பிராந்தியத்தில் எந்தவொரு பிரஜையும் பயங்கரவாதத்தால் பாதிக்க இடமளிக்கக் கூடாது – ஜனாதிபதி

saarc.jpgதெற்கா சிய பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் வன்முறைகளுக்கு எந்தவொரு தனிப் பிரஜயையேனும் பாதிக்கவிடக் கூடாதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எனவே, இந்த நெருக்கடிக்கு ஏதுவாக வெவ்வேறாகவும், கூட்டாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலிருந்து நாம் தவிர்த்திருக்க முடியாதெனவும் கூறினார்.

தெற்காசிய பிராந்திய நாடுகளின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு நேற்றுக் காலை (27) 10 மணிக்கு கொழும்பு சிலோன் கொன்ரினன்றல் ஹோட்டலில் ஆரம்பமானது. அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்தியத்திற்கு பயங்கரவாதமும், உலக பொருளாதார நெருக்கடியும் இரண்டு பாரிய சவால்களாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, பிராந்தியத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

“உலக பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மையானது, எமது பிராந்தியத்திற்குப் பயங்கரவாதத்தால் ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குச் சமமானதாகும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையின் தாக்கத்தை சம காலத்திலோ அல்லது சற்றுக் காலந் தாழ்த்தியோ அனுபவிக்க நேரிடும். எனவே, அந்தந்த நாடுகள் சில முன்னேற்பாடான கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. நாம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். உறுதியான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அது எமது பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நமது பிராந்தியத்தில் பொருளாதாரம் வலுவாகப் பேணப்படுகிறது என்றாலும் முற்றிலும் ஸ்திரமடைந்துவிட்டது என்று கருதிவிட முடியாது.

15 வது சார்க் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது பற்றிய மீளாய்வினை செய்வதற்காக சார்க் செயலாளர் நாயகமும், உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் எமக்கு பெறுமதிமிக்க ஒரு வாய்ப்பினைத் தந்துள்ளார்கள்.

தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பு உயர்ந்த மட்டத்தில் உள்ளது. கடந்த சார்க் உச்சி மாநாட்டைப் போன்று எட்டு உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதில் பற்றுறுதியுடன் உள்ளன. மிகவும் விரிவான மட்டத்தில் பிராந்திய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பக்கூடிய வல்லமை எமது மக்களிடம் உண்டு. ஆனால், அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறியிருக்கிறோம்.

தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான அபிவிருத்திக்குத் தேவையான வல்லமை நிறைந்த மக்கள் வாழும் கிராமப்புறங்களை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. வலுசக்தி, சுற்றாடல், நீர்வளம், வறுமையொழிப்பு, தகவல் தொடர்பாடல் அபிவிருத்தி, விஞ்ஞான தொழில் நுட்பம், சுற்றுலாத்துறை, கல்வி, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கடந்த உச்சி மாநாட்டில் நாம் கவனம் செலுத்தினோம்.

சார்க் உணவு வங்கியை ஸ்தாபித்தல், கொழும்பு பிரகடனத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவ்வாறு இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். நாம் வாழ்கின்ற சமூகத்தில், நகரத்தில், கிராமப்புறங்கள் உள்ளிட்ட பகுதிகளில் எமது மக்கள் அச்சமும் பீதியும் இன்றி வாழக்கூடிய சூழலைத் தோற்றுவிக்க வேண்டும்.

ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தாம் இங்கு குறிப்பிட்டுக் கூறிய இரண்டு சவால்களையும் எதிர்கொள்வதற்கான செயற்பாடுகளைப் பரிந்துரைப்பதுடன், அதனை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு சார்க் வெளிவிவகார அமைச்சர்களிடம் கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

நேற்று ஆரம்பமான சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தலைமை தாங்கினார். அவர் வரவேற்புரை நிகழ்த்தியுடன், செயலாளர் நாயகம் கலாநிதி  ஷர்மாவும் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார்.

நேற்று ஆரம்பமான நிகழ்வில், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நோபாளம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும், இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதி வெளிவிவகார அமைச்சர்களும் கலந்து கொண்டனர். சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது அமர்வு இன்று (28) மாலை நிறைவடைவதுடன் மேற்கொண்ட தீர்மானங்களும் அறிவிக்கப்படும்.

saarc.jpg

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *