காஸாவைக் கட்டியெழுப்ப அமெரிக்கா 900 மில்லியன் டொலர் நிதியுதவி

hamas.jpgகாஸாவைப் புனரமைக்க 900 மில்லியன் அமெரிக்க டொலரை உதவியாக அமெரிக்கா வழங்கவுள்ளது.  மார்ச் மாதம் 2ம் திகதி எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்ப மாகவுள்ள காஸாவைப் புனரமைக்கும் மாநாட்டில் பங்கேற்கவுள்ள அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இந்த நிதி உதவிபற்றி அறிவிப்பார். ஆனால் இது எப்போது வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. இதற்கான அனுமதி காங்கிரஸில் கிடைத்தவுடன் இந்நிதி பற்றிய ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

காஸாவைப் புனரமைக்க வழங்கப்படவுள்ள இந்நிதி ஹமாஸிடம் கையளிக்கப்பட மாட்டாது. அமெரிக்காவுக்கும் ஹமாஸ¤க்குமிடையே உறவுகள் இல்லை. இதனால் அமெரிக்க சார்பு அமைப்பிடம் அல்லது அரசிடம் இது கையளிக்கப்படலாம். காஸா புனரமைப்பு மாநாட்டில் பங்கேற்கவரும் ஹிலாரி கிளிண்டன், இஸ்ரேல் மேற்குக் கரைக்கும் விஜயம் செய்யவுள்ளார். ஹிலாரி கிளிண்டனின் விஜயத்தை இஸ்ரேல் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அங்கு புதிய அரசாங்கம் இதுவரை அமைக்கப்படாத போதும் பெரும்பாலும் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் பென்ஜமின் நெதன்யாஹு உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் ஹிலாரி கிளிண்டன் சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் புதிய அரசாங்கத்தில் வெளிநாட்டமைச்சரான ஹிலாரி கிளிண்டன் மத்திய கிழக்கிற்கு செய்யும் முதல் விஜயம் இதுவாகும். புஷ்ஷின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அரபு அமைச்சர்கள் மாநாடு அனோபெலிஸ் மாநாடுகள் தோல்வியுற்ற பின்னர் மீண்டும் மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் இந் நிதியுதவி உள்ளது. காஸாவில் கட்டுமானப் பணிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.  காஸா மீது 22 நாட்களாக இஸ்ரேல் தொடுத்த தாக்குதல்களை அமெரிக்கா கண்டுகொள்ளாமல் நடந்தது.

இதனால் அரபுலகின் அதிருப்தியை அமெரிக்கா ஈட்டிக்கொண்டமை தெரிந்ததே. யுத்தம் நடந்த காலப் பகுதியில் (2008 டிசம்பர்) ஒபாமா பதவி யேற்காதபோதும் காஸாவில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியானதைக் கண்டிக்க உடனடியாக முன்வரவில்லை. பின்னர் அரபுலகில் கொதிப்பும், ஆத்திரமும் அதிகரிக்கவே அப்பாவிகள் கொல்லப்படுவது கவலையளிப்பதாகச் சொன்னார். அரபுலகிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நிதியை அமெரிக்கா வழங்கவுள்ளபோதும் காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பிடம் இந்நிதி வழங்கப்படமாட்டாது. மேற்குக் கரைக்குச் செல்லவுள்ள ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதி மஃமூத் அப்பாஸையும் சந்திப்பார். இஸ்ரேல் மேற்கு க்கரை மற்றும் அரபு நாடுகளின் மேற்பார்வையில் காஸா புனரமைக்கப்படலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *