நிவாரணக் கிராமங்களில் சின்னம்மையினால் பீடிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க தனியான ஆஸ்பத்திரி

trico.gifவவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத் தங்கல் முகாம்களில் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பூவரசன் குளம் அரசினர் வைத்தியசாலை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரை அங்கு சுமார் 143 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துகள், தாதியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த பொது மக்கள் பல நாட்களாக காட்டுக்குள் ஒளிந்தும், புழுதியில் படுத்துறங்கியும், நீராட வசதியின்றியுமே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்தனர். இதனால், அவர்களுக்கு சின்னம்மை வைரஸ் தொற்றியுள்ளது. முகாம்களுக்குள் வந்தவுடனேயே சின்னம்மை வைரஸ் தலைதூக்கியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இவர்களை முகாம்களில் வைத்திருக்காமல் வேறுபடுத்தி வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், சின்னம்மையினால் பாதிக்கப்பட்ட 143 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களை தங்கவைக்க தற்காலிக கொட்டகைகளை அமைக்க மாவட்ட செயலகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்னி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் வசித்தவர்கள்.

வவுனியாவில் பகலிலும் இரவிலும் கடும் வெப்பமான காலநிலை உள்ளது. கூடாரங்களிலும், தகர கொட்டகையிலும் தங்கியுள்ள மக்களே சின்னம்மை நோய்க்கு இலக்காகிவருகின்றனர் எனவும் செட்டிகுளம் வைத்தியசாலையிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ள மருத்துவ குழுவினர் நிவாரணக் கிராமங்களில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *