பொதுஜனபெரமுனவின் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் தன்னை தாக்கியதாக சட்டம் பயிலும் மாணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குளியாப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றின் முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட மாணவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
முதலில் நாடாளுமன்ற உறுப்பினர் எனது நண்பனை தாக்கினார் பின்னர் என்னை தாக்கினார் அவரது பாதுகாப்புபிரிவை சேர்ந்தவர்களும் என்னை தாக்கினார்கள் என தாக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.
நாரம்மல கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது அதன்போது அந்த பகுதி மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது,அங்கு காணப்பட்ட நபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது கல்தாக்குதலை மேற்கொண்டுள்ளார் –அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் தாக்கியதாக தங்களிற்கு வேறு சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்கப்பட்ட ஐவர் குளியாப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தன்னையும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் சிலர் கற்களால் தாக்கினார்கள் என தெரிவித்துள்ளார்.