உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழப்பு

2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.

பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.

இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு.பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *