தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லை -எஸ்.பி. திசாநாயக்க

sbdisanayakka.jpgதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மகிந்த ராஜபக்ஷ அரசிடம் எந்தத் தீர்வுத் திட்டமும் இல்லையெனத் தெரிவித்துள்ள ஐ.தே.க. வின் தேசிய அமைப்பாளரான எஸ்.பி. திசாநாயக்க, இனவாதம், பயங்கரவாதமென எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியுமெனவும் கேள்வியெழுப்பினார். பலகொல்ல, கெங்கல்ல, பள்ளேகல பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில், மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எஸ்.பி. திசாநாயக்க மேலும் தனது உரையில்;

“இந்த அரசாங்கம் இன்னும் சில காலத்திற்கு மட்டுமே. இவர்களிடம் எந்த அபிவிருத்தி திட்டமும் இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, புதிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எதுவும் இல்லை. விவசாயத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய கைத்தொழில்கள் எவையும் உருவாக்கப்படவில்லை. சம்பள உயர்வு இல்லை. வாழ்க்கைச் செலவு கூடிச் செல்கிறது. இனவாதம், பயங்கரவாதம் என்று எத்தனை நாளைக்கு இவர்கள் கூறமுடியும்? சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசிடம் உரிய தீர்வு கிடைக்காது. இந்த அரசு மீது சிறுபான்மையினர் நம்பிக்கை இழந்துள்ளனர்.

மலையகத்தில் தொண்டமான், சந்திரசேகரன், ஐ.ம.சு.மு. ஆகிய பிரபல அரசியல்வாதிகளையும் கட்சியினையும் மக்கள் புறக்கணித்துள்ளனர். அந்த மக்கள் ஐ.தே.க.வுக்கே வாக்களித்தனர். இந்த நன்றியை ஐ.தே.கட்சியோ, அதன் முதலமைச்சர் வேட்பாளராக அதிக தெரிவு வாக்குகளை பெற்ற நானோ மறக்கமாட்டோம். உங்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த நாட்டினை விடுதலைசெய்து மீண்டும் சுபீட்சமாக சகலரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடிய, சுமைகள் குறைந்த ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவோம்.

இந்த அரசாங்கத்தினை மாற்றி புதிய அரசாங்கத்தினை, ஐ.தே.க.யினை ஆட்சிபீடமேற்றும் முயற்சியில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *