“இலங்கையை மீட்க எங்களால் முடியும்.” – வெளிநாடுகளுடனும் தொடர்புகளுள்ளதாக கூட்டமைப்பு அறிவிப்பு !

“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுதாவளை அன்பின் வீடு மற்றும் குறித்த இல்லத்தில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு உதவி திட்டங்களை வழங்கி வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“உண்மையிலேயே இந்த நாட்டில் விசேட தேவையுடையவர்கள் மாத்திரமல்ல இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிர்வரும் காலங்களில் நாம் உலர் உணவுப்பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டிய கட்டாயம் வரும் என்பது நாட்டிலுள்ள செய்திகளை பார்க்கும் போது அறியக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டிலே இடம்பெறும் அனைத்து விடயங்களையும் பார்க்கின்ற போது, மிகவும் ஆபத்தான ஒரு காலம் எதிர்காலத்தில் வரும் என்பதை அறியக்கூடியதாக இருகின்றது. இலங்கைக்கு சொந்தமான தங்கத்தினை விற்பனை செய்துள்ளனர். அதே நேரத்தில் களவுகளை எடுத்ததாக கூறி, சில நிறுவனங்களின் முதலாளிகளை கைது செய்கின்றனர்.

மின்சார சபை கூறுகின்றது நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும் விதம் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. எனினும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்படாது என தெரிவிக்கின்றார். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்களே கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாகும் எண்ணத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டே அரசாங்கத்தினை விமர்சிக்கின்றார்.

எனினும் அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்னும் அமைச்சுப்பதவிகளை வகித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாவே செயற்படுகின்றனர். அவர்கள் அரசாங்கத்தினை விட்டு வெளியே வந்து அரசாங்கத்தினை விமர்சித்தால் நாங்களும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் ஏற்படப்போகும் பஞ்சத்தில் இருந்து நாட்டை எவ்வாறு மீட்கலாம், மக்களை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சில திட்டங்கள் உள்ளன.

அதுகுறித்து நாங்கள் பலதடவைகள் குறிப்பிட்டிருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாம் பல நாடுகளுடன் தொடர்புடையவர்கள். அந்த நாடுகளின் உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு எங்களால் எடுத்துக் கொடுக்க முடியும். எங்களுடைய பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்குமாக இருந்தால். “ எனக் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *