“13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.” – எம்.ஏ.சுமந்திரன்

13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக் காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய இலட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம். இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம். வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன்.

அத்துமீறி பிரவேசித்து எங்களுடைய வளங்களை சுரண்டுவதால் மீன் வளங்கள் அற்றுப்போகின்றது. 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

அந்த சட்டத்தை அமுல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும். அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என எச்சரித்தது.இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும். ஆகவே சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பிலும் சில கருத்துப் பரிமாற்றங்களை செய்து இருக்கின்றோம்.இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசியதன் தொடர்ச்சியாக 13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது. முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதாக இருந்தால் காவற்துறை அதிகாரத்தையும் அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் காவற்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையாக 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் என்றார்.

மேற்படி சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தனும் பங்கேற்றிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *