பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு தங்கு தடையின்றி நஷ்டஈடு வழங்கப்படும் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

risard.jpgஅரசாங்கம் பயங்கரவாத பிரச்சினைக்கு முகம்கொடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்குரிய நஷ்ட ஈடுகளை எவ்வித தங்குதடையுமின்றி வழங்கி வருவதாக மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு புதன்கிழமை மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் இடம்பெற்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளை வழங்கினார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் 58 பேருக்கும் சொத்துகளை இழந்த 20 பேருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்குமாக மூன்று மில்லியன் ரூபாவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சொத்துகளை இழந்த அரச ஊழியர்களுக்காக இரண்டு மில்லியன் ரூபாவும் மொத்தமாக வழங்கப்பட்டது.

இங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில்; கடந்த காலங்களில் மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமான நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை எந்த அமைச்சிலும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் எவ்வித தாமதமுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார்.

ஜனாதிபதியினதும் அவரது ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவினதும் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் எனக்கு அதிகமாக கிடைத்து வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்படுபவர்கள் உடனுக்குடன் தமது நஷ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *