“தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய இந்தியா துணை நிற்கும்.” – இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

“ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இவை நிறைவேற இந்தியா துணை நிற்கும்.” என இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர், இரவு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியலாளர்களைச் சந்தித்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து அரசியல் பிரமுகர்களையும், கல்வியலாளர்களையும் வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரவு நேர விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஷ்  பிரேமச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரும், அரசியல் ஆய்வாளர்களான கே.ரி. கணேசலிங்கம், நிலாந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம், வடக்கு – கிழக்கு இணைப்பு, வடக்கில் இந்தியத் தரப்பின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்  தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *