“யாழ்ப்பாண மீனவரை இலங்கை கடற்படையே கொலை செய்துள்ளது. சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம்.” – சிவாஜிலிங்கம் காட்டம் !

யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் அவர் பயணித்த படகு கவிழ்ந்தமையால் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று(11) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மாதகல் சம்மாந்துறையைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பில் 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் குறித்த நபரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகுமீது கடற்படையினரின் படகுடன் மோதியே விபத்து நேர்ந்துள்ளதாக குறித்த பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எவ்வாறாயினும் கடற்படையினரின் படகுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதென இளவாழை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் , இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது.

இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர்.

மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும்,ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து பார்வையிடவில்லை.

பதில் நீதவானை அமர்த்திவிட்டு இங்கு வர முடியாத நிலையில் நீதித்துறை உள்ளது. எங்களை நாமே ஆளும் ஆட்சி முறை வேண்டும். இந்த கொலையில் யாரும் சாட்சி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சாட்சி சொல்பவர்களும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *