பிறர் உயிரைப்பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை; பிரதமர் விக்கிரமநாயக்க

srilanka-parliament.jpgஎவருக்கும் பிறிதொருவரது உயிரைப் பறிக்கும் உரிமை கிடையாதென  வெள்ளிக்கிழமை சபையில் வலியுறுத்தி தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, இதன் காரணமாகவே நாட்டில் ஏனைய பிரச்சினைகள் இருப்பினும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அனுதாப பிரேரணையில் பேசும் போதே பிரதமர் விக்கிரம நாயக்க இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பூரணத்துவமிக்க மனிதர், ஒரு அரசியல்வாதி என்பதற்கு அப்பால் சிறந்த மனிதத்துவம் மிக்கவர் என்ற வகையில் தான் நான் அவரைமதித்தேன். ஜெயராஜ் என்பவர் சிறந்த மனிதர், பண்பானவர், நட்பானவர்.

அவர் மரணிக்கவில்லை, அவரது உயிரை பிரித்தெடுத்துவிட்டார்கள். மக்களுக்கென சேவைகளை தொடர அவருக்கு இன்னும் நீண்ட காலம் இருந்த போதிலும் அவரது உயிர் பறித்தெடுக்கப்பட்டமையே எமக்கு அதிக கவலையளிக்கிறது. ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை பலரும் நம்பினார்கள். அதனால் தான் அவர் பாதுகாப்பற்ற இடங்களுக்கும் சென்றார். இந்த நிலையிலேயே அவர் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளானார். இம் மாதிரியான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதற்காகத் தான் பயங்கரவாதத்தை ஒழித்துவருகிறது.

எவர்க்கும் பிறிதொருவரது உயிரை பறிக்கும் உரிமை கிடையாது. இதனால் தான் ஏனைய பிரச்சினைகள் இன்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதை அரசாங்கம் முக்கிய பிரச்சினையாக எடுத்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. ஜெயராஜ் கல்வி தொடர்பாக மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். இதனால் தான் அவர் கல்வி மன்றமொன்றையும் ஏற்படுத்தி செயற்பட்டு வந்தார். பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்த அரசியல்வாதியொருவரை இழந்துவிட்டோம். ஜெயராஜ் பிறப்பில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தனது, மதத்துக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் ஏனைய மதங்கள் தொடர்பாகவும் அக்கறையுடனும் நட்புடனும் செயற்பட்டுவந்தார். நாம் மதத்துக்கு மதம் வேறுபட்டு முரண்பட்டுக்கொண்டு ஏனையவர்களின் உரிமைகளை கூறு போடுவது தவறு.

ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சகல துறைகளிலும் தனித்துவம் பெற்று தெரிகிறார். அவரது மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்ப உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *