“என் தொடர்பான விமர்சனத்தை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” – எஸ்.வியாழேந்திரன் காட்டம் !

“லொஹான் ரத்வத்தையினை செங்கம்பள விரிப்புடன் நான் வரவேற்றதை உறுதிப்படுத்தினால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.” என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை இன்று (திங்கட்கிழமை) காலை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தினார்.

“எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள்.” என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவி்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே  இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடாத்தியிருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும்  கருத்து தெரிவித்த அவர்,

சமூக,சில ஊடகத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்து நாடாளுமன்ற  உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சில கருத்துகளை கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. முகப்புத்தகத்திலும் இணையத்திலும் வந்த செய்திகளைப்பார்த்து ஊடகசந்திப்பினை செய்யாமல் என்னிடம் கேட்டிருந்தால் நான் விளக்கமளித்திருப்பேன்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கபில அத்துக்கொரல, இராஜாங்க அமைச்சர் லொகாத் ரத்வத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதிலக அவர்களும் மட்டக்களப்பு பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு வருகைதந்திருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் 30இலட்சம் ரூபா நிதியொதுக்கப்படுகின்றது. வரவிருக்கின்ற வரவு செலவுத்திட்ட விடயத்தினை கட்சிசார்ந்தவர்களுடனும் கலந்துரையாடி கிராம மட்டத்துடன் கலந்துரையாடுவதற்காகவும் அவர்கள் வருகைதந்திருந்தனர். அவர்கள் வருகைதந்த பின்னர் நானும் இந்த மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற அடிப்படையில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொழும்பு தலைமையகத்தினால் தீர்மானிக்கப்பட்டு அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.அந்த அடிப்படையிலேயே அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்தார்கள். இந்த நிலையில் ஒரு சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. வியாழேந்திரன்,சந்திரகுமார் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தார். வந்தவர் வியாழேந்திரன், சந்திரகுமாருடன் சந்திப்பினை நடாத்திவிட்டுசென்றார்,வியாழேந்திரன் லொஹான் ரத்வத்தைக்கு செங்கம்பல வரவேற்பளித்தார் போன்ற குற்றச்சாட்டுகளை முகப்புத்தகங்கள் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் கோவிந்தன் கருணாகரம் அவர்கள் முன்வைத்திருந்தார்.

இந்தவேளையில் நான் ஒரு பகிரங்க சவாலை விடுக்கின்றேன்.லொகான் ரத்வத்தை உட்பட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை நானோ சந்திரகுமாரோ தனிப்பட்ட ரீதியாக அழைத்து கூட்டம் நடாத்தவில்லை. தலைமைப்பீடத்தினால் தீர்மானப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை நாங்கள் அழைக்கவில்லை, லொஹான் ரத்வத்தைக்கு நான் செங்கம்பல வரவேற்பை வழங்கவில்லை. அவர் என்னுடனோ சந்திரகுமாருடனோ தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடவில்லை.கூட்டம் ஆரம்பித்து இறுதிநேரத்திலேயே நான் அதில் கலந்துகொண்டேன்.

தனிப்பட்ட ரீதியாக நானோ,சந்திரகுமாரோ லொகான் ரத்வத்தையினை மட்டக்களப்புக்கு அழைத்துவந்ததை நிரூபிக்கவேண்டும். செங்கம்பளம் விரித்தார்களா என்பதை நிரூபிக்கவேண்டும்,என்னோடும்,சந்திரகுமாரோடும் தனிப்பட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்களா என்பதை நிரூபிக்கவேண்டும். அவ்வாறு நிரூபித்தால் 24மணி நேரத்திற்குள் நான் எனது அரசியல்வாழ்விலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்காவிட்டால் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அரசியல்வாதிகளினால் அரசியலில் இருந்து ஒதுங்க முடியுமா என்று சவால்விடுகின்றேன்.

மட்டக்களப்பு மக்கள் மீது தங்களது வங்குரோத்து அரசியலை செய்வதற்காக,தங்களது கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுப்பதற்காக பிழையான கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லமுடியாது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *