வாடகைக் கென அமர்த்தப்பட்டு பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட வாகனங்கள் சிலவற்றிற்கு போலியான உரிமைப்பத்திரங்களை தயாரித்து அவ்வாகனங்களை விற்பனை செய்துவந்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாரஹேன்பிட்டியவைச் சேர்ந்த உபுல் விஜயரட்ண, வஜிர கிசாந்த, எஸ்.லியனகே ஆகியோரையே பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.
எல்லைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.பண்டார தலைமையிலான குழுவினர் மேற்கண்ட மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளின் போது திடுக்கிடும் பல விடயங்கள் தெரியவந்துள்ளன.
கொழும்புப் பகுதியிலிருந்து பதுளை மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும் வாகனங்களுக்கு போலி உரிமைப்பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவ்வகையில் விற்பனை செய்யப்பட்ட நான்கு வாகனங்களையும் போலி உரிமைப்பத்திரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கணினி இயந்திரத் தொகுதியொன்றையும் கையடக்கத் தொலைபேசிகள் நான்கினையும் மற்றும் போலி உரிமைப்பத்திரங்கள் தொடர்பான பெருமளவிலான ஆவணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் இளைஞர், யுவதிகள் பலரை தொழில் வாய்ப்புகருதி ஜப்பான் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாக்களைப் பெற்று மோசடி செய்தவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் எச்.என்.பி.அம்பன்வெல கூறினார்.