தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நேர்ந்த சோதனை – உலகின் முதல் நிலை வீரரை திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா !

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனால் அவர் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் நடப்பு சாம்பியனான அவர் நாளை திட்டமிட்டபடி விளையாட முடியாது.

34 வயது ஜோகோவிச் டென்னிஸில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். ரோஜர் ஃபெடரர் மற்றும் ரஃபேல் நடால் மற்றும் நோவாக் ஜோகோவிச் ஆகியோர் அதிகபட்ச ஆண்கள் சிங்கிள் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களாக உள்ளனர்.

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால் மற்ற இருவரையும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அதிக தனிநபர் கிராண்ட் ஸ்லாம் வென்ற ஆண் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பார் நோவாக் ஜோகோவிச்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் அவருக்கு அளிக்கப்பட்ட விசா குடிவரவுத் துறையால் ரத்து செய்யப்பட்டது.

வெளிநாட்டவர்கள் அவுஸ்திரேலியாவில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத ஒருவருக்கு விசா கொடுத்ததற்கு அவுஸ்திரேலியாவிலும் பரவலான எதிர்ப்பு எழுந்தது.

விசா ரத்து செய்யப்பட்டபின் நோவாக் ஜோகோவிச் தடுப்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடிய நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார்.

எனினும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலிய குடிவரவுத் துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சின் விசாவை மீண்டும் வெள்ளியன்று ரத்து செய்தார். அவர் அந்நாட்டில் இருப்பது தடுப்பூசிக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதை எதிர்த்து ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உச்சபட்ச நீதிமன்றங்களின் ஒன்றான, மெல்பர்னில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தை நாடினார். டென்னிஸ் வீரர் தரப்பில் 268 பக்க பிரமாண பத்திரமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, ஜோகோவிச் தடுப்பூசிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தரப்பு வாதிட்டது. ஆனால், இதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக ஜோகோவிச் தரப்பு தனது வாதத்தை முன்வைத்தது.

அரசு மற்றும் ஜோகோவிச் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *