நானே கடைசி இறைத் தூதர் எனக்கூறிய பள்ளித் தலைமையாசிரியருக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்த பள்ளித் தலைமையாசிரியர் (பெண்) ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானில் லூகூர் நகரில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் தன்வீர். இவர் முகமது நபிகள் கடைசி இறைத் தூதர் இல்லை என்றும், நானே கடைசி இறைத் தூதர் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக மதகுரு ஒருவர் 2003ஆம் ஆண்டு லாகூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் தன்வீர் மீது புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தன்வீரின் வழக்கறிஞர் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தொடர்ந்து வாதாடி வந்தார். எனினும் அரசுத் தரப்பு வழக்கறிஞர், தன்வீரின் மனநிலை நலமாக இருப்பதாக சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

இதன் காரணமாக தற்போது மதநிந்தனை வழக்கில் தன்வீருக்குத் தூக்கு தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி மன்சூர் அகமத் தீர்ப்பு வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை மதநிந்தனை  தொடர்பான மத விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக மத விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் மீது வழக்குகள் பாய்கின்றன. 1987ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1,800க்கும் அதிகமானவர்கள் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், தனிப்பட்ட விரோதங்களுக்குப் பழிவாங்குவதற்காக மத நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *