புத்தளம் தொகுதி நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இன்று மீள் வாக்குபதிவு

sri-lanka-election.jpgபுத்தளம் தொகுதி கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நாயக்கர்சேனை கிராமத்திலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் இன்று தேர்தல் மீள்வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. குறிப்பிட்ட பாடசாலையில் இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு அனைவரது கவனமும் இந்தக் கிராமத்தின் மீது திரும்பியுள்ளது. நாயக்கர்சேனை பாடசாலையில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 14ம் திகதி வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடந்தது. இதன்போது புத்தளம் மாவட்டத்தில் மேற்படி தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தச் சாவடியின் வாக்குகளை தேர்தல்கள் ஆணையாளர் ரத்துச் செய்திருந்தார். இதனையொட்டியே இவ்வாக்குச் சாவடியில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் இந்தகுட்டித் தேர்தலையிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயக் கிராமமான நாயக்கர் சேனையில் 1195 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இதுவரையும் வெளியிடப்படவில்லை. இரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை சாவடியைத் தவிர்த்து கிடைக்கப்பெற்ற உத்தியோகப் பற்றற்ற முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 5 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. நாயக்கர் சேனை முடிவுகள் அறிவிக்கப்பட்டால் இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *