“கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார்.” – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றச்சாட்டு !

“கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத் பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனுராதா ஜகம்பத் மூன்று விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார். ஒன்று, பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்களில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார். மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்கு தட்டப்படும் நிலையே உருவாகும். விழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஸ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *