“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளமுடியாது.” – சஜித் பிரேமதாஸ

“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் புரிந்துகொள்ளமுடியாது.” என  எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடைக்கு அண்மையிலுள்ள மீனவ சமூகத்தினருடன் வியாழக்கிழமை (14) எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது அவர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், அதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் அம்பலாங்கொடையில் இடம்பெற்றுவரும் மீன்பிடித்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனூடாக மீனவசமூகத்தின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தப்படும். கடலால் சூழப்பட்டிருக்கும் எமது நாட்டில் கடற்பிராந்தியங்களுக்கு அண்மையில் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைந்திருக்கின்றன.

விசாலமான கடற்பிராந்தியம் எமது நாட்டின்வசமுள்ள போதிலும், மொத்தத்தேசிய உற்பத்தியில் மீன்பிடித்துறையின் பங்களிப்பு வெறுமனே 1.2 – 1.3 சதவீதமாக மாத்திரமே காணப்படுகின்றது. மீன்பிடி நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப்பெறும் மீன்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான மீன்கள் மாத்திரமே ஏற்றுமதிக்கு உகந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு நாட்டின் மீன்பிடித்துறையில் பாரிய புத்தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதற்கு நீண்டகால அடிப்படையிலான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படுவதுடன் அது 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றமடைவதாக இருக்கக்கூடாது.

நாட்டிற்குத் தேவையான மீனுற்பத்தி உள்நாட்டிலேயே இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவகையில் அதன் உற்பத்தியை விரிவுபடுத்துவதே மீன்பிடித்துறையைப் பொறுத்தவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நீண்டகால இலக்காகக் காணப்படுகின்றது. அதுபற்றிய தெளிவுடைய நிபுணர் குழுவொன்று கட்சியில் இருப்பதுடன் அவர்களால் மீன்பிடித்துறைசார் கொள்கைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் புரிந்துகொள்ளமுடியாது.

பல்தேசியக்கம்பனிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக மாறியிருக்கும் தற்போதைய அரசாங்கம், எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்னமும் உரியவாறு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையிலான கொள்கைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துவருகின்றது.

எனவே மீனவசமூகத்தின் பிரச்சினைகளை நன்கறிந்த மீனவர்களிடமே அதுபற்றிக் கேட்டறிந்து, அவர்களின் யோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, கொள்கைத்திட்டத்தைத் தயாரித்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *