“ நான் தமிழன். என்னிடம் நாடு வராது.” – மனோ கணேசன்

“சஜித் பிரேமதாசவும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்த்தால் மட்டுமே  இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் .” என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது படையணியின் மாநாடு கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் கலந்துகொள்ள கூடாது என கட்சியினால் அறிவறுத்தல் வழங்கப்பட்டடிருந்தது.  எனினும் நேற்றைய தினம் மனோ கணேசன், தலதா அத்துக்கோரளை மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த விடயம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்,

நான் மனோ கணேசன். நான் ஒரு யதார்த்தவாதி. கொள்கைக்கும், நடைமுறைக்கும் இடையில் சமநிலை பயணம் செய்பவன். நான், இருப்பதை விட்டு விட்டு, பறப்பதை பிடிக்க அலைபவன் அல்ல. அன்றும், இன்றும், சமீப எதிர்காலம் வரைக்கும் இந்நாட்டில் பெரும்பான்மை ஆட்சிதான்.

அதற்குள் நாம் எப்படி எமது காரியங்களை செய்வது என்பதை நான், முயன்று, செய்து வருகிறேன். ஏதோ, நாட்டில் நான்தான் சர்வ அதிகாரம் கொண்ட அரச தலைவராக இருந்தது – இருப்பது போல் என்னிடம் கேள்வி கேட்பவர்களை கண்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.

முடியுமானால், என்னிடம் நாட்டை கொடுத்து பாருங்கள். மாற்றி காட்டுகிறேன். ஆனால், நான் தமிழன். என்னிடம் நாடு வராது. அதுதான் யதார்த்தம். நான் சுதந்திரமாக முடிவுகளை தைரியமாக எடுப்பதால்தான் எனக்கு எங்கும் அழைப்பு இருக்கிறது. எந்தவொரு பெரும்பான்மை கட்சிகள் – அரசியல்வாதிகள் நடத்தும் கலந்துரையாடல்களிலும் நான் கலந்துக்கொள்வேன்.

ஒருகாலத்தில் அதிகார பரலாக்கலுக்கு எதிராக இருந்த நண்பர் சம்பிக்க ரணவக்க இன்று அதுபற்றி சாதகமாக பேசுகிறார். அதுபற்றி பொது முடிவு எடுக்க வேண்டும் என்று என் பெயரை குறிப்பிட்டு கூறுகிறார். அது எமது வெற்றி. நாம் முன்னோக்கி செல்வோம். சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது. அதன்மூலமே இந்த காட்டாட்சியை வீழ்த்த முடியும் என நம்புகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, எவருக்கும் எடுபிடி வேலை செய்யாத, ஒரு பலமான சுதந்திரமான கட்சி. இது காட்சி அல்ல, மக்களின் கட்சி. அதை இன்னமும் பலமாக நாம் வளர்ப்போம். அது ஒன்றே எமது பலம். அதன் மூலமே எம்மால் சாதிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *