பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச உடன்பாடு அவசியமென்கிறார் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா

l-yaappa-abayawardana.jpg பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதற்கு சர்வதேச உடன்பாடொன்று எட்டப் படவேண்டும் என்பதையே லாஹ¤ர் தாக்குதல் உணர்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் பூரணமான விசாரணைகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் கோருமானால் விசாரணைகளுக்கு எமது அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் எமது அணியை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்திய பின்னரே அது தொடர்பில் முடிவு செய்யப்படும்.

லாஹ¤ரில் இடம் பெற்ற சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் அது தொடர்பில் சகல ஆலோசனைகளையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கினார். இதன்படி, இலங்கை வீரர்கள் உடனடியாக திரும்பி அழைக்கப்பட்டனர்.

1996 உலகக் கிண்ணப் போட்டி இலங்கையில் நடைபெற்ற போது பல நாடுகள் இங்கு வரமறுத்தன. அந்த சமயம் பாகிஸ்தானும் இந்தியாவுமே இங்கு விளையாட முன்வந்தன. வலய நாடுகளிடையே புரிந்துணர்வை கட்டியெழுப்பும் வகையிலே இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்றது. உச்சப் பாதுகாப்பு வழங்குவதாக பாகிஸ்தான் வாக்களித்தாலும் பாகிஸ்தான் வழங்கிய பாதுகாப்பில் குறைபாடு இருந்தது.

விளையாட்டுத்துறையில் பயங்கரவாதம் நுழைய முடியாது. பயங்கரவாதத்தை ஒழிக்க சகல தரப்பும் ஒன்று பட வேண்டும். அதனையே இந்த தாக்குதல் உணர்த்தியுள்ளது.

இந்தத் தாக்குதலை எந்த ஆயுதக் குழு செய்தது என இதுவரை பாகிஸ்தான் அரசு வெளியிடவில்லை. ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது உள்நாட்டு மோதல் காரணமாகவோ இந்தத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருக்கலாம். இந்த சம்பவத்தினால் காயமடைந்த இலங்கை அணி வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *