“ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது..” – அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி !

பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் மற்றும் கட்சி  செயற்பாட்டாளர்களும், மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும், வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன்,  விவசாயிகளுக்கான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோஷம் எழுப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. தொழில் சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும், நிர்வாகங்களின் அடாவடி முடிவுக்கு வரவேண்டும் எனவும் போராட்டத்தில்போது குரல் எழுப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது ,

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது.  ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன.  இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.” -என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *