உலக சுகாதார நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள “பசுமையான நகராக்க திட்டத்தை’ நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் படி எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டிடங்கள் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
மேலும் உலகின் நகரங்கள் அல்லாத பகுதிகளில் சுகாதாரத்துக்கு கேடான வகையில் நிர்மாணிக்கப்படும் கட்டிடத் தொகுதிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவனம் செலுத்திவருகிறது.
இலங்கையில் இவ்வாறான கட்டிட நிர்மாணங்களுக்கு தடைகள் இல்லாத நிலைமை காணப்படுவதோடு இதற்கெதிராக மிகக் குறைவான தண்டனைகள் வழங்கப்படுவதால் இது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லையென சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் இவ்வாறு நிர்மாணிக்கப்படும் அலுவலகக் கட்டிடங்களில் போதிய காற்றோட்ட வசதிகளோ,சூரிய வெளிச்சமோ கிடைப்பதில்லை. அத்துடன் அலுவலக ஊழியர்கள் செயற்கையான வெளிச்சம் மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணியாற்ற நிர்பந்திக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகளால் நீரிழிவு, இருதயநோய், டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தார். நகர மற்றும் புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து பசுமை கருத்திட்டத்தை சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.