli

    உதயகுமாரை மிரட்டியது யார்? அவரது பால்ய நண்பர்களா?? இது தமிழ் அலைக்கும்; தமிழ் ஒலிக்கும் உள்ள பிரச்சனையா?? தமிழ் ஒலியின் நாயகனாக இருக்கும் தர்ஸன் என்பவர் தமிழ்அலையை பூட்ட பலவழிகளில் முயற்ச்சி செய்வதாக பரிஸில் இருக்கும் சிலர் சொல்லுவது உன்மையா?? இந்த தர்ஸன் என்பவர் பொட்டரின் நேரடி தொடர்பில் இயங்குவதாக தமிழ் ஒலியில் நேரடியாகவே ஏற்றுகொண்டுள்ளார். ஆக இது தர்ஸனின் புலியா?? அல்லது பிரபாவின் புலியாஎன தெரிந்துகொள்வது அவசியம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி உங்களுடைய பின்னோட்டமும் கருத்தும் எமக்கு பரீச்சியமானவை. எல்லா சம்பவம் நடக்கும் போதும் நான் பக்கத்தில் நின்றேன் பார்த்தேன் என்பது போலவே இருக்கும். சபாநாவலனின் புனைவுகளையும் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்றுக்கொண்ட நீர் கூட்டணி வைத்து செயல்படுவதற்கும் உரிமையுண்டு. சாக்கடையை நோக்கி பயணிப்பவர்களை யாரால் தடுத்து நிறுத்தமுடியும்?

    ஈழத் தமிழ்மக்களின் உரிமையும் தலைமையையும் ஈழத் தமிழ்மக்களாலேயே முடிவெடுக்கப்படும். நிச்சியம் புலம்பெயர் தமிழ்மக்களால் அல்ல.
    ஈழத்தமிழ்மக்களின் தலைமைக்கு உரிமைகோருபவர்கள் ஆனந்தசங்கரி டக்கிளஸ் தேவானந்தா சிறீதரன் சித்தாத்தன் கருணா பிள்ளையானே வேறுயாரும் அல்ல புலம்பெயர்தமிழர்கள் இவர்களுக்குள் ஒரு ஒருமைப்பாட்டை வளர்பதற்கு பாடுபடவேண்டுமே ஒழிய இவர்கள் எல்லோரையும் கரிச்சுக்கொட்டுவதல்ல. இந்த வேலையைத் தானே பல்லிதனது பணியாகச் செய்து வந்தது. எல்லாமே நல்லதல்ல. உள்ளவற்றில் நல்லதை தெரிவு செய்கிறபண்பு சிறந்த அரசியலே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலிகளின் ஆதரவாளர்களும், புலிகளை வைத்து பிழைப்பு நடத்தபவர்களுக்கும் இப்ப உள்ள முக்கிய பிரைச்சினையே பணவரவு குறைந்தது தான். அதற்கு முக்கிய காரணம் ரிபிசி, ரிஆர்ரி தமிழலை போன்ற வானொலிகளின் அரசியல் நிகழ்ச்சிகளால் புலிகளின் வண்டவாளங்கள் தண்டவாளங்களில் ஏறத் தொடங்கியதே. இதனால் வானொலிகளில் புலிகளை அரிதாக விமர்சித்து வந்த புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று பலமாக பலராக புலிகளை விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வானலைகளில் அசிங்கமாகவும், அநாகரீகமாகவும் கதைப்பதோடு இப்படி கொலை மிரட்டல்களையும் விடுத்து வருகின்றார்கள். இப்படியான செயல்களால் இவர்கள் இன்னும் புலத்திலுள்ள தமிழ்மக்களின் விரோதத்தைத் தான் சம்பாதிப்பதோடு அந்தந்த நாட்டில் புலிகளுக்கெதிராக உள்ள தடைகளை திடமாக வைத்திருக்கவும் உதவப்போகின்றார்கள். இதனால் வன்னியைப் பற்றி என்றுமே எவருமே திரும்பவிடாமல் செய்யப் போகின்றார்கள். ஆனால் இலங்கை அரசிற்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்து இந்த நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு உதவும் நிலையும் தோன்றும். மொத்தத்தில் முழுத்தமிழினின் தலையிலும் இவர்கள் கல்லையல்ல பாறங்கல்லைப் போடுகின்றார்கள். ஆனால் அந்த கற்கள் விரைவில் இவர்கள் தலைகளையே பதம் பார்க்கப் போகின்றது.

    Reply
  • palli
    palli

    சந்திரன் பல்லி பார்த்துதா பக்கத்தில் நின்றதா என என்பது பிரச்சனையல்ல. பல்லி சொல்லும் விடயங்களில் உன்மை இருக்கா இல்லையா?? பல்லி சிவப்பு புத்தகம் படிக்கவில்லை. தோழருடன் செருப்புடனும் அலைந்த அனுபவமும் உண்டு. அதே போல் நடேசரின் பச்சை மட்டை அனுபவமும் உண்டு. எல்லாதுக்கும் மேலாக சந்திரன் போன்ற போலி ஜனனாயகவதிகளின் சுயரூபம் பல்லிக்கு அத்துபடி. ஆக உங்கள் சிவப்பு விடயங்களை பல்லியிடம் காட்ட வேண்டாம். கருத்துக்கு கருத்தை சொல்லும்…….. அம்முட்டுதான் இப்போதைக்கு.

    Reply
  • palli
    palli

    // ஆனந்தசங்கரி டக்கிளஸ் தேவானந்தா சிறீதரன் சித்தாத்தன் கருணா பிள்ளையானே வேறுயாரும் அல்ல புலம்பெயர்தமிழர்கள் இவர்களுக்குள் ஒரு ஒருமைப்பாட்டை வளர்பதற்கு பாடுபடவேண்டுமே ஒழிய இவர்கள் எல்லோரையும் கரிச்சுக்கொட்டுவதல்ல//

    இவர்கள் அனைவரையும் தோழில் சுமக்க அத்தனை பேருக்கும் அறிவு இருக்கோ இல்லையோ இனையதளங்கள் உண்டு. அதில் அதில் அவர்களது சிவகாசி வெடிகள் அடிக்கடி வெடிக்கும். ஆனால் தேசம் அப்படியல்ல எனி ஒரு பொறுக்கிதனமான அரசியல்வாதி(தமிழில்) வரவிடகூடாது என பாடுபடுகிறது. பாராட்ட மாலை போட பலர் உண்டு. தவறை சுட்டி காட்ட பல்லி போல் சிலரே உண்டு. தேசத்தையே மூட இலக்கிய நாணத்தோடு முற்பட்ட பண்பாளர்களுக்கு பல்லி இப்படிதான் பதில் பின்னோட்டம் விடும். இதுவரை பல்லி சொல்லிய விடயம் ஏதாவது தவாறான தகவல் என்பதை சுட்டி காட்டும். பல்லி ஏற்றுகொள்ளும். அதை விட்டு தோழருக்கு முதுகில் மச்சம். அதனால் அவர் செய்தால் சரியாய் இருக்கும் என கொட்டாவி விட்டால் அதை கேக்க பல்லி ஒன்றும் புலம்பெயர் ஜனனாயகவாதி இல்லை. ஒரு சராசரி மானிடன்.

    Reply
  • esan
    esan

    பெரியோரே….. உங்களின் திறமைகளை தமிழர்களை காப்பதில் திசைதிருப்புங்கள்

    Reply
  • lal athvani
    lal athvani

    தமிழ் மக்களை பாதுகாப்பது என்றால் இந்திய அரசிடம் சேர்ந்து செயற்ப்படவதுதான் மிகவும் சரியானது என்றுமே இலங்கை அரசை நம்பமுடியாது இந்திய படைகளழன் உதவியால் மட்டுமே மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற முடியும் ஆகவே இந்திய உயர் ஸ்தானிகர் முன்பாக சென்று மக்களை பாதகாப்பாக வெளியேற்ற உதவுமாறு வேண்டு கோள்விடுவதே சிறபானது

    விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அதன் ஆதரவாளர்களும் எப்பவுமே எதிரிடையாக செயற்ப்படுவதே தவறாகிவிட்டதை இன்னும் உணரவில்லை.

    Reply