பிரான்ஸில் பொலிஸ் அதிகாரி படுகொலை! ஆறு தமிழர்கள் கைது!!! : த ஜெயபாலன்

French_Policeபெப்ரவரி 21ல் பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுனவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சென்சன்ரனிஸ் பகுதி பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டு உள்ளார். அயூலின் டான்லேம் (33) என்ற பொலிஸ் அதிகாரியே இச்சம்பவத்தில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட ஆறு தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வெளியான மரண விசாரணைகளின்படி துப்பாக்கியில் இருந்து 14 தோட்டாக்கள் சுடப்பட்டு இருந்ததாகவும் படுகொலை செய்யப்பட்ட அதிகாரியின் தலைப் பகுதியில் இரு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அவற்றில் ஒன்றே உயிரிழப்பிற்குக் காரணமாக அமைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொல்லப்பட்டவர் மது போதையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் மரண விசாரணையில் தெரியவந்து உள்ளது.

லூ பரிசியன் உட்பட பிரானிஸின் தேசியப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பரிஸின் புறநகர்ப் பகுதியான லாக்குறுன பாரிஸின் லா சப்பலுக்கு ஒப்பானது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதி. அங்குள்ள கத்ருட் பகுதிக்கு அருகாமையில் மயூரிஸ் பிரோ வீதியில் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் பொலிஸ் அதகாரி அயூலீன் டான்லேம் வந்தள்ளார். அப்போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாகியது என்றும் முடிவில் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பறித்தே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிஸார் மறுநாள் காலையே ஒரு பெண் உட்பட ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டவர் ஒருவரின் தாயார் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

பரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ள பிபிசி சந்தேசயா (பிபிசி சிங்கள மொழிச் சேவை) இப்படுகொலை தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறுபேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றது. சில புலி எதிர்ப்பு இணையங்களும் இச்சம்பவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி உள்ளன.

தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகளின்படி இச்சம்பவம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கும் அப்பகுதியில் இருக்கும் சில தமிழர்களுக்கும் இடையேயான விவகாரம் எனத் தெரியவருகிறது. இச்சம்பவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டது அல்ல என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றுமொரு செய்தி இவர்களுக்கிடையே பணம் பரிமாறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. இச்செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லை.

இதற்கிடையே சென்சென்ரனிஸ் பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மோசடிக் குற்றங்கள் தொடர்பாக தண்டனை பெற்று இவ்வாரம் விடுதலையாகி உள்ளதாக அப்பகுதி உள்ளுர்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அயூலின் டான்லேம் மீதும் அவ்வாறான ஒரு சம்பவம் தொடர்பான பதிவு உள்ளது. ஆயினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்ட்டிருக்கவில்லை. தொடர்ந்தும் பொலிஸ் அதிகாரியாகவே பணியாற்றி வந்தார்.

சம்பவத்தின் போது விடுப்பில் இருந்த அயூலின் டான்லேம் சிவில் உடையில் தனது துப்பாக்கியுடன் சென்றிருந்தமை விசாரணைகளின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிந்திய செய்திகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் அயூலின் டான்லேம் இன் துப்பாக்கியைப் பறித்து வானத்தை நோக்கியும் தரையை நோக்கியும் வேட்டுக்களைத் தீர்த்ததாகத் தெரிவித்து உள்ளார். அயூலின் டான்லேம் மீது பாய்ந்த இரு குண்டுகளையும் யார் சுட்டது என்பது இன்னும் அறியப்படவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கிறது.

மேற்கு நாடொன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கொலை தொடர்பில் தமிழர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது இதுவே முதற் தடவையாகும்.

._._._._._.

பொலிஸ் அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக லு பரிசியன் பத்திரிகையில் வெளியான செய்தியின் தமிழ் வடிவம் கீழே பிரசுரிக்கப்பட்டு உள்ளது. – தமிழில் சபா நாவலன் (நன்றி : இனியொரு)

பிரான்சில் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : இலங்கையர்கள் கைது

25 இற்கும் 30 இற்கும் இடைப்பட்ட வயதை உடைய ஒரு பெண் உள்பட 5 பிரஞ்சு இலங்கையர்கள் நேற்றுக்காலை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரிலியன் டான்செல்ம் என்ற பரிஸ் 34 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிஸ் புற நகர்ப் பகுதியான லா குருனேவ் என்ற இடத்தில் கொலை செய்யப்படது தொடர்பான இந்த இலங்கையர்கள் மீதான வழக்கு இன்று காலை விசாரணைக்கு கொண்டுவரப்பட்டு சந்தேக நபர்களை நாளைகாலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்தப் பொலீஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியானது கொலைசெய்யப்பட்ட அதே கட்டிடத் தொடரிலுள்ள குப்பைதொட்டியொன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையிலேயே இவர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் சம்பவம் நடைபெற்ற நேரம் கடைமையில் ஈடுபட்டிருக்கவில்லை. தேசிய போலிஸ் இணையம் என்ற பொலிஸ் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த Fபாபியன் மொடிகொம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட ஒரிலியன் டான்செல்ம் சண்டையொன்றில் சிக்குண்டிருக்கலாம் எனவும் ஆனால் அதற்கான காரணங்கள் தெளிவற்றதாக உள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட உத்தியோகத்தர் முன்னதாக ஊழல் குற்றச்சாட்டொன்றின் சாட்சியாக பொலிஸ் சேவைப்பிரிவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போதும், பின்னர் சந்தேகம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார். இதே இடத்தில் கடமையாற்றும் பிறிதொரு பொலீஸ் உத்தியோகத்தரும் ஊழல் குற்றச்சாட்டொன்றின் பெயரில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட போதும், இன்றைய விசாரணைகளின் படி, இவ்விரு சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவரவில்லை எனப் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

பொபினி பொலீஸ் பிரிவின் பிந்திய தகவலின் அடிப்படையில், பழிவாங்கல், குடிபோதையிலான மோதல், பணத்தகராறு போன்ற எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • A.J.KHAN
    A.J.KHAN

    /துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட விரோதமாக விசா பெறமுயற்சித்து இருந்ததாகவும் அவர்களுக்கு அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஊடாக அயூலின் டான்லேம் இன் தொடர்பு கிட்டியதாகவும் லக்குறுனவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. /-
    இதை கவனிக்க வேண்டும், இந்தியரல்லாத மூலங்களிலிருந்தும் இந்த கோணத்தில் ஆதாரங்கள் உள்ளன. தகவல் தொடர்பு சாதனங்களில் மோசடி(டெலி கார்ட்), ஆயுத,..போன்ற நம்பர்2, தொழில்களில், “பாக்கிஸ்த்தானியர்கள்” சப்பிப்போட்டதைதான் இலங்கைத் தமிழரிடம்.. கையளிக்கப் பட்டிருக்கிறது. எப்படி மேற்குலகிலும் இது சாத்தியம்?. நீண்ட வரலாறு உண்டு!, ஐரோப்பிய-அரபு எல்லைகளில் (ஓரியண்ட்) “கலாச்சார ஒவ்வாமை” பயங்கரவாத பிரச்சனையாக பிரதிபலிக்கிறது. ஆனால் மேற்குலகுக்கு(அல்லது அதிலிருந்து பிரிக்கமுடியாத) இணையாக வளர்ந்துவிட்ட(பொருளாதாரத்தில்) “ஓரியண்டே” இதற்கு உதவி செய்கிறது. பாகிஸ்தான் இதற்குள் அடக்கம். ஆனால் இதற்குள் அடங்காத, வெறும் பணத்திற்காக, “தமிழர்கள்” இதற்குள் மாட்டிக் கொள்வது நியாயமா?.

    Reply
  • thurai
    thurai

    புலத்தில் வாழும் தமிழர்கள், ஈழத்தமிழர் பிரச்சினை பற்ரிப்பேசுவதை குறைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தாங்கள் வாழும் நாடுகளில் தமிழர்களிற்கு அவப்பெயர் ஏற்படாமல் எதிர்காலச் சந்ததியினை உருவாக்க முற்படவேண்டும்.

    துரை

    Reply
  • chandran.raja
    chandran.raja

    அநேகமாக எல்லோரும் அரசியல் தஞ்சம். புகலிடம். அகதி. ஐரோபிய போலீசை அதுவும் அவரின் துப்பாக்கியை பறிச்சு சுட்டுகொலை செய்யுமளவுக்கு மூக்குக்கு மேல்வளர்ந்து விட்டது. இந்த பாதிப்பு பாகிஸ்தானியோ இந்தியாவையோ ஒரு இலங்கையைனோ பாதிக்கப்படப் போவதில்லை. ஒட்டுமொத்த அரசியல் தஞ்சக்காரரையும் பாதிக்கப்படப் போகிறது. வரும் காலத்தில் அவர்களுக்கு எதிராக சில சட்டங்கள் கொண்வந்து வெற்றிகரமாக நிறைவேற்றினாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

    இங்கு கவனிக்கப்படவேண்டியது விடுதலையென்ற பேரில் வன்முறையை அங்கீரிப்படுவது முற்றுமுழுதாக மறுத்து ஒருவன் குரல் கொடுக்கத் தயாராகவேண்டும். அங்கு விடுதலைக்கு எந்த எள்ளளவு பயனையும் அளித்துவிடுவதில்லை. மாறாக பயங்கரவாதத்தையே மேலாக விருத்தி செய்கிறது. இது விடுதலைக்கு பதிலாக விடுதலையை பலஆண்டுகாலம் பின்நோக்கி இழுத்து விடுகிறது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இங்கே நம்மவர்கள் சிலரே நமது இளைஞர்கள் செய்யும் தவறுகளை மூடி மறைக்க முயல்வதாலேயே மேலும் மேலும் தவறுகள் அதிகரித்துக் கொண்டு போகின்றது. வங்கி அட்டை மோசடியில் ஆரம்பித்து அது கற்பழிப்பாக தொடர்ந்து இன்று அது கொலையாக வந்து நிற்கின்றது.

    Reply
  • palli
    palli

    இந்த விடயமாக எனது நண்பருடன் பாரிஸ்க்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலே கட்டுரையில் உள்ள அனைத்தையும் சொல்லி அப்படிதான் தமிழர் கதைப்பதாகவும் ஆனால் இதுவரை எந்த செய்தியும் உறுதி செய்யபடவில்லை எனசொன்னார். தமிழர் சிலர் அந்த இடத்தில் தினம் நிற்ப்பதாயும் அதே நேரம் பாகிஸ்தானியர்களும் அதில்(பக்கத்தில் ) கூடுவதாயும் அவர்கள்தான் இப்படி பொலிசார் மற்றும் துறையினருடன் சில வியாபார தொடர்புகள் வைத்துள்ளனர் என்றும் அதனால் அடிக்கடி அவர்கள் அந்த இடத்தில் சண்டைஇட்டு கொண்டதாகவும் சொன்னார். தமிழரை பொறுத மட்டில் தமக்குள் தாமே தான் சண்டையிடுவது வளக்கம் ஆகையால் இந்த விடயத்தை இதுவரை நம்ப முடியவில்லை எனவும் சொன்னார்.

    அதேவேளை புலிக்கும் இதுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. ஏன் தான் சில தளங்கள் தவறான செய்தியை போடுகின்றனர். புலிக்கு பழி சுமத்துவதாக நினைத்து தமிழரையே அவதிக்குள் ஆக்குவது நல்லதல்ல. சம்பவம் நடந்த இடத்து மக்களும் சரி(பிரன்ஸ்) பொலிஸ்ம் சரி புலிகழுடன் மிக நல்லிணக்கதுடன் நடப்பார்களாம். காரணம் அந்த இடத்து மேயர் மிகவும் தமிழர்களை நேசிப்பவராம். இந்த இடத்தில் நடந்துமுடிந்த மாகான சபை தேர்தலில் பல தமிழர் தெரிவு செய்யபட்டது குறிப்படதக்கது எனவும். இங்கே இருக்கும் எமக்கே சரியான நிலைபாடு தெரியாமல் இருக்கும் போது நாமே நமக்கு எதிரியாக சிலதளங்கள் செயல்படுவது கவலைதருவதாகவும் சொன்னார். இப்போ பல்லியின் கருத்து ஒரு இனத்தின் மீதோ அல்லது ஒரு அமைப்பு மீதோ எதாவது பழியை போடுமுன் ஒரு முறைக்கு பலமுறை அந்தவிடயத்தை சரிபார்த்து தீரவிசாரித்து எழுதுவதே ஊடகதர்மம். இதில் பரிஸை சேர்ந்த நண்பர்கள் உன்மை தெரிந்தால், எழுதினால் தவறாக எழுதிய ஊடகங்கள் திருத்திகொள்ள வாய்ப்பாக இருக்கும்.

    Reply
  • s sothy
    s sothy

    தேசம் இணைய தளம் நிர்வாகத்தினருக்கு! மீண்டும் ஒருமுறை -நீங்கள் நடுநிலை ஊடகம் தான் என்பதை நிருபித்துள்ளீர்கள். புலம் பெயர் தேசத்திலும் எம் மக்கள் மத்தியில் சுழன்று அடிக்கும் சில ஊடகங்களின் திருவிளையாடல்கள் மத்தியில் உங்களைப் போன்ற ஊடகதர்மத்தை மதிக்கும் ஒரு சில இணைய தளங்கள் இருப்பதால் தான் மனிதங்கள் இன்னும் பேசப்படுகின்றன.

    புலம் பெயர் தேசத்திலும் எம்மவர் மத்தியில் வன்முறைக்கலாச்சாரம் வளர்ந்த வண்ணம் இருப்பது மிக வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரியது. இதன் அடிப்படைப் பிரச்சனை கண்டுபிடிக்கப்பட்டு சரியான நீதி வழங்கப்பட வேண்டும். இதே நேரம் இந்த வன்முறைச் சம்பவங்களை தங்களுக்கு சாதகமாக பாவிக்கும் சில நபர்களைப் பற்றியும், அவர்கள் மூலம் நெருப்பு வேகத்தில் பரவப்படும் வதந்திகளையும் என்னவென்று சொல்வது.

    எமக்குக் கிட்டிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை பாவித்து நாம் முன்னேறவேண்டிய நாட்டிலிருந்து இங்கும் ஒருசில மொட்டைகடித வித்துவான்கள், தம் விற்பகத்தன்மையை விலாசித் தள்ளுகின்றார்கள்.”பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான்” என்ற விதத்தில் ஒருவர் இந்த சம்பவத்தில் வசமாக மாட்டியுள்ளார் போல் தெரிகின்றது “வித்தி” என்ற பெயரில் பலபேரிற்கு மின் அஞ்சல் அவசர அவசரமாக அனுப்பப்பட்டுள்ளது. அதில் இச் சம்பத்தினை புலிகள் மேற்கொண்டதாகவும் அவர்கள் பணம் சேகரிக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட கைகலப்பினால் பொலிஸாரை கொலை செய்ததாகவும் விபரமான மின்அஞ்சல் எல்லா இணைய தளங்களுக்கு போனதாகவும் தெரிகின்றது; இதே திருவிளையாட்டை பாரிஸிலுள்ள இலங்கை தூதரகத்திற்கும் பிழையாக தகவல் கொடுத்து, அங்குள்ள முக்கியஸ்தர் மூலம் பி.பி.சி சிங்கள சேவைக்கும் பேட்டி கொடுக்க வைத்து தற்போது தலையில் தன்ககுத்தானே முக்காடு போட்டுக் கொண்டார்.

    நானும் மிக மோசமான புலி எதிர்ப்பாளன்தான். அதற்காக இப்படி மணலில் கையிறு திரித்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன? நானும் எல்லா வானொலியும் கேட்கின்றேன் எல்லா வானொலியிலும் மிக கடுமையாக புலியின் அராஜகத்தை அம்பலப்படுத்துகின்றேன். புலியெதிர்ப்பாளர்களுடன் அனுசரனையாக இருக்கின்றேன். ஆனால் ஒரு புலியின் வெற்றிடத்தில் பல புலிக்குணாம்சங்களா? எமது மக்களின் விடுதலையை வியாபாரமாக்கும் வியாபாரிகளுடனா நாம் அரசியல் செய்கின்றோம். எண்ணெய் சட்டிக்குள் பயந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக எம்மக்களின் அவலம் நாதியாக நடுவீதிகளில் நிற்கின்றது. இந்நிலையில் புலம் பெயர் தேசத்திலும் எம் இளம் தலைமுறையினர் எங்கோ போகின்றனரா?

    Reply
  • vtr
    vtr

    மேலே சோதி எழுதிய கருத்து மிகவும் சரியானது. தமிழர்கள் பழகவேண்டிய முதல்வேலை பிழையேன்றால் அதனை விமர்சனம செய்வது. சரியேன்றால் பாராட்டுவது. தனிநலன்களை பின்தள்ளி சமுகத்தை காக்க முன்வரவேண்டும். ……………………………… இப்படியாக தானே பலபெயர்களில் பொய்யான செய்திகளை பரப்புவது தன்னை தானே முட்டாள் ஆக்கிகொள்கிறார். தமிழ் மக்கள் அல்ல

    Reply
  • palli
    palli

    கேடுகெட்ட அரசியல் புலம் பெயர் தமிழரது ஆமா. இதிலேயுமா அரசியல். புலிக்கு சார்பாக சிலர். புலியை மாட்டிவிட பலர். அட பாவிங்களா துரை சொன்னதுபோல் இது எமது சமூகத்தின் சீரழிவு சம்பந்தப்பட்டது. ஒவ்வொரு பெற்றோரும் கவனத்தில் எடுக்க வேண்டியது. அதைவிட்டு இது என்ன கோமாள்தனமான விமர்சனங்கள். புலியை பாதுகாக்க புலி ஆதரவாளர் இருக்கிறார்கள். புலி அழிப்புக்கு உதவ சாதகமாக பல அமைப்புகள் (தவிர்க்க முடியாது என) செயல்படுகின்றன. அப்ப யார்தான் தமிழ் மக்கள் பற்றி கவலைபடுவதோ அல்லது செயல்படுவதோ தெரியவில்லை.

    Reply
  • Mohan
    Mohan

    வித்தி யார்? எதற்காக இதனை பல இணையத்தளங்களுக்கும் அனுப்பினார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் அனுப்பி புலி எதிர்ப்பு இணையத்தளங்களில் இந்தச் செய்தி வருவதற்கு முன்னரே இலங்கையில் வெளிவரும் லங்கா ஈ நியுஸ் என்ற இணையத்தளத்தில் ஞாயிறு இலங்கை நேரப்படி 12.40க்கே இச்செய்தி வெளிவந்துவிட்டது.
    அதனை அப்படியே பிரதி எடுத்தே வித்தி அனுப்பியிருப்பதாக தெரிகிறது. லங்கா ஈ நியுஸ் செய்தியையே வீரகேசரியும் பிரதிபண்ணியது. சிறிலங்கா அரசை மிகக் கடுமையாக விமர்சித்துவரும் லங்கா ஈ நியுஸ் சிறிலங்கா புலனாய்வுப்பிரிவினரின் கவனத்திற்குரிய தளமாக கருதப்படுவது. லசங்க விக்கிரமதுங்கவிற்கு அடுத்த இலக்காக கருதப்படுவது. அது இந்தச் செய்தியை எப்படி பெற்றது என்பதுதான் தெரியவில்லை..

    LTTE starts their battle in France
    (Lankaenews 23 on February 2009, at 12.40p.m.) Four of Sri Lankan pro LTTE supporters have taken in to custody in France due to the killing of French Policemen reports pointed out.Suspected 4 persons wear tiring to collect funds in the area of La Kurunu and policemen had tried to prevent them Four suspect were managed to get policemens pistol and shot him to dead reports revealed.French Police has been conducting further investigations on the murder of their police officer.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இந்த விடயத்தைப் பொறுத்தவரை தமிழர்கள் கைது செய்யப்பட்டது உண்மை என்றே தெரிகின்றது. காரணம் பிரெஞ் பத்திரிகைகளிலும் தமிழர்கள் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதாக அறிய முடிகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் யாரென நிச்சயமாக அவர்கள் அருகில் வாழ்பவர்களுக்குத் தெரியாமலா இருக்கும். அப்படித் தெரிந்தவர்களும் அந்த உண்மையை வெளியிடத் தயங்குகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்.

    Reply
  • palli
    palli

    இந்த ஜனனாயகவாதிகளிலேயே மிகஆபத்தானவர்களும்; செயல்திறன் மிக்கவர்கழும் பாரிசில்தான் உள்ளதாக கேள்விபட்டுள்ளேன். தேசத்துக்கே ஆப்புவைக்க அங்குதானே புள்ளி வைத்தனர். அதன்படி இந்த விடயமும்(பொலிஸ்) பரிஸ் ஜனனாயகவாதிகளின் கைகளில் மாட்டி கற்பழிக்கபடுவது புரிகிறது. இதிலுமா உங்க ஜனனாயகம்??

    Reply
  • பகீ
    பகீ

    பார்த்தீபன் சொல்வதுபோல் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதல்ல இங்கு பிரச்சினை. ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தான். அத்துடன் அந்த உண்மையை வெளியிடத் தயங்குகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம் என கேள்வியும் எழுப்பியுள்ளார். பொலிசாருக்கே இன்னும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். பிரெஞ்சுப்பொலிசார் ஸ்ரீலங்கா பொலிசார் போன்றவர்கள் அல்ல என்றும் அர்த்தம் கொள்ளலாம்!
    அத்துடன் ஏன் பொலிசார் யார் கைது செய்யப்பட்டார்கள் அல்லது அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என சொல்லும்வரை காத்திராமல் ‘அவல்’ மெல்லுவதற்கு அலையக்கூடாது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அப்ப பிரஞ் பொலிசார் பொழுது போவதற்காக கைது செய்துள்ளார்கள் என்று சொல்ல வாறீங்களோ?? அப்ப பிரஞ் பத்திரிகைகளும் சும்மா அவலை மென்று செய்தி போடுகினம் போல.

    பக்கத்திலை நடக்கிற விடயங்களையே சரியாக அறிய முடியாதவர்கள் வன்னியில் இராணுவக் கட்டுப்பாட்டில் எத்தனை கற்பளிப்புகள், எத்தனை கருக்கலைப்புகள் என்பதை மட்டும் சரியாகக் கணக்கு காட்டுறதிலை கில்லாடிங்கள் தான். அடுத்தவன் அவலை மெல்ல முனைந்தால், இவர்கள் அரிசியையே மெல்லுற வல்லுனர்கள் தான்.

    Reply
  • siva
    siva

    மோகன் உங்களுக்கு தெரியாத சில விடயங்களும் உள்ளன. தெரிந்து கொள்ளுங்கள்.”வித்தி” என்ற மர்ம மனிதர் தான் சில காலமாக மிக தீவிரமாக இலங்கை அரசு சார்பான விடயங்களுக்கு முண்டு கொடுப்பவர் என்பது தெளிவாகியுள்ளது. இந்த பாரீஸ் செய்தியை சென்ற ஞாயிறு காலையிலிருந்தே மிக விரைவாக கையாண்டுள்ளார். அதாவது, பாரீஸிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கும் திரிவு படுத்தி செய்தியைக் கொடுத்தது மட்டுமல்லாமல், கே.டி. ஆரினூடாக இலங்கைப் பத்திரிகையினூடாகவும் இந்த திரிபுபடுத்திய செய்தியை பரவ விட்டுள்ளார். இந்த “வித்தி” பற்றிய மேலதிக தகவல்களை அறிய வேண்டுமானால் “யாழ் இணையத்தில்” கண்டுகொள்ளுங்கள். நானும் யாழ் இணையம் பார்ப்பதில்லை தான். ஆனால் எனது நண்பர் ஒருவர் இப் “பொலிஸாரின் கொலை” பற்றி இவ் இணையத்தில் வந்ததாக கூறக்கேட்டதில் அதைப் பார்க்கப் போய் மர்ம மனிதனின் சாகசங்களை அறிந்து கொண்டேன். இவ் மர்ம மனிதனின் செயற்பாடு தொடருமென்றால் யாழ் இணையத்திற்குத் தான் கொண்டாட்டம். “கிணறு வெட்டப் புதம் புறப்பட்ட கதை” யாக மாறிவிட்டது போலும்.

    இப்படித்தான் வெளிநாட்டில் ஜனநாயகவாதிகள் என கூறிக்கொள்ளும் சில பேர், புலியை அழிப்பதாக செயற்பட்டு இலங்கை அரசின் பேரினவாதத்திற்கு விலை போய்யுள்ளார்கள். இப்படி விலை போனவர்களின் பின்னாலேயே இந்த விபரிதங்கள் புரியாமலேயே தெரிந்தோ-தெரியாமலோ சில பேர். ஆனால் இன்னும் சிலர் எல்லா உண்மைகள் தெரிந்தும் -பிழைகள் தெரிந்தும் தனிப்பட்ட நட்புக்களுக்காக அல்லது சில தேவைகளுக்காக வித்தியைப் போன்றோரை பாதுகாப்பது அல்லது மற்றவர்களுடன் ஒப்பிட்டு தராசு போட்டு நியாயப்படுத்துவதுமாக இபபடி எத்தனை விதமான ஜனநாயகஸ்டுக்கள்.

    மக்கள் அங்கு கணத்திற்கு கணம் அழிந்து கொண்டிருக்க-இங்கும் அங்குமிருந்து இப்படியான ஜனநாயகஸ்டுக்கள் பண்ணும் வேலை கொஞ்ச நஞ்சமா? இவையெயல்லாம் மோகனைப் போன்றோரிற்கு புரிகின்றதோ தெரியவில்லை. ஆனால் பல்லியை போன்ற நியாய தர்மத்தை சீர் தூக்கி பார்க்கும் ஒருசிலருக்காவது புரியுமென நினைக்கின்றேன். நானும் சில காலமாக இந்த “ஜனநாயகஸ்ட்டு”க்களால் மனம் புழுங்கி ஒதுங்கியிருந்தேன். ஆயினும் அடிக்கடி பல்லி போல் எட்டிப்பார்க்காவிட்டாலும இடையிடையே நத்தை போல் ஊர வேண்டியுள்ளது

    ஒரு ஜனநாயக நாடான பிரான்ஸில் நடந்த உண்மை நிகழ்விற்கே இந்த உல்டா விளையாட்டெல்லாம் நடப்பதென்றால் இதுவரை என்ன நடந்திருக்கின்றதென நிறையவே சிந்திக்க வேண்டியிருக்கின்றது. முக்கியமாக எம்மை சுற்றியிருந்தவர்கள் எம்மை மிக பயன்படுத்தி முட்டாளாக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகின்றது. பல பேர் சொன்ன அனுபவம் இப்போது அனுபவத்தில் நிறையவே புரிவது போல் தெரிகின்றது

    Reply