இலங்கை நிலைவரம்; அமெரிக்க செனட் குழு விசாரணையில் சிபார்சுகள்

u-s-a-flag.jpgஇலங் கையில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான அவலம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச்சபை விசேட அமர்வைக் கூட்டவேண்டும் என்றும் கொழும்பு அரசாங்கத்துக்கு பொருளாதார உதவி வழங்கும் விடயத்தில் சர்வதேச உதவிவழங்கும் சமூகம் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களுக்குப் பொறுப்பான செனட்குழுவில் இலங்கை நிலைவரம் தொடர்பாக சாட்சியமளித்தவர்கள் சிபார்சுகளை முன்வைத்துள்ளனர். அமெரிக்க செனட் குழுவானது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், செனட்குழு விசாரணையில் சாட்சியமளித்தவர்கள் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கடும் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.  இருதரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்படுவதாக செனட்டின் வெளியுறவு விவகாரக்குழுவிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் அன்னா நெய்ஸ்ரற் தெரிவித்திருக்கிறார்.

அகதிகளைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வலயமென அழைக்கப்பட்ட பகுதிகளில் மோசமான நிலைமை காணப்படுவதாக அன்னா கூறியுள்ளார். “பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் மக்களிடமிருந்து எமக்கு விபரமான விடயங்கள் கிடைத்துள்ளன. இலங்கைப்படைகளின் ஷெல் தாக்குதல்களால் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டிருப்பதை அந்த விபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது’ என்றும் அன்னா கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளையும் அன்னா கடுமையாக விமர்சித்திருக்கிறார். அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்களை வேண்டுமென்றே புலிகள் தடுத்துவைத்திருப்பதாகவும் வெளியேறும் பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பல சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியிருப்பதாகவும் அன்னா கூறியுள்ளார். தாக்குதல்களிலிருந்து தமது நிலைகளைப் பாதுகாப்பதற்காக புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்களையும் தாங்கள் ஆவணப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சாட்சியமளித்த ஏனையவர்கள் இலங்கை அரசின் தாக்குதல் தொடர்பாக தமது இணக்கப்பாடின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழர்கள் பலர் கடத்தப்பட்டிருப்பதுடன் இலகுவாக காணாமல் போயுள்ளனர். அரசிலுள்ள சக்திகளாலேயே இந்தத்தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது அதிகளவுக்கு சரியாக இருப்பதையிட்டு கூறுவது கவலையான விடயமாகும். தண்டனையிலிருந்தும் விடுபாடுபெறும் உரிமை முழுமையாக இருப்பதாக தோன்றுகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக எவரும், விசாரணை செய்யப்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரே லன்ஸ் ரெட் கூறியுள்ளார். பத்திரிகையாளர்களும் தாக்குதல்களுக்குள்ளாக்கப்படுவது குறித்து லன்ஸ் ரெட் தெரிவித்துள்ளார். இந்த விடயம் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் பொப்டயற்சினாலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, இலங்கையில் எதிர்காலத்தை வடிவமைப்பதில் சர்வதேச சமூகம் முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும் என்று லன்ஸ்ரெட் கூறியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கான பொருளாதார உதவிகள் தொடர்பாக சர்வதேச உதவிவழங்கும் அமைப்புகள் நிபந்தனைகளை விதிக்கலாம் என்ற சிபார்சையும் லன்ஸ்ரெட் முன்வைத்துள்ளார். இதேவேளை, இலங்கையின் மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வுகாண்பது தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புச் சபை விசேட அமர்வொன்றை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரற் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *