நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த போதே இதளை ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் பேசியுள்ள அவர் ,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இது தற்காலிகமானது. இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதேநேரம், இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு. ஆனால் பொறுப்பான அதிகாரிகளால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. 2019ஆம் ஆண்டு பதவியேற்றவுடன், இரசாயனமற்ற உரத்திற்கு மாறுவதற்கான தனது முடிவை ஜனாதிபதி அறிவித்ததார். ஆனால் அதிகாரிகள் அதைத் தொடராததால் அதைத் தவறவிட்டுள்ளனர்.
இரசாயன உரத்திற்கு மாறுவதற்கான செயன்முறை உள்ளது என்பது உண்மைதான். அது 10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படாததால் இறுதியாக ஜனாதிபதி கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிட்டது. எனவே, தலைவர்கள் தங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.